Sunday, February 5, 2023

எம்ஜிஆர்-இரட்டை இலைச் சின்னம் வெற்றி பெற வாணி ஜெயராம் காரணமா?

இரட்டை இலைச் சின்னம் 
வெற்றி பெற
வாணி ஜெயராம் காரணமா?


           1977-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலுக்கு முன்பாக அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. 
           கட்சிகளில் எந்த கட்சிக்கு முதலில் பேச வேண்டும், இரண்டாவதாக பேச வேண்டும், மூன்றாவதாக பேச வேண்டும் என்பதை, கட்சிகளின் பெயரை எழுதி குலுக்கல் முறையிலே தேர்வு செய்தார்கள். 
              காரணம், ஆளும் கட்சி, பெரிய கட்சி என்று முதலில் கொடுத்தால், அது விமர்சனம் வரும் என்பதால் அப்படி ஒரு முடிவை அகில இந்திய வானொலி எடுத்தது.
          தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு கிடைத்தது.  தனது கட்சிக்காக எம்.ஜி.ஆரும் வானொலியில் பேசினார். அந்த பேச்சு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
        இந்த பேச்சை ரெக்கார்டிங் செய்து, ஊர் ஊராக ஒலிபெருக்கி மூலமாக பிரசாரம் செய்யலாம் என்ற யோசனையை எம்.ஜி.ஆரிடம் சொன்னவர் ஆர்.எம்.வீரப்பன்.
       உடனே ரெக்கார்டு பிளையர் கம்பெனியை (வட்டத்தட்டு போல இருப்பதே ரெக்கார்டு பிளையர்) அழைத்துப் பேசினர்.
     அதை ரெக்கார்டு செய்ய வந்த கம்பெனி, கல்கத்தாவில் இருந்த கொலம்பியா ரெக்கார்டு பிளையர் கம்பெனி. 
     அப்போதெல்லாம், அரை மணி நேரம் ஓடக்கூடியது ரெக்கார்டு பிளையர். எம்.ஜி.ஆரின் பேச்சு 15 நிமிடம் தானே இருக்கிறது என்று அக்கம்பெனி சொன்னதுமே, அதில்  இரண்டு பாட்டுக்களை சேர்த்து ரெக்கார்டிங் செய்யலாம் என்ற ஆலோசனையை கொடுத்தார் ஆர்.எம்.வீ.
         சம்மதம் தந்தார் எம்.ஜி.ஆர்.!
அடுத்து நிற்க நேரமில்லாமல், பல பட இசை அமைப்புக்காக ஓடிக்கொண்டிருந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
 அவரிடம் சொல்லி இரண்டு நாட்களுக்குள் அதிரடியாக இரண்டு பாடல்கள் தயாரானது.
            புலமைப்பித்தன் பாட்டு எழுத
            எம்.எஸ்.வி. இசை அமைக்க
            முதல் பாடலை டி.எம்.எஸ். பாடினார்.

’இரட்டை இலை- வெற்றி தந்த இலை’ 
என்ற தொடங்கும் பாடல் அது.
    
  இந்த பாடல் ஒலித்த பிறகு, எம்.ஜி.ஆர். பேச்சு ரெக்கார்டு பிளையரில் ஒலிக்கும். 


அவர் பேச்சு முடிந்ததும் இரண்டாவது பாடல் ஒலிக்கும்.


இரண்டாவது பாடலையும் புலமைப்பித்தனே எழுதியிருந்தார்.
 அப்பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார்.

’’வாசல் எங்கும் இரட்டை இலை கோலமிடுங்கள்
காஞ்சி மன்னவன் காலடியில் மாலையிடுங்கள்….
அண்ணன் பெயர் தாங்கி நிற்கும் எங்கள் கழகம்
அதை ஆதரித்து காத்திருக்கும் அன்னை உலகம்…!”
 என்ற பாட்டு அடித்த ஹிட்டு சொல்லவே முடியாது.
      
    
        வாணி ஜெயராமின் குரலில், கட்சிகாக எழுதப்பட்ட பாடல் பட்டித்தொட்டி எல்லாம் ஒலித்துக்கொண்டே இருந்தது.
     
      எப்படி தி.மு.க. மேடைகளில் ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற பாடல் ஒலிக்குமோ…. 
      அதை விட  அ.தி.மு.க. தொண்டர்கள், இப்பாடலில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினார்கள்.
      காரணம்…. 
அதில் புலமைப்பித்தனின் வரிகள் 
அதில் எம்.எஸ்.வி.யின் மெட்டு
அதில் வாணி ஜெயராமின் குரல்…!
           இந்த பாடல் ஒலிக்கும் போது, அ.தி.மு.க. தொண்டர்களின் விசில் அடங்க நேரம் பிடிக்கும்.

            1977 மற்றும் 1980, 1984, 1991 தேர்தல்களிலும் மேடை தோறும் ஒலித்த பாட்டு வாணி ஜெயராம் பாடியது தான். 
            1977-ம் ஆண்டு தேர்தல் முடிவில் எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்தார். ஆட்சியை பிடித்ததுமே, அவரால் பதவி ஏற்க முடியவில்லை. படு பிசியாக கர்நாடகவில் ‘மீனவ நண்பன்’ படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது.
         அப்படத்தை 15 நாட்களில் முடித்துக்கொடுத்த பின்னரே, முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
    
             தனது பதவி ஏற்பு விழாவுக்கு , வாணி ஜெயராமுக்கு எம்.ஜி.ஆரே போன் செய்து அழைப்பு விடுத்தார்.

        ‘எனது வெற்றியில் உங்களுக்கு பங்கு இருக்கிறது’ என்று தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
             ‘எனக்கா… எனக்கு எப்படி பங்கு இருக்கும்” என்று கேட்டார் வாணி ஜெயராம்.

                 ‘’நீங்கள் பாடிய வாசல் எங்கும் இரட்டை இலை கோலமிடுங்கள் என்ற பாடல் தான் பட்டித்தொட்டி எல்லாம் பரவியது. அதற்கு உங்களுக்கும் பங்கு உண்டு தானே’ என்று பாராட்டிவிட்டு, அழைப்பிதழும் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.

          அப்படிப்பட்ட சின்னத்துக்கு தான், இன்று ஏக அடிதடி. 
   

                  யார் அந்த சின்னத்தை கைப்பற்றுவது என எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
                  இந்த சூழ்நிலையில் தான், அப்பாடலை பாடிய வாணி ஜெயராம், 04.02.2023 அன்று காலமானார்.
     
                 இந்த வரலாற்றுப் பின்னணியை தெரிந்திருந்தால், அச்சின்னத்துக்காக அடித்துக்கொண்டிருக்கும் தலைவர்கள், வாணி ஜெயராம் உடலுக்கு இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்.







No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...