Thursday, April 28, 2016

கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி சிறையிலிருந்தே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார்

இது தேர்தல் நேரம். தியாக தழும்புகளோடு சிறையிலிருந்தே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர் பி. ராமமூர்த்தி ஆவார். சிறையில் விசாரணை கைதிகள் வாக்களிக்கவேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கையும் தாக்கல் செய்தவன் என்ற முறையில் இந்த செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தொழிற்சங்கத்தையும் தமிழகத்தில் வழிநடத்திய பி. ராமமூர்த்தி 1952 ஆம் வருடம் சிறையில் அடைக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாமல் மதுரை சிறையிலிருந்து வெற்றி பெற்றார்.  அப்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திய பி. ராமமூர்த்தி உடல்நலம் கெட்டு இரவில்தான் வெளியே வருவார். 1951ல் இவர் பம்பாய் செல்லும்போது கைது செய்யப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற இவரை எப்படியோ காவல்துறையினர் பிடித்துவிட்டனர். வழியில் அமலாபுரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது 1952 தேர்தல் நேரம். மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கினார் பி. ராமமூர்த்தி. மதுரையில் ஜவுளித் தொழிலாளர் பிரச்சினையிலும், மக்கள் பிரச்சினையிலும் ஈடுபட்டு மக்களிடம் செல்வாக்கை பெற்றார். 1952 தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் சிதம்பர பாரதியை காட்டிலும் 3332 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  பிரச்சாரத்திற்கு கூட போகாமல் சிறையிலிருந்தே வெற்றி பெற்ற இந்தியாவில் முதல் சட்டமன்ற உறுப்பினர். இந்தப் படத்தில், அம்பாசமுத்திரத்தில் தொழிற்சங்கப் பணியை துவங்கி பல்வேறு தியாகங்களை செய்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த தோழர் என். நல்லசிவம். இவர் எங்கள் நெல்லை மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி. என்னுடைய நூலுக்கு அணிந்துரையும் வழங்கியுள்ளார். இவரை திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் இருந்த கட்சி அலுவலகத்திலும், பின்பு தி.நகர் வைத்தியராம ஐயர் தெருவில் உள்ள அலுவலகத்திலும் பலமுறை சந்தித்து பேசியது உண்டு. அவர் அருகே அன்புக்கும், பாசத்துக்கும் உரிய அண்ணன் எஸ்.ஏ. பெருமாள், செம்மலர் ஆசிரியர், என் மீது அன்பு பாராட்டக்கூடியவர், சிந்தனையாளர், தமிழகத்தில் பல இலக்கிய படைப்பாளிகளை உருவாக்கியவர். இந்தப் படம் மொத்தத்தில் தியாகங்களின் அடையாளம்.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...