#சல்மான் ருஷ்டியின் ‘விக்டரி சிட்டி’
வெற்றி நகரம் என்ற #விஜயநகரம்
—————————————
ருஷ்டியின் மீது படுகொலைத் தாக்குதலுக்குப் பின் வந்த இந்த அவருடைய படைப்பின் மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கான முன்னெடுப்புகளைப் போலவே புரமோஷனும் அதிகமாகவே இருந்தன. கடந்த மாதம் விஜய நகரின் ஹம்பிக்குச் சென்றுவிட்டு, அதைக் குறித்தான ஒரு கட்டுரையைத் தினமணி நாளேட்டுக்கு எழுதினேன். அது வெளிவந்த நாளன்றே சரியாக ருஷ்டியின் இந்த விக்டர் சிட்டி வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்தநாள் விக்டரி சிட்டி கையில் கிடைத்தது. பல்வேறு பணிகளுக்கு இடையில் பொறுமையாக கையில் பென்சிலை எடுத்துக் கொண்டு முக்கிய பகுதிகளை படிக்கும்போது மார்ஜின் ஓரத்தில் குறித்துக் கொண்டு பல சிந்தனைகளோடு படித்து முடித்தேன். இதைப் படிக்கும்போது, மதுரா விஜயம், கிராவின் கோபல்ல கிராமம், ஃபர்காட்டன் எம்பயர் எல்லாம் நினைவில் வந்தன.
இந்திய வரலாற்றில் தக்காண பீடபூமி முதல் ஏறத்தாழ திருநெல்வேலி வரை தீபகற்ப இந்தியாவில் ஆட்சியில் இருந்த விஜய நகர அரசைப் பற்றியான வரலாற்றுப் படைப்பாகும். கடந்த 10- 15 நாள்களுக்கு முன்பு வெளியான இந்த படைப்பு, அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது.
விஜயநகரப் பேரரசு என்ற வெற்றி நகரம் 12,13 ஏன் 15 ஆவது நூற்றாண்டு வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் இல்லாமல், முகலாயர்கள் தெற்கே தீபகற்ப இந்தியாவை நோக்கி படையெடுத்து வந்ததைத் தடுத்தி நிறுத்தியதில் விஜயநகரப் பேரரசுக்கு பெரும் பங்குண்டு.
சல்மான் ருஷ்டி இந்த வரலாற்றுப் படைப்பை வரலாற்றோடு பின்னிப் பிணைந்து அதன் சொல்லாடல்களை அதற்கேற்ற வகையில் பயன்படுத்தியுள்ளார். கிடைத்த தரவுகள், ஆவணங்கள், செய்திகளைக் கொண்டு மட்டும் இல்லாமல், வரலாற்றுப் புனைவாக கச்சிதமாக வரலாற்றைத் திரிக்காமல் வெகுஜன மக்களும் படிக்கக் கூடிய சுவையோடு சொல்லியுள்ளார். மக்கள் விரும்பும் அணுகுமுறையில் வாசகர்களை மனதைக் கொள்ளை கொள்ளக் கூடிய வகையில் புனைவுகளை படைப்பது சல்மான் ருஷ்டிக்கு நிகர் சல்மான் ருஷ்டியே.
வார்த்தைகளைப் பிரயோகிக்கும் முறையின் மூலமே வாசகர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகிறார். வரலாற்றுப் பாடம் மாதிரி இல்லாமல் கதையாடல் என்ற நிலையில் வரலாற்றுத் தரவுகளோடு மக்களின் மொழியில் எழுதுவதுதான் படைப்பு புதினமாகும்.
ருஷ்டியின் இந்தப் படைப்பில் தமிழ்நாடு, கள்ளர் - மறவர்கள், தெலுங்கு பேசுபவர்கள், சோழர்கள் என்ற குறிப்புகள் உள்ளன. நடராஜர், மதுராவிஜயம், சம்புவராயர்கள், தமிழகத்தின் சில தரவுகள் என்று ஆங்காங்கே தென்படுகின்றன. ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ தமிழை ஆண்ட ஆண்டாளும் இந்தப் புதினத்தில் வருவதுமாக தமிழ் மண் வாசனை தெரிகின்றது. உணவுகள், அதிரசம், பாயசம், விருந்துகள். நடனங்கள், தமிழ்க் கலாசாரம் என நிரவி இருக்கும் இந்த நாவல் படிக்க மிகவும் சுவையாக உள்ளது. ருஷ்டியே இந்த நாவலைக் குறித்து கீழ்க்குறிப்பிட்டவாறு எழுதியுள்ளார்:
1.வரலாறு என்பது தவிர்க்க முடியாதது. அதுவே நிகழ்கால, வருங்காலத்துக்கு வழிகாட்டியாகத் திகழும். (History is the consequence not only people’s actions, but also their forgetfulness.)
2. Fictions could be as powerful as histories, revealing the new people to themselves, allowing them to understand their own natures and the natures of those around them, and making them real.
விஜயநகரப் பேரரசு துங்கபத்திரா, கிருஷ்ணா என்ற இரண்டு நதிகளின் ஓரத்தில் தென்னாட்டு நாகரிகம், கலாசாரம், இலக்கியம், மக்கள் வாழ்வியல், மதங்கள், அரசியல் என்ற பல கோணங்களிலும் மக்களாட்சி என்ற நிலைக்கு அரசைக் கொண்டு சென்று அதுபற்றிய பெரும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. அதற்கான அடித்தளத்தையும் அமைத்தது. விஜயநகரம் கி.பி.1336 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, பெருநகரமாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. அதனுடைய எச்சங்களாக இன்றைக்கு ஹம்பி திகழ்கின்றது. இந்தப் பேரரசு கி.பி.1565 வரை கௌசால்யர்கள், காக்கத்தியர்கள், சோழர்கள், பாண்டியர்கள் போன்றவர்கள் அரசாண்ட பகுதிகளைத் தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு விரிந்திருந்தது. இந்த ஆட்சியில் இந்துக்களை அணிதிரட்டியது ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத் தொடர்புகளும் அதிகமாகவே அடர்த்தியாகவே இருந்தன.
கேரளத்தை நோக்கி படையெடுத்துச் சென்றபோது மலையாள அரசர் மிகவும் கீழே இறங்கி வேண்டிக் கொண்டதால், திருவாங்கூர் பக்கம் செல்லாமலேயே விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் இந்த எல்லைகளோடு நின்று கொண்டனர்.
விஜயநகர ஆட்சியைச் சொல்லும்போது, கிருஷ்ண தேவராயர்தான் கண்முன் வருவார். ஆனால் இந்த படைப்பில் பம்பா கம்பனா என்பவர்தான் நாயகி. இவள் 247 ஆண்டுகால ஒற்றை வாழ்க்கை என்பது பல வினாக்களை வாசகர்கள் மத்தியில் எழுப்புகிறது. இவள் இளவரசியா அரசியா கவிஞரா வரலாற்று ஆய்வாளரா என அறிய முற்படும்போது நம்முன் ஏற்படும் விசாலமான பார்வை வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு திசையில் சென்று இதற்கான தெளிவுகளையும், விடைகளையும் நாமே தேடிக் கொள்ள வேண்டியதுதான். அரசனுக்குப் பல மனைவிகள். அந்த நாட்டை நோக்கி போர் வருகின்றது. அரசன் கொல்லப்படுகின்றான். அரசன் மனைவிகள் அத்தனை பேரும் கணவனை இழந்துவிட்டார்கள் என்ற நிலையில் அத்தனை பேரும் சதியில் தங்களைத் தாங்களே எரித்துக் கொள்கிறார்கள். அந்தநிலையில் எரிந்த அரசனின் மனைவியின் மகள்தான் பம்பா கம்பனா.
இந்த கொடிய நிகழ்வுக்குப் பிறகு, பம்பா கம்பனா ஆற்றலும் தெய்வீக சக்தியும் வந்துவிடுகிறது. அதன் மூலமாக தன் யுக்திகளை வைத்து நகரத்தையும் நிலத்தையும் உருவாக்கி அந்த இடத்தில் மக்களை பம்பா கம்பனா படைக்கிறார். அத்தோடு இல்லாமல் அந்த மக்களின் பிறப்பின் நோக்கத்தை காதில் சொல்லி அந்த நகரத்தையும் மக்களையும் வளர்க்கிறாள். அரசர்கள் பிறக்கிறார்கள். ஆட்சிகள் நடக்கின்றன. பராக்கிரமங்களைப் பார் போற்றுகின்றன. போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கின்றது. சமயங்கள் வளர்கின்றன. கோவில்கள் கட்டப்படுகின்றன. கலைகள், இசைகள் வளர்கின்றன. இப்படி உச்சத்துக்குச் சென்ற அந்த ஆட்சியும் அந்த நகரும் அழிவதை அதே அரச வம்சத்தினர் கண்ணால் பார்க்கக்கூடிய நிலையும் வருகிறது.
இந்த நிகழ்வுகளை எழுதி ‘ஜெயா பர ஜெயா’ (ஜெயா என்றால் வெற்றி. பர ஜெயா என்றால் தோல்வி ) என ஏட்டில் தலைப்பிட்டு எழுதி பானையில் பாதுகாப்பாக மூடிவிடுகிறாள். பின்பு அதாவது யாரென்று தெரியாத அனாமதேயரால் கண்டுபிடிக்கப்படுகிறது. 2400 கவிதை நடை சொல்லாடல்கள் உள்ள இந்த ஆவணச் சுவடுகள் பின் அனைவரின் பார்வைக்கும் வருகிறது. இதைப் பற்றிச் சொல்வதன் மூலம் விஜயநகரப் பேரரசின் எழுச்சி, அது கடந்து வந்த விதம், அதனுடைய வீழ்ச்சி ஆகியவற்றை ருஷ்டி நம்முன் கொண்டு வருகிறார்.
https://www.facebook.com/100085887452567/posts/154274790778769/?d=w&mibextid=0cALme
#சல்மான்_ருஷ்டியின் ‘#விக்டரி_சிட்டி’
#விஜயநகரம்
#vijayanagaraempire
#hampi
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.
#KSR_Post
28-2-2023.
#Ksr_Voice
No comments:
Post a Comment