Saturday, January 19, 2019

பாஞ்சாலங்குறிச்சி சரிதம்’ வெளியீடு.

தலைவர் கலைஞர் தனது வாழ்நாளில் இறுதியாக நூல் அணிந்துரை எழுதிய‘பாஞ்சாலங்குறிச்சி சரிதம்’ வெளியீடு.
————————————————-
நேற்று(17/01/2019) இரவு 8 மணியளவில் சென்னை புத்தகக் கண்காட்சியில்,நான் பதிப்பித்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் வீரபாண்டிய கட்டபொம்மனின் கீர்த்தியையும், தெற்குச் சீமையின் வரலாற்றைச் சொல்லும் ‘பாஞ்சாலங்குறிச்சி சரிதம்’
வெளியிடப்பட்டது. தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் இந்த நூலை வெளியிட மாலன், ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், என்னுடைய சீனியர் வழக்கறிஞர் ஆர். காந்தி, ஜஸ்டிஸ். அக்பர் அலி, ஜஸ்டிஸ் வாசுகி, காங்கிரஸ் கட்சித் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா வழக்கறிஞர் சாந்தகுமாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் ப்ரியன், மை.பா.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 












உயிர்மை பதிப்பகத்தின் கவிஞர். மனுஷ்யபுத்திரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வு சிறப்பாக அமைந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நூல் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. கட்டபொம்மனின் வரலாறையும்,  ஜெகவீரபாண்டியரின் சிறப்பையும் இந்த நூலின் பதிப்புரையில் நான் எழுதியுள்ளேன்.







தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும், மூத்த வழக்கறிஞர் காந்தியும், இந்த மனுசன் ஒழுங்காக வக்கீல் தொழிலில் கவனம் செலுத்தியிருந்தால் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், ஐநா சபையில் வேலை கிடைத்து அங்கு போயிருப்பார் என்று அங்கு வந்த நீதிபதிகளிடம் கூறியபோது, நான் குறுக்கிட்டு, இப்போது என்ன ஆகிவிட்டது. நான் திருப்தியாகத் தான் இருக்கிறேன் என்றேன். பதவிகள் என்ற போக்கு மனிதனை மதிப்பளித்துவிடாது என்றேன்.
****
தலைவர் கலைஞர் தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது நூல் அணிந்துரை இந்த புத்தகக்குதான்......
அதில் தலைவர் குறிப்பிட்டுள்ள வரிகள் ......

‘’இந்த, ‘பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்’நூல் தமிழ் மக்களின் உணர்வுகளில் மிளிர்ந்திட உளமார வாழ்த்துகிறேன். 
தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய சிறந்த ஆற்றல் பெற்றவர்.’’
- கலைஞர். கருணாநிதி.

கழகத் தலைவர். தளபதிமு.க.ஸ்டாலின்
————————————————-
‘’திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித்தொடர்பு செயலாளரான அருமை நண்பர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பன்முகத்தன்மை திறமை வாய்ந்திடப் பெற்றிருப்பவர். வழக்கறிஞர், படைப்பாளி, களப் போராளி, இயற்கை ஆர்வலர், மனித உரிமை செயற்பாட்டாளர், வரலாற்று நூலாசிரியர், அரசியல் விமர்சகர் உள்ளிட்ட அவரது ஆளுமை மேலும் ஒன்றாக பதிப்பாசிரியர் என்ற ஆளுமையை ‘பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்’என்ற இந்த நூலின் வாயிலாக நிலைநாட்டியிருக்கிறார். வீரமிக்க வரலாற்றை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார், “பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்” என இருபாகங்களாக எழுதி 1947ஆம் ஆண்டு வெளியிட்டார். 
இரு பாகங்களையும் ஒருநூலாகத் தொகுத்து செம்பதிப்பாக நமக்கு வழங்குகிறார். பதிப்பாசிரியர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 

அவர் நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர். தாமிரபரணி உயிர்ப் பாலூட்டும் மண்ணுக்குச் சொந்தக்காரர் என்ற பெருமை கொண்டவர். தனது மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் “பொதிகை-பொருநை-கரிசல்” என்ற அமைப்பை தொடங்கியவர். நெல்லை வட்டார எழுத்தாளர்கள் - கலைஞர்கள் - படைப்பாளிகள் - அரசியல் ஆளுமையினர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்.

இது தாமிரபரணிக்காரருக்கு காவிரி பாயும் தஞ்சை மண்டலத்தவரான கலைஞர் மீது அதிக பற்று உண்டு. தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்றவர். காவிரிக் கரைக்காரரான தலைவர் கலைஞரும் தாமிரபரணி நதி தீரத்தின் மீதும் அந்த மண்ணின் வீரத்தின் மீதும் காதல் கொண்டவர். பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் நினைவுக் கோட்டை எழுப்பியவர் கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு குடியிருப்புகள் கட்டி தந்தவர். பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்தளபதி வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைத்தவர். வெள்ளையரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அதன் காரணமாக சிறையில் கொடூரத் தண்டனைக்குள்ளாகி செக்கிழுத்த நிலையில், அந்த செக்கினை மீட்டு, விடுதலைத் தழும்பாக பொதுமக்களின் பார்வைக்கு வைத்தவர்’’.
-தலைவர் எம்.கே.எஸ்.

 கி.ராஜநாராயணன்
—————————————
‘’எங்கள் ஊரில் உள்ள பஜனைக் கோயிலில் ஒரு பெரிய சந்தனக்கல் உண்டு. அதன்மேல் அந்தக் கல்லுக்கு பொருத்தமாக தடியான ஒரு சந்தனக்கட்டை இருக்கும். அந்தக் கல்லில் தண்ணீர் தெளித்து, இந்தக் கட்டையைத் தேய்ப்பார்கள். ‘கமகம’ என்ற மணத்துடன் பூசிக்கொள்ள சந்தனம் கிடைக்கும். சந்தோசமாக எடுத்துப் பூசிக் கொள்வார்கள். மற்ற கட்டைகளைவிட இந்தக் கட்டைக்கு மட்டும் ஏன் இவ்வளவு குளுமை, மணம் என்று கேட்டால் பெரியவர்கள் சொல்வார்கள்; இது ஜாதிசந்தனப்பட்டை; இப்படித்தான் அது தேய்ந்து மற்றவர்க்கு மணம் கொடுக்கும். இப்படி மற்றவர்களுக்கு குளுமையும், மணமும், ஆனந்தமும் தருவதினால், அந்த சந்தனக் கட்டைக்கு ஏதேனும் பயன் உண்டா?

எனது அன்புக்குரிய தம்பி திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணனை நினைக்கும்போதெல்லாம் அந்த சந்தனக்கட்டையின் நினைப்புதான் வரும் எனக்கு. “பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்” என்ற இந்த அரிய நூல் மறைந்துவிடாமல், தேடி எடுத்துப் பதிப்பித்த கே.எஸ்.ஆரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படி ஒரு நூல் இருக்கிறது என்பதே இக்காலத் தலைமுறை இளைஞர்களுக்கு தெரியாது.’’
-கிரா

 மாலன்
——————-

‘’எத்தனை பேர் கூடியிருந்தாலும் அங்குள்ள திருநெல்வேலிக்காரர்களை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். தேசபக்தி, தமிழ்மீது காதல், வரலாற்றின் மீது ஆர்வம், பிறந்த மண் மீது பெருமிதம். இவை அவர்களிடம் ததும்பி நிற்கும். அது அவர்களுடைய பூர்வீகச் சொத்து. சொந்த ஊரை விட்டு எந்த ஊர் போனாலும் எத்தனை தூரம் போனாலும் அது அவர்கள் கூடவே வரும்.
அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. தமிழர்களின் நாகரிகம் இங்குதான் ஆரம்பமானதற்கு அடையாளமாக ஆதிச்சநல்லூர் இருக்கிறது. பொதிகையில்தான் தமிழ் பிறந்தது எனச் சொல்கிற புராணங்களைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டாம் என்றே வைத்துக்கொண்டாலும், அந்த மலையில் வசித்த அகத்தியன் ‘நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்’ என்ற பாரதியின் சாட்சியத்தைப் பழங்கதை எனப் புறந்தள்ளிவிட்டாலும் ‘தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டான்’ எனத் திருவாசகம் செய்த மணிவாசகர் மறந்துவிட்டாலும் பாரதியையும் புதுமைப்பித்தனையுமா மறந்துவிட முடியும்?
இந்த நூலை வாசிக்க ஏதுவாக மீள் பிரசுரம் செய்ய முனைந்திருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு ஒரு தலைமுறையே நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அவரது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் நன்றி. 

கே.எஸ்.ஆர். சமூகத்திற்கு பயனுள்ள நூல்களைத் தொடர்ந்து தனது பொதிகை - பொருநை - கரிசல் மூலம் தந்து கொண்டிருக்கிறார். அவர் தந்துள்ள நூல்களில் இது ஒரு அரிய பொக்கிஷம்’’
-மாலன்

#கட்டபொம்மன் 
#ஜெகவீரபாண்டியனார் 
#பாஞ்சாலங்குறிச்சியின்வீரசரிதம் 
#kattabomman 
#bafasi 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-01-2019

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...