சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற சந்திரசேகர ஆசாத் தனது பதினான்காவது வயதில் காந்தி துவக்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். அகிம்சைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நீதிபதி ஆசாத்திடம் உன் பெயர் என்ன என்று கேட்டபோது விடுதலை வேட்கை கொண்ட ஆசாத் "என் பெயர் ஆசாத்" , என் தகப்பனார் பெயர் "சுதந்திரம்" என்று பதிலளித்தார். ஆச்சரியப்பட்ட நீதிபதி "நீ எந்த ஊர்?" என்று கேட்டபோது "எனது ஊர் சிறைச்சாலை" எனப் பதிலளித்தார்.
வெள்ளைக்கார I.C.S.அதிகாரியான நீதிபதி சிறுவனின் பதிலை கேட்டு கடுங் கோபம் கொண்டு 15 பிரம்படி கொடுக்குமாறு உத்தரவிட்டார். பிரம்படி கொடுப்பதற்கு முன்னால் போலீசார் ஆசாத்தை பிடித்துக் கயிற்றால் கட்டத் தொடங்கிய போது ஆசாத் திமிறியவாறு உரத்த குரலில் நீதிபதியைப் பார்த்து எதற்காக என்னை கயிற்றால் கட்டுகிறீர்கள்? நான் சும்மா நிற்கிறேன்; நீங்கள் பிரம்பால் அடியுங்கள் என்று சத்தம் போட்டு சொன்னார். போலீஸ்காரன் பிரம்பால் ஆசாத்தின் உடல் முழுவதும் 15 அடி அடித்தான். ஒவ்வொரு அடி விழுகின்ற போதும் ஆசாத் "வந்தே மாதரம் ; காந்திஜிக்கு ஜே" என்று உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினார். அவரது மென்மையான உடல் முழுவதும் ரத்த விளாறுகளாகிவிட்டது. அன்று முதல் புரட்சி காரராக உருமாறினார். விரைவில் புரட்சிக் கட்சியில் உறுப்பினரானார்.
காகோரி ரயில் கொள்ளை 1925ஆம் ஆண்டில் நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நடுங்க வைத்த கொள்ளை அது. லக்னோ நகருக்கு மேற்கே இருந்த ஒரு சிறிய ரயில்வே ஸ்டேஷன். அங்குதான் ரயிலை நிறுத்தி அரசாங்க கஜானா பணம் கொள்ளையிடப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் இந்த ரயில் கொள்ளை ஒரு அத்தியாயமே ஆகும். பாசஞ்சர் ரயில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறிய அஷ்பா குல்லா கான், சசீந்திர நாத், ராஜேந்திர லாகிரி ஆகிய மூன்று இளைஞர்கள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ராம் பிரசாத் பிஸ்மில், கேசவ் சக்கரவர்த்தி, முராரி லால், முகுந்தலால், சந்திரசேகர ஆசாத், பன்வாரிலால்,மன்மதநாத் குப்தா ஆகியோர் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறினர். பின்பு எஞ்சின் டிரைவரையும், கார்டையும் அசைய விடாமல் செய்தனர். ரயிலிலிருந்து கஜானா பெட்டியை மட்டுமே கொள்ளையிட போவதாகவும் பயணம் செய்யும் மற்ற எவருக்கும் எவ்வித தீங்கும் செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்தனர். பாதுகாப்பிற்காக இரண்டு தோழர்கள் துப்பாக்கிகளோடு ரயிலின் இருபுறமும் நின்றார்கள். கஜானாப் பெட்டியை இறக்கி அதில் இருந்த பணம் முழுவதையும் அள்ளி மூட்டை கட்டிக்கொண்டு நகரத்திற்கு சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கிடைத்த ஆயுதங்களும் பத்திரமான இடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டன. இந்நிகழ்ச்சி பிரிட்டிஷ் அரசை கதிகலங்க வைத்தது.சந்திரசேகர ஆசாத், முகுந்தன்லால் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்து மூவர் தூக்கு மேடைக்கும் மற்றவர்கள் ஆயுள் சிறைக்கும் அனுப்பியது.
ககோரி கொள்ளை முடிந்ததும் ஜான்சி நகருக்கு போய்விட்டார். அன்று முதல் நிரந்தர தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவரது வெற்றிகரமான தலைமறைவு வாழ்விற்கு அவரது உருவம் ஒரு காரணம் என்றே கூறலாம். நிதானமான உயரம், பருத்த வலிமையான உடல் அமைப்பு கொண்டவர். ஒரு பூணூல்,குடுமி, கையில் ஒரு பாகவதபுத்தகம் இவற்றோடு கதாகாலட்சேபம் செய்யும் பாகவதராக வேடமிட்டு மாறிவிடுவார். சாதாரண தொப்பி,வேட்டி, ஜிப்பா என ஒரு பணக்கார வியாபாரி ஆகிவிடுவார். அழுக்கு உடைகளோடு பணக்கார வீட்டு வேலைக்காரனாக மாறிவிடுவார். அதாவது சூழ்நிலைக்கேற்ப மாறு வேடமிட்டு தப்பிச் செல்வதில் மிகவும் திறமையானவர். அவரது சூட்சும அறிவும், எச்சரிக்கை உணர்வும் கடைசி வரை அவரை பிடிபடாமல் பாதுகாத்தது.
லாகூர் நேஷனல் கல்லூரி மாணவர்களோடும், பகத்சிங் மற்றும் தோழர்களோடும் அவருக்கு உறவு ஏற்பட்டது. பகத்சிங்கை "தம்பி இன்குலாப் " ,அதாவது புரட்சி தம்பி என்றே அன்புடன் அழைப்பார்.
பல மாநிலங்களைச் சார்ந்த போலீசார் ஆசாத்தை பல வழக்குகளுக்காக வலைவீசி தேடிவந்தனர். அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் சன்மானமாக தருவதாக மாநில அரசுகள் அறிவித்தன.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு படையின் தளபதியாக சந்திரசேகர ஆசாத்தை முன்மொழிந்தவர் பகத்சிங். அதுமுதல் இனிமேல் * நான் இந்து மதவாதி யல்ல; பிராமணனுமல்ல; இனி நான் இந்தியன்; இனி சாதி மத வேறுபாடுகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டேன்; இனி நாம் அனைவரும் ஒன்று * என்று பிரகடனம் செய்து தலைமறைவு வாழ்க்கைக்காக குடுமியை வெட்டிக் கிராப் வைத்து முறுக்கு மீசையும் வைத்துக் கொண்டவர். அன்று நடந்த கூட்டத்தில் தனது பூணூலை அறுத் தெறிந்தவர்.
லாலா லஜபதி ராயின் மண்டையை உடைத்த போலீஸ் டிஎஸ்பி சாண்டர்ஸை திட்டமிட்டபடி பகத்சிங்கும் ராஜகுருவும் சுட்ட பிறகு டிஏவி கல்லூரியின் மாணவர் விடுதிப் பக்கம் ஓடிவிட வேண்டும் என்றும் ஆசாத் அவர்கள் தப்பிச்செல்ல கவசமாக நின்று கண்காணிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டு அதன் படி ஆக் ஷனில் ஈடுபட்டனர் . ஆனால் துப்பாக்கி ரவைகள் காலியாகி விட்டதால் ஓடுவதைத் தவிர பகத்சிங்கிற்கும் ராஜகுருவிற்கும் வேறு வழி தெரியவில்லை. அவர்களைப் பின்தொடர்ந்து ஏட்டு சனன்சிங் ஓடி பிடிக்க முயன்றான்.சனன் சிங் வேகமாக பாய்ந்து பகத்சிங்கை பிடிக்க தனது பலமான கைகளை நீட்டிய போது ஆசாத் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல் குண்டு அவனது தொடையை துளைத்தது. அப்போதும் அவன் ஓடிக்கொண்டிருந்தான். ஆசாத் மீண்டும் சுடவே சனன் சிங் வயிற்றில் குண்டு பாய்ந்து குப்புற விழுந்து இறந்தான் மூன்றுபேர் சேர்ந்தாற்போல் ஓடும்போது ஒருவனை மட்டும் குறிவைத்து சுட்டு வீழ்த்த ஆசாத் ஒருவரால்தான் முடியும். ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு உறுதியோடு நிறைவேற்றுவது ஆசாத்தின் தனி சிறப்பாகும்.
லாகூரில் இச்சம்பவம் நடந்தபோது ஒரு குருவி கூடத் தப்பிப் போக முடியாதபடி பலத்த கண்காணிப்பு இருந்தது.எனினும் ஆசாத் சாது வேடமிட்டு தீர்த்த யாத்திரை குழு ஒன்றுடன் சேர்ந்துகொண்டார். சாதுகளோடு சாதுவாய் ரயிலில் ஏறி லாகூரில் இருந்து மதுரா வழியாக ஆக்ராவிற்கு தப்பிச்சென்றார். அவசியமில்லாமல் யாருக்கும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளமாட்டார். ரகசியக்காப்பு விதிகளை கடுமையாக பின்பற்றினார்.கட்சியை குறித்து அதிகப் பிரசங்கம் செய்ய மாட்டார். சந்திக்க போகிறவர்கள், பேசவிருக்கும் விஷயம் எதையும் அனாவசியமாக யாருக்கும் தெரிவிக்க மாட்டார். டெல்லி சதி வழக்கிலும் பிரதான குற்றவாளியாக இருந்த ஆசாத்தை பிடித்துக் கொடுத்தால் 5000 ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது. அவருடைய உருவப்படம் (பூணூலுடன் மீசையை முறுக்கியவாறு உள்ள படம் ) எல்லா ரயில்வே ஸ்டேஷன் களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட்டது. ஆனால் கடைசிவரை போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை. அவரை யாரும் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. ஆசாத்தை கண்டவுடன் சுட்டுக் கொல்லும்படி அனைத்து மாநில அரசுகளும் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தன.
1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் காலை 10 மணிக்கு அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பார்க்கில் சந்திக்குமாறு போலீஸ் உளவாளியாக மாறிவிட்ட நண்பன் கடிதம் எழுதியிருந்தார்.நண்பனின் அழைப்பை நம்பி ஆசாத் ஆல்பிரட் பூங்காவிற்கு வந்த போது போலீஸ் படை சுற்றி வளைத்தது. இதை உணர்ந்த ஆசாத் தனது கைத்துப்பாக்கியை வெளியில் எடுத்தபோது துரோகி நண்பன் ஓடிவிட்டான். போலீசார் ஆசாத் மீது சுடத் தொடங்கியபோது ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு ஆசாத் திருப்பி சுட்டார். தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்தார். பல போலீஸ்காரர்கள் குண்டடிபட்டு விழுந்தனர். இறுதியில் போலீசாரின் குண்டடிபட்டு ஆசாத் கீழே விழுந்தார் போலீசார் நெருங்கிவந்து சுட்டனர். பலமுறை சுட்ட பின்பும் அவரது உடலை நெருங்கவே போலீசார் அஞ்சினர். பலமுறை சுட்டு துப்பாக்கி சனியன்களால் குத்தி உயிர் போய்விட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அவரது உடலை நெருங்கினர்.14 வயதில் விடுதலைப் போரில் குதித்து பத்தாண்டுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இடைவிடாது போராடிய ஆசாத் வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கடும் போரில் தனது 24 வது வயதில் விழுந்தார். தனது இறுதி மூச்சுவரை சுதந்திரத்திற்காக வே போராடி வாழ்ந்தார். அதனால்தான் தனது பெயரோடு விடுதலை என்ற பொருள் படும் விதத்தில் ஆசாத் என்பதை சேர்த்துக்கொண்டார். தான் உயிரோடு இருந்தவரை போலீஸ்காரர்கள் யாவரும் தன்னை நெருங்கவே முடியாதபடி செயல்பட்டார். போலீஸ்காரர் சுட்ட குண்டு ஆசாத்தின் தொடையைத் துளைத்தது. அவர் கீழே சாய்ந்து விட்டார். " அவர் கீழே சாயாவிட்டால் போலீஸ்காரர்கள் யாரும் உயிரோடு திரும்பி இருக்க முடியாது. ஆசாத்தை பிடிக்கச் சென்ற போலீஸ் பட்டாளத்தின் தலைமை அதிகாரிக்கு ஆசாத் சுட்டதில் இரு கைகளும் ஊனம் ஆகிவிட்டன. ஒரு புரட்சி இயக்கத்தின் தளபதியாக இருப்பதற்கு பொருத்தமானவர் தான் சந்திரசேகர ஆசாத் " என்று போலீஸ் அதிகாரி சிஐடி பிரிவு எஸ்.பி குறிப்பிட்டிருக்கின்றார்.
அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் ஆசாத்திற்கும் பிரிட்டிஷ் போலீசாருக்கும் நடந்த போரில் ஆசாத்துக்கு பாதுகாப்பு கவசமாக நின்றது வேப்பமரம்.அந்த வேப்பமரத்தை புனித மரமாக எண்ணி தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். அந்த மரத்தை உணர்ச்சி மேலீட்டால் தொட்டுப்பார்த்து பரவசமடைந்தனர். இதைக் கண்டு பொறுக்காத பிரிட்டிஷ் அரசு அடுத்த சில வாரங்களிலேயே அந்த மரத்தையும் வெட்டி சாய்த்தது. ஆசாத்தை நினைவுபடுத்தும் உயிர் இல்லாத மரம் கூட பிரிட்டிஷாரை அந்த அளவிற்கு பயமுறுத்தி உள்ளது. இறந்தும் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த, மறக்கப்பட்ட சந்திரசேகர ஆசாத் என்ற மாவீரனை என்றும் நினைவு கூர்வோம்.
( 27 .02. 1931 - 27.02 .2020).
No comments:
Post a Comment