Wednesday, April 13, 2016

இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு - கி.ரா.

கி.ரா. என்ற முன்னத்தி ஏரை பின்பற்றும் வரிசையில் உதயசங்கர் அவர்கள் முக்கியமான ஆளுமை. கரிசல் காட்டின் தலைநகராம் கோவில்பட்டியின் பெருமைக்கு காரணமாக இருக்கும் திரு. Udhaya Sankar அவர்களுக்கும் மாரீஸ் அவர்களுக்கும் பாராட்டுக்கள். அண்ணன் S A பெருமாள் Sap Marx என்றும் அவருடைய நைனா கி.ரா.வை நெஞ்சில் வைத்து பாராட்டுவார். திருவாளர்கள். Kazhaneeyuran Kazhaneeyuran திரு. R Narumpu Nathan னும் இந்த படை வரிசையில் முக்கிய புள்ளியாவார். இப்படி கிரிஷி, தேவதேவன், எஸ்.எஸ். போத்தையா, சூரங்குடி முத்தானந்தம், பா.ஜெயப்பிரகாசம், தீப. நடராஜன் (தென்காசி), சோ. தர்மன் என்ற ஒரு நீண்ட பட்டியலே உண்டு. அதுவே ஒரு முழுப் பதிவாகிவிடும். இதில் உதயசங்கர் அவர்களின் கி.ரா. பற்றிய பதிவை திரும்பவும் பதிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கி.ரா. அன்பர்கள் பலரின் பெயர்கள் விடுபட்டுவிட்டன.

நன்றி: Udhaya Sankar



இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

உதயசங்கர்


அன்று மழை பெய்து கொண்டிருந்தது

மாரிஸும் நானும்

இடைசெவல் பேருந்து நிறுத்தத்திலிருந்து

நடந்து வந்து கொண்டிருந்தோம்

உங்கள் வீட்டிற்கு நயினா
..
கந்தகபூமியின்

கரிசல்காட்டு மக்களின்

மனசின் ஈரம் போல

வரவேற்றீர்கள் உங்கள் இசைக்குரலால்

ஓலைப்பாயில் மோளும்

ஓசையுடன் இலக்கிய சர்ச்சைகள்

ஆரவாரமான கூப்பாடுகள்

வசியம் செய்து

வசத்துக்கு கொண்டு வந்தீர்கள்

உங்கள் இனிய குரலால்

உங்களிடமிருந்து
புதிய தகவலோ வாழ்வநுபவமோ

முன்கூட்டியே

ஒரு மெலிதான செருமலை

அனுப்பி வைக்கும் எங்களுக்கு

இலக்கியத்தை மட்டுமில்லை

வாழ்க்கையையும் பார்ப்பது எப்படியென்று

வலிமையாகக் கற்றுக்கொடுத்தீர்கள்

உங்கள் மென்மையான குரலில்

2

இருளும் ஒளிரும்

விருவோடிய மண்ணை

வெறித்தபடி திரிந்தோம்

விரக்தியுடன் நாங்கள்

மெலிந்துயர்ந்த உருவத்தில்

அதிராத நடையில்

ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள்
ராமனுஜன்

என்று எல்லோருக்கும் அன்பான

எங்கள் நயினா நீங்கள் வந்தீர்கள்

கீற்றாய் சிந்திய புன்ன்கையுடன்

நீங்கள் கரிசல்க்காட்டை

உழுது வைக்கச் சொன்னீர்கள்

மழை வருமா என்றோம்

நீங்கள் எங்களிடம்

விதை விதைக்கச் சொன்னீர்கள்

முளைக்குமா என்றோம்

எங்களை வெள்ளாமைக்குத்

தயாராகச் சொன்னீர்கள்

வீடு வந்து சேருமா என்று சந்தேகப்பட்டோம்

தீர்க்கதரிசி நீங்கள்

மழை பொழிந்தது

விதை முளைத்தது

வெள்ளாமை வீடு சேர்ந்தது

வாய்மொழி இலக்கியமாம்

வட்டார இலக்கியமாம்

கரிசல் இலக்கியமாம்

என்று ஏகடியம் பேசிச் சிரித்தவர்கள்

இன்று தமிழுக்குப் பெருங்கொடையென்று

புல்லரித்து அலைகிறார்கள்

பிராமண வெள்ளாள மேலாண்மை

இலக்கியக் கரம்பைக்கட்டிகளை

உடைத்தது உங்கள் முன்னத்தி ஏர்

தமிழிலக்கியத்திற்கு

புதிய திசை காட்டினீர்கள்

தமிழையும் புதிதாக மாற்றினீர்கள்

புதிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது

இப்போது

3

மடிசஞ்சியான

மத்தியதர வர்க்க தமிழிலக்கியத்தில்

உழைக்கும் கிராமத்தான்களும்

உரிமை கோர வைத்தவர் நீங்கள்

விதவிதமான பசியை மட்டுமல்ல

கரிசல்க்காட்டு பண்டங்களின்

விதவிதமான ருசிகளையும்

சொன்னீர்கள்

கரிசல்ச்சீமையின்

புதிய எழுத்தாளர் படையை

அணி திரட்டியவர் நீங்கள்

கரிசல் இலக்கியத்தின்

மூலவர் நீங்கள்

உற்சவ மூர்த்தியும் நீங்களே

இப்போது வெக்கையும்

வியர்வையும் பொங்கும்

புதிய மனிதர்கள்

புதிய இலக்கியத்துக்குள்

நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்

4

தேசிய நெடுஞ்சாலையில்

கடக்கும்போதெல்லாம்

ஒரு குழந்தையின்

குதூகலம் பொங்கிவரும்

இடைசெவலைப் பார்க்கும்போது

எங்கள் ஞானத்தந்தை

சுற்றித் திரிந்த பூமியல்லவா

5

இன்னும்

ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

இதோ இடைசெவல் பஸ் நிறுத்தம்

உங்கள் வீட்டிற்கு

நடந்து கொண்டிருக்கிறோம்

நானும் மாரீஸும்

ஒரு நூற்றாண்டாய் மழை

பெய்து கொண்டிருக்கிறது

கனிவான சிரிப்புடனும்

கருப்பட்டிக் காப்பியுடனும்

நயினா வாசலில் நீங்கள்…

( கி.ரா.வுக்கு )


No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...