#இன்றைய அரசியல்
அரசியல் கட்சிகளில் நிர்வாகிகள் எப்படி இருக்க வேண்டும்? #அரிஸ்டாட்டில்-பிளேட்டோ #Poltics #Democracy #Greek
—————————————
சமீபத்தில் அரிஸ்டாட்டில் பிளேட்டோவுடைய நூல்களைப் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதில் சொல்லப்பட்ட சில விடயங்கள்:
அரசியல் கட்சியின் தலைவருக்கு அடுத்து உள்ள நிர்வாகிகள், சுயமரியாதையோடு தங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு தலைமையிடம் வினா எழுப்பக் கூடிய தைரியமுடைய நிர்வாகிகளாக இருக்க வேண்டும்;
அரசியல் கட்சி தலைமையின் கோட்பாடு, கொள்கை ஆகியவற்றின் வழியில் செய்ய வேண்டிய பணிகளை அரசியல் கட்சியின் நிர்வாகிகள் செய்யும்போது, தலைமைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், இதயசுத்தியோடும் இருக்கின்ற பொறுப்புகளை முன்னெடுத்துச் செய்ய வேண்டும்;
அரசியல் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் கொள்கை, லட்சியரீதியாக உண்மையாக இருக்க வேண்டும். பாசாங்காக அடிமைத்தனத்தோடு இருக்கக் கூடாது. பதவிகள், பொறுப்புகள் பெறுவதற்காகவே போலியான புகழாரங்கள் சூட்டுவது, தலைமையின் உறவுகளைக் கொண்டாடி சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பது ஆகியவை தவறு;
அரசியல் கட்சித் தலைமை, கட்சிக்கு எந்தக் கடமையையும் ஆற்றாமல் தனக்கு அடிமையாக இருப்பவர்களை மட்டுமே முன்னெடுப்பது ஜனநாயகத்துக்கு துரோகம் செய்வதாகும். இயக்கத்துக்கு நீண்ட காலமாக உழைத்தவர்களை மட்டம் தட்டி, இயக்கத்துக்கு சம்பந்தமில்லாதவர்களை திடீரென்று ஏதோ ஒரு வகையில் அரசியல் கட்சித் தலைமை தூக்கிப் பிடித்தால், அது சமுதாய துரோகமாகும்;
அரசியல் கட்சித் தலைமை மக்கள் நலன் என்ற ஜனநாயக அரசியல் கோட்பாட்டை எப்போதும் பின்பற்ற வேண்டும்;
கட்சிக்கு எந்த உழைப்பும், களப்பணியும் செய்யாத தன் வாரிசுகளுக்கு, சுற்றத்தார்களுக்கு அரசியல் கட்சித் தலைமை சலுகை காட்டி திடீரென அவர்களைத் தூக்கிப் பிடிப்பது கொலைக் குற்றத்தை விட மிகவும் பாதகமானது;
அரசியல் இயக்கங்களுக்கு சோதனையான கட்டங்களில் தோள் கொடுத்த அரசியல் களப்பணியாளர்களுக்கு அரசியல் தலைமை எக்காலமும் துரோகம் நினைக்கக் கூடாது. ராஜ பதவியில் இருந்தாலும், இம்மாதிரி தீங்கை அவர்கள் நினைத்தால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைப்பது எளிதல்ல;
அரசியல் என்பது தொழிலோ, வியாபாரமோ, வம்சாவழி ஆதிக்கமோ இல்லை என்பதை அரசியல் பிரமுகர்கள் அடிப்படைக் காரணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்;
கட்சித் தலைமை இந்த பணிகளைச் செய்யுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்கும்போது, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கட்சித் தலைமை மதிப்பாக அழைத்து, இந்தப் பணிகளை தங்களால் செய்ய முடியுமா என்று கேட்டு, அதற்குப் பின் அவர்களைச் செய்யும்படி மாண்புற சொன்னால்தான், கட்சி நிர்வாகிகள் சுயமரியாதையுடைய மானமிகு கட்சிப் பொறுப்பாளர்களாக இருக்க முடியும்.
மேலே கூறப்பட்ட இந்த செய்திகள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோருடைய முழுமையான படைப்புகளில் ஆங்காங்கு சொல்லப்பட்டவையாகும். அவற்றை எடுத்து தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்துகளில் அந்தக் காலத்தில் இருந்த நிலைமைக்கேற்ப அரசர், முடியரசு, ஆட்சியின் தலைமை என்று எழுதப்பட்டிருப்பதை மாற்றி, தற்காலத்துக்கு ஏற்ற வகையில் கட்சித் தலைமை என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளேன்.
எதற்கெடுத்தாலும் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்று அரசியல் மேடைகளில் பேசி, சுயமரியாதை, தன்மானம் என்று பலர் சொல்லிக் கொண்டாலும் இங்கே நடப்பதென்ன? மக்கள் நல ஜனநாயக அரசியல் என்பதற்கான கூறே அவர்களிடம் இல்லை. ஓட்டுக்கு காசு கொடுத்து வெற்றி பெற்று பதவிக்கு வருவது ஜனநாயகமா? வியாபார அரசியல்தான் இங்கே நடக்கின்றது.
இங்கே கட்சிக்கு உழைத்தால் மட்டும் போதாது. அடிமையாக, கையைப் பிடித்து, காலில் விழுந்து, போலி புகழாரங்களைத் தலைமைக்குச் சூட்டி, வெண்சாமரங்கள் வீசி அதன் மூலம் பொறுப்புக்கு வந்து, தேசியக் கொடி கட்டி சிவப்பு விளக்கு காரில் சில காலம் பவனி வருவதுதான் நோக்கமாக இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு, அரசியல் பற்றி அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ ஆகியோர் கூறியவை எவை என்று தெரியுமா?
இன்றைக்கு பொதுவாழ்வு என்று சொல்லிக் கொண்டு நடக்கும் செயல்பாடுகளையும் வேடிக்கை மனிதர்களையும் பார்க்கும்போது இங்கே நடக்கின்ற செயல்கள் எதுவுமே அரசியல் அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.
#KSR_Post
3-2-2023.
No comments:
Post a Comment