Friday, February 10, 2023

ஹம்பியைக் கொண்டாடவா? வேதனைப்படவா? (சிதிலமடைந்த வரலாற்று எச்சங்கள்!) Hampi

ஹம்பியைக் கொண்டாடவா? வேதனைப்படவா?

(சிதிலமடைந்த வரலாற்று எச்சங்கள்!)

 

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

 

இன்றைய (10.02.2023 ) தினமணியில் விஜயநகர பேரரசு தலைநகராக இருந்த ஹம்பியைக் குறித்து என்னுடைய கட்டுரை வெளியாகி உள்ளது.   சல்மான் ருஷ்டி எழுதிய  விஜயநகர பேரரசைக் குறித்தான விக்டர் சிட்டி ’ என்ற நாவல் இன்றைக்கு வெளியாகிறது. அதே நாளில் இந்த கட்டுரையும் தினமணியில் வெளியாகி உள்ளது என்பது இதன் சிறப்பு.   









































சில நாட்களுக்கு முன் ஹம்பிக்குச் சென்றிருந்தேன். அருமையான உயிரோட்டமான வரலாற்று பூமி. விஜயநகரப் பேரரசின் எச்சங்களை இன்னும் சரியாக பாதுகாத்து பராமரித்து இருக்க வேண்டும். ஆனால் கண்ட காட்சிகள், சரியான பராமரிப்பும் இல்லாமல், அதை மேலும் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுகிற வகையில் கொண்டு செல்கின்ற சூழலும் இல்லாதது வேதனையிலும் வேதனை.








என்னுடைய சமூக வலைதளங்களில் அர்த்தத்தோடு சில பதிவுகள் இடும்போது தேவையற்ற வகையில், வந்தேறி’, தெலுங்கன் ’ என்று என்னைப் பற்றிய எதிர்வினைபின்னோட்டங்கள் இடுவது வாடிக்கையாகிவிட்டது. அதைப் பற்றி நான் அக்கறை கொள்வதும் இல்லை. வருத்தப்படுவதும் இல்லை. மற்றவர்கள் போல இதை மறைத்தும் நடிப்பதும் இல்லை. மறுக்கவில்லை. யதார்த்தத்தை ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய வீட்டில் மரபுரீதியாக தெலுங்கு பேசக் கூடிய ஆனால் தெலுங்கு எழுதத் தெரியாத பிறவித் தமிழனாக இருக்கிறேன். ஆனால் பாலாறு பிரச்னை, பொன்னியாறு பிரச்னை, பழவேற்காடு பிரச்னை ஆகியவற்றில் ஆந்திராவைக் குறித்த கடுமையான எதிர்வினைகளை நான் ஆற்றியதும் உண்டு. ஈழத்தமிழர் பிரச்னை, தமிழ்நாடு நதிநீர்மற்றும் உரிமைப் பிரச்னைகளுக்காக உச்சநீதிமன்ற படிக்கட்டுகள் வரை 45க்கும் மேற்பட்ட வழக்குகளை கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்ததும், அப் பிரச்னைகளை நூல் வடிவில் ஆவணப்படுத்தியதும் என்னைப் போல வேறு யாரும் செய்யவில்லை. தமிழக உரிமைகள் குறித்து செய்தித்தாள்களில் என் போன்று தொடர்ந்து யாரும் எழுதியதும் கிடையாது. அந்த வகையில் என்னுடைய பணிகளை என்னுடைய மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு இதயசுத்தியோடு செய்கிறேன். மற்றவர்களைப் பற்றி கவலையில்லை. 








எதற்கு தெலுங்கு பேசுகிற இனம் தமிழகத்தை நோக்கி வந்தது?  விஸ்வநாத நாயக்கர் மதுரையை நோக்கி வர வேண்டிய அவசியம் என்ன?  மாலிக்காபூர், சுல்தானியர்கள்  தெற்கு நோக்கி படையெடுத்த வரலாற்றை அறிந்தவர்கள் இதுபோன்று எதிர்வினைகளை ஆற்ற மாட்டார்கள். அந்த வகையில் இந்த கட்டுரையில்  குறிப்பிடப்பட்ட செய்திகள் வரலாற்றில் தொடர்புடையவையாகும். வரலாற்றில் மறக்கப்பட்ட  விஜயநகரப் பேரரசைப் பற்றியதாகும். 


கிரா எழுதிய கோபல்ல கிராமம் ’ மற்றும் எங்களுடைய மூதாதைர்கள் எப்படி தமிழ் மண்ணை நோக்கி வந்தார்கள் என்ற செய்திகள் வேறு விடயம். அவர்களின் அன்றையப்புள்ளிதான் விஜயநகரப் பேரரசு. 


விஜயநகரப் பேரரசில் தமிழ்ப் புலவர்களையும்தமிழறிஞர்களையும் ஆதரித்திருக்கிறார்கள். அதே அவையில் அல்லசானி பெத்தண்ணா, தெனாலி ராமன் போன்றவர்களும் இடம் பெற்றனர். ஆமுக்த மால்யதா என்ற நூல் பெரியாழ்வார்பற்றியும்அவருடைய வளர்ப்புப் புதல்வி சூடிக் கொடுத்த சுடர்கொடி தமிழை ஆண்ட ஆண்டாளைப் பற்றியும் கிருஷ்ணதேவராயர் எழுதிய நூலாகும். ஆமுக்த மால்யதாவை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பன்மொழிப்புலவர் மு.கு.ஜெகந்நாதராஜா. விஜயநகரப் பேரரசின் அரசர்களில் ஒருவராகிய கிருஷ்ணதேவராயர் பற்றிய தரவுகளை  ரா.கி.ரங்கராஜன் நான் கிருஷ்ணதேவராயன் என்ற அவருடைய நாவலில் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் இன்றைக்கு இருக்கின்ற காசி-கன்னியாகுமரி நெடுஞ்சாலைகன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர்ராமேஸ்வரம்தஞ்சாவூர், சிதம்பரம், செஞ்சி வரை உள்ள சாலைகள் அக்காலத்தில்  யானை , குதிரை படைகள் செல்வதற்காக அமைப்பட்ட சாலைகளாகும்.  அவையே இன்றைக்கு நம்முடைய போக்குவரத்துக்கு பயன்படுகின்றன என்று ரா.கி.ரங்கராஜன் குறிப்பிட்டு இருக்கிறார்விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் புதல்வி மோகனாங்கியைப் பிரதானக் கதாபாத்திரமாகக் கொண்டு கோவி.மணிசேகரன்  பொற்காலப் பூம்பாவை ’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். 

சோழ அரசர்கள் ஆந்திரத்தில் கொண்ட திருமண உறவுகள் இருந்ததாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. பாண்டிய, சோழ மன்னர்களுக்கு நெருக்கமாகவே இருந்ததுதான் ஆந்திர மண். இப்படி பல தரவுகள் உண்டு.  

முதலாம் ஹரிஹரன்முதலாம் புக்கன்இரண்டாம் ஹரிஹரன் ஆகிய மூன்று அரசர்கள் காலத்தில் விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. அது வடமேற்கில் துங்காபத்திரா நதிக்கரையும் வடக்கே கிருஷ்ணா நதிக் கரையும்ஒருகாலத்தில் தெற்கே திக்கெட்டும் திருநெல்வேலி வரை பரவியிருந்தது என்பது வரலாறு.

விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கும் அது வலிமை பெறுவதற்கும் அடிப்படைக் காரணமாக அதற்கு முன்பு நாட்டில் நிலவிய சூழ்நிலைகள் இருந்திருக்கின்றன.

கி.பி. 1296 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜி தேவகிரியின் மீது படையெடுத்துஇராமச்சந்திர தேவனுடைய செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்தார். பின்னர் டெல்லி சுல்தானாகப் பதவி ஏற்றார் . 1309 - ஆம் ஆண்டில் தன்னுடைய படைத் தலைவர் மாலிக்காபூர் என்பவரைப் பெரியதொரு படையுடன் அனுப்பிவாரங்கல் நாட்டைக் கொள்ளையடிக்கும்படி ஆணையிட்டார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1311- இல் ஹொய்சாள நாட்டுத் தலைநகராகிய துவார சமுத்திரமும் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் பின்னர் பாண்டிய நாட்டின்மீதும் மாலிக்காபூர் படையெடுத்தார். துவாரசமுத்திரத்திலிருந்து திருச்சிக்கு அருகிலுள்ள உய்யக்கொண்டான் திருமலை செல்லும் வழியில் பல  கோவில்களையும் மாலிக்காபூர் கொள்ளையடித்ததாகத் தெரிகிறது. திருவரங்கம்திருவானைக்காகண்ணனூர் முதலிய இடங்களில் இருந்த கோவில்களும் கொள்ளையடிக்கப்பட்டன. ஸ்ரீரங்கநாதருடைய உருவச் சிலையையும் மாலிக்காபூர் எடுத்துச் சென்றதாக கோயிலொழுகு என்னும் நூலிலிருந்து நாம் அறிய முடிகிறது. 1327 ஆம் ஆண்டில் முகம்மது பின் துக்ளக் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தமையால் இரண்டாவது முறையாகத் திருவரங்கம் கோவில் சூறையாடப்பட்டது. அலாவுதீன் கில்ஜியால் முதலில் தொடங்கப்பட்டு முகம்மது பின் துக்ளக்  ஆட்சிக்காலம் வரை நடைபெற்ற படையெடுப்புகளால்  தென்னிந்திய கோவில்களும் அக் கோவில்களைச் சேர்ந்த மடாலயங்களும் கொள்ளையடிக்கப்பட்டு அவற்றில் இருந்த விலை உயர்ந்த செல்வங்களும் கலைப்பொருள்களும் வடஇந்தியாவிற்கு யானைகள்ஒட்டகங்கள்குதிரைகளின் மீது ஏற்றி அனுப்பப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளை மாற்றி அமைப்பதற்கு ஒரு புதிய சைவ சமய இயக்கம் ஆந்திர நாட்டிலும் கன்னடத்திலும் தோன்றியது. இவ்வியக்கத்திற்குப் புரோலைய நாயக்கர்காப்பைய நாயக்கர் ஆகிய இருவரும் தலைமையேற்றனர். 

 தென்னிந்திய வரலாற்றில் 1336 ஆம் ஆண்டில் அமைக்கப் பெற்ற விஜயநகர பேரரசு தென்னிந்திய சமயங்கள்கோவில்கள் ஆகியவற்றைப்  பாதுகாப்பதற்காக ஏற்பட்டதெனப் பல வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். 

கி.பி. 1336 முதல் கி.பி. 1646 வரை ஆட்சி செய்தது விஜயநகரப் பேரரசு. சங்கமசாளுவதுளுவஅரவீடு என வெவ்வேறு மரபுகளைச் சார்ந்தவர்களால் ஆளப்பட்டது.  1336ஆம் ஆண்டில் விஜயநகரம் அமைக்கப்பட்டது. 

அன்றைய விஜயநகரத்தில் இன்றைக்கு நகர்ப்புறங்களில் இருக்கிற வசதிகள்  மாதிரிநீச்சல்குளங்கள்நகைகள்வாங்கும் தனிச் சந்தைபூக்கள் சந்தைகாய்கறிச் சந்தைபட்டு ஆபரணங்கள் சந்தை என்ற பல சந்தைகளும்சகலவசதிகளும் கொண்ட குளியல் நீச்சல் குளங்களும்கலைமேடைகளும்யானை,  குதிரைகளைக் கட்டி வைக்க உயர்ந்தகட்டடங்களும்அறிஞர்கள் அமர்ந்து ஆய்வு நடத்தகூடங்களும் இருந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல்நகருக்குள் நுழையும் முன்னே சுங்கச்சாவடி இருந்திருக்கிறது. வைத்திய சாலைகள் நிரம்பிய நகரமாகவும்இருந்திருக்கிறது. 

விஜயநகரம் இப்போது எங்குள்ளது

துங்கபத்திரை தியின் குறுக்கே பெரியதோர் அணைக்கட்டு கட்டப்பட்டு அந் நதியின் நீர் ஒரு பெரிய சமுத்திரம் போன்று ஹாஸ்பெட் என்ற  ஊரில் தேங்கியுள்ளது. ஹாஸ்பெட் என்ற ஊர் ஹோஸ்பட்டணம் என்பதன் தற்காலப் பெயராக இருக்க வேண்டும். ஹாஸ்பெட்டிற்குக் கிழக்கே ஐந்து மைல் தூரத்தில் விஜய நகரத்தின் அழிவுச் சின்னங்கள் துங்கபத்திரை நதியின் தென் கரையிலுள்ள ஹம்பி என்னுமிடத்தில் காணப்படுகின்றன.  புகழ்பெற்ற விஜயநகரப் பேரரசின் தலைநகரான விஜயநகரம் ஹம்பிக்கு அருகில்தான் இருந்திருக்கிறது. 

 துங்கபத்திரை ஆறு விஜயநகரத்துக்கு இயற்கை அரணாக இருந்திருக்கிறது. சுற்றிலும் குன்றுகள் இருந்திருக்கின்றன. எதிரிப் படைகள் வேகமாக முன்னேற முடியாமல் தடுக்கும் கரடுமுரடான நிலப்பகுதிகள் அங்கே இருந்திருக்கின்றன. ஆகையால் சங்கம வமிசத்து முதல் மூன்று மன்னர்கள்பல செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர். அவர்கள் ஆண்ட காலத்தின் தயங்களாக நமக்கு கிடைத்திருப்பவை ஹம்பி நகரிலும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கின்றன. அவற்றில் பல சிதைவுற்றநிலையில் இருக்கின்றன. 

கர்நாடக மாநிலத்திலேயே மிகப் பெரிய கோபுரத்தைக் கொண்ட கோவில் ஸ்ரீவிருபாக்ஷேஷ்வரர் சிவன் கோவில்தான். அதன் பெரிய கோபுரம் 165 அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்துக்கு பிஸ்டப்பய்யா கோபுரம் என்ற பெயரும் உள்ளது. இந்த கோபுரத்தின் வாயில் வழியாக கோவிலுக்குள் சென்றால்,  510 அடி நீளம் 130 அடி அகலம் உள்ள பெரிய உள் பிரகாரம் உள்ளது. உள் பிரகாரத்தின் தரையில் பாறாங்கற்களைப் பொறித்து இருக்கிறார்கள். இதன் மத்தியில் துங்கபத்திரா ஆற்றின் தண்ணீர் சிறிய வாய்க்கால் வழியாக ஓடுகிறது. இந்த பெரிய கோபும் தவிர இரண்டு சிறிய கோபுரங்களும் இந்த கோவிலில் உள்ளன. முதல் பிரகாரம் தாண்டி உள்ள கோபுரம்  ராய கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண தேவராயர் தனக்கு முடிசூட்டப்பட்ட நாளின் நினைவாக 1510 ஆம் ஆண்டில் இந்த கோபுரத்தைக் கட்டியதால் அதற்கு இந்த பெயர். 

வடக்கு திசையில் ஒரு கோபுரம் உள்ளது. அது கனககிரி கோபுரம் என்றழைக்கப்படுகிறது.. பிரகாரத்தைச் சுற்றிலும் பல சிறிய கோவில்களும் உள்ளன. பாதாளேஷ்வரர்முக்தி நரசிம்ஹர்சூர்ய நாராயணர்சரஸ்வதிகணபதிவெங்கடேஷ்வரர்ஸ்ரீபார்வதி பம்பாம்பாஸ்ரீபுவனேஷ்வரி தேவி கோயில்களும் உள்ளன. வெளிப்புறத்தில் மன்மத தீர்த்தம் என்ற குளம் உள்ளது. அதற்கு சிறிது தூரத்துக்கு அப்பால் துங்கபத்திரா ஆறு ஓடுகிறது. மண்டபங்களில் மேல்பாகம் நீளமான பாறாங்கற்களால் முடிவு பெற்றுள்ளது.  அதில் மிகப் பண்டைய காலத்தின் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கோவிலுக்கு வெளியே உள்ள ஹம்பி தேர்வீதியில் ஒரே பெரிய பாறையில் செதுக்கப்பட்ட  எதிர் பஸவண்ணா என்ற பெரிய நந்தி உள்ளது. 

 துங்கபத்திரா ஆற்றின் அருகே உள்ள இன்னொரு கோவில் ராமர் கோவில். ஆற்றில் இருந்து பார்த்தால் 60- 70அடி உயரத்தில் கோதண்ட ராமர் கோவில் தெரியும். மழைக்காலத்தில் ஆற்றில் நிறைய தண்ணீர் வந்தால் இந்த கோவிலுக்கு உள்ளேயும் தண்ணீர் வந்துவிடும். 

இந்த கோவிலின் முன்புறம்  சிறிது உயரத்தில் யந்த்ரோத்தாரக ஹனுமார் கோவிலும் உள்ளது. இந்த ஹனுமார் கோவிலுக்கு அருகே அனந்தசயனகுடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கே மூர்த்தி இல்லை. இந்த கோவிலிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில்  அச்சுத்தேவராயர் கோவில் உள்ளது. 1539 - இல் கிருஷ்ணதேவராயரின் தம்பியான அச்சுதேவராயரால் கட்டப்பட்ட இந்த கோவிலிலும் இப்போது சிலைகள் இல்லை.  

  கர்நாடக இசை மேதை புரந்தரதாசரின் நினைவைப் போற்றும் வகையில் 1540 ஆம் ஆண்டில் துங்கபத்திரைஆற்றின் கரையில்  புரந்தரதாசர் மண்டபத்தைக் கட்டியிருக்கிறார்கள். இப்போதும் அங்கே ஒவ்வோராண்டும் புரந்தரதாசர் விழா நடத்தப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து இசை ஆர்வலர்கள் இதற்காக வருகின்றார்கள். புரந்தரதாசர் மண்டபத்தின் இடதுபுறத்தில் கல் தூண்களை அமைத்து அதன் மேல் அக்காலத்தில் பாலம் கட்டியிருக்கிறார்கள். இப்போது பாலத்தைக் காணவில்லை. கல்தூண்கள் மட்டுமே இருக்கின்றன. என்றாலும் விஜயநகர அரசர்கள் காலத்தில் அந்தப் பாலம் பயன்படுத்தப்பட்டதால் அந்தப் பகுதிக்கு பழைய பாலம் என்ற பெயர் இப்போதும் உள்ளது.

புரந்தரதாசர் மண்டபத்துக்கு சிறிது தொலைவில் விஜயவிட்டல தேவாலயம் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மண்டபங்களில்  குறிப்பிடத்தக்கவிதத்திலான கல்தூண்கள்  உள்ளன. ஒரு  கல்தூணில் 16 சிறிய கல்தூண்களும் சேர்ந்திருக்கின்றன. இந்த சிறிய கல்தூண்களை தட்டினால் ஒவ்வொன்றிலும் இருந்தும் ஒவ்வொரு மாதிரியான இசை ஒலிக்கும். ஆனால் இந்த எல்லாத் தூண்களும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டு உள்ளன. ஒரே தூணில் வெவ்வேறு இசை என்பது இக்காலத்திலும் வியப்பளிப்பதாகவே உள்ளது.

கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்கள் என்பதற்கு இன்னோர் உதாரணம்இந்த கோவிலில் கல்லினால் செய்யப்பட்ட ரதம் உள்ளது. 4சக்கரங்கள் உள்ள இந்த கல்ரதம் தற்போது ஓடாது. கல் சக்கரத்தில் நல்ல வேலைப்பாடுகள் உள்ளன. இந்த கல்ரதத்தின் வலதுபக்கத்தில் உள்ள கல் மண்டபத்தை 1513 - இல் கிருஷ்ணதேவராயர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. 

விஜயவிட்டல தேவாலயத்துக்கு ஒன்றரை கிலோ மீட்டரில் இருக்கும் ஆனேகுந்தி என்ற சிற்றூர் உள்ளது.  இது பழங்காலத்தில் புகழ் பெற்ற நகரமாக இருந்திருக்கக் கூடும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். அனுமன் பிறந்ததாகக் கூறப்படும் கிஷ்கிந்தை நகரமே இந்த ஆனேகுந்தி சிற்றூர் என்பதாகக் கூறுகிறார்கள்.

ஹம்பியின் வலதுபுறம் ஹேமகூடம் என்ற சிறு மலையும்இடதுபுறம் ரத்னகூடம் என்ற சிறு மலையும் உள்ளது. இந்த ரத்னகூடத்தில் ஜைன மதத்தினருக்கான குருபீடம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பல மாநிலங்களில் இருந்து ஜைனமதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மலையில் ஒன்று கூடி விழா நடத்துகிறார்கள். ஹேம கூடம் மலைப் பகுதியிலும் நிறைய ஜைன கோவில்கள் உள்ளன.

18 அடி உயரம் உள்ள கணபதி சிலை உள்ள கடலைக்காய் கணபதி கோவிலின் மண்டபங்கள் நல்ல முறையில் இப்போதும் இருக்கின்றன.  ஆனால் சிலை மட்டும் உடைந்து  இருக்கிறது. ஹோஸ்பெட் - கமலாபுரம் அருகில் உள்ள 12அடி உயரம் உள்ள கணபதி சிலை உள்ள கோவில் உள்ளது. இது பெரிய கணபதி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இந்த கணபதி கடுகு கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். 

கி.பி.1523 இல் கிருஷ்ணதேவராயர் ஆந்திர மன்னரான கஜபதியை போரில் வென்றதன் நினைவாக கட்டப்பட்ட கிருஷ்ணர் கோவில் உள்ளது. இதில் கடவுள் சிலை இல்லை. கோவிலின் கோபுரமும் இடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பல சிறிய கோவில்கள் உள்ளன. 

இவ்வாறு விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள்மண்டபங்கள் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. வரலாற்றின் பொக்கிஷங்களாகக் கருதப்பட வேண்டிய அவற்றில் பல சிதிலமடைந்து உள்ளன. கோவில்களைக் கொள்ளையடித்துபாழ்படுத்திய  அலாவுதீன் கில்ஜிமாலிக்காபூர்,  முகம்மது பின் துக்ளக் ஆகியோரின் அழிவு வேலைகளுக்கு எதிராகஅவற்றைக் காப்பதற்குத் தோன்றியதுதான் விஜயநகரப் பேரரசு. ஆனால் விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பல கோவில்கள்மண்டபங்கள் சிதைவுற்றுக் கிடப்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்.


ஜயநகரம் அரசு - (கிருஷ்ன தேவராயர்)

முதலாம் புக்கரின் மகன் குமாரக் கம்பணன் படை எடுத்து வந்து மதுரை,  தஞ்சை வரை மீட்டெடுத்தான். பழைய தொல்பொருள்கள், நகரங்களை  தொல்லியல் துறை முறையாகப் பாதுகாக்கவில்லை என்பதும் விஜயநகரம் இப்போது எங்கு உள்ளது என்பதும் ஆய்வுக்குரிய விஷயமாகும். விஜயநகர பேரரசு தென் பகுதியில் காலடி எடுத்து வைத்து பிறகு தான் 

ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் ஸ்ரீரங்கம் வரை புதுப்பித்து கட்டப்பட்டன. பாளையங்களும் உருவாக்கப்பட்டன. பாளையக்காரர்கள் குறு நில மன்னர்களாக மாறினார்கள். மதுரை கன்னியாகுமரி நெடுஞ்சாலை கூட இன்றும் மங்கம்மா சாலை என்று அழைக்கப்படுவது விஜயநகர பேரரசின் எச்சங்கள் தான்... வரலாற்றின் தடங்களை பாகுபாடுகள் காட்டாமல் மதமாச்சரியங்கள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். இவர்கள் சிதிலமடைந்தால் வரலாறு தங்கள் இஷ்டத்திற்கு ஆட்சியாளர்களால் திருத்தி எழுதப்படும்.சிந்தனையும் தூண்டும்.




 வரலாற்றின் தடயங்களைப் பாதுகாப்பதில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்ட வேண்டும். விஜயநகரப் பேரரசு காலத்திற்குப் பிறகு ஆட்சி செய்த யாருமே அப்படிப்பட்ட அக்கறை எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதையே இந்த சிதிலங்கள் நமக்குக் காட்டுகின்றன. இந்த நிலை இனியும் தொடராமல் இருப்பதை தற்கால ஆட்சியாளர்களாவது உறுதி செய்ய வேண்டும்.

வரலாற்றில் கொடை மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்ட பீஜப்பூர், கோல்கொண்டா, அனந்தப்பூர் பெல்லாரி போன்ற இடங்கள் இந்திய வரலாற்றில் மிக முக்கிய இங்களாகும். தக்காண பூமி வரலாற்றை எழுதும்போது இவற்றை விட்டுவிட்டு எழுத முடியாது. இனிமேலாவது இடிபாடுகள்,சேதாரங்கள் ஏற்படாத வகையில் மத்திய அரசும் கர்நாடக அரசும் ஹம்பியைப் பாதுகாக்க வேண்டும்.

 

கட்டுரையாளர்:  அரசியலாளர்

ஆசிரியர்கதை சொல்லி

 

 

6 




No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...