இன்று (07/01/2019) தினமணியில் இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவுக்கான இன்றைய, எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய முக்கிய பிரச்சனைளை குறித்தான என்னுடைய பத்தி வெளியாகிவுள்ளது. இந்திய அரசோ இதில் மௌனம் காத்து வருகிறது. இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ஆளுமை எதிர்காலத்தில் மறுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. அந்த பத்தி வருமாறு.
இந்து மகா கடலில் இந்தியாவிற்கு எதிர்வரும் அபாயங்கள்.
—————————————
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
இந்திய பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின் தூண்டுதலால் சிங்கள அரசு கைப்பற்றத் துடிக்கிறது. இதுகுறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஐ.நா.வில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும்பகுதியை தன் நிலத்திற்கு சொந்தமென உரிமை கோரி மனு அளித்துள்ளது. இந்திய பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது ஏறத்தாழ 200 மைல்கள் உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா.மன்றத்தில் முறையிட்டுள்ளது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகிறது.
இப்படியான சிக்கலில், ஏதாவதொரு போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் நேரடியாக கேரளம், தமிழகம்; குறிப்பாக குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகைவரை உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும். இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்சினை. இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புக்காக அடுத்த ஐ.நா அமர்விற்கு தள்ளிப்போட்டுள்ளது. இதே மாதிரியான மனுவை இந்திய அரசும் ஒருமுறை ஐ.நாவில் கொடுத்ததாக தகவல்கள் உள்ளன. சிங்கள தேசம் கைப்பற்றத் துடிப்பது குமரிக்கண்டத்தின் இந்திய பெருங்கடலின் பெரும் நீர்பரப்பையே.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக அதிபர் மைத்ரிபால சிறிசேனே ஆடிய ஆட்டங்களுக்கு அளவில்லை. அதை கண்டித்த உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா அந்த பிரச்சனைகளை கவனித்து வருவதாக கூறியது அதிர்ச்சியைத் தந்தாலும் இந்த விடயத்தில் இந்தியா கமுக்கமாகவே உள்ளது. ஏற்கனவே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போது இலங்கை, இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் துணையுடன் இந்து மகா சமுத்திரத்தில் தனது ஆளுமையை ஏறத்தாழ 350 மைல்களுக்கு விரிவாக்க வேண்டி முறையிட்டுள்ளது. வழக்கமாக சர்வதேச கடல் பகுதியில் ஒரு நாட்டின் ஆளுமையானது 200 மைல் தொலைவுக்கு தான் இயங்க முடியும். இது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. இந்த நிலை எதற்கு என்றால் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை அச்சுறுத்தவே சீனா இலங்கையை பகடைக் காயாக பயன்படுத்துகிறது.
அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கத்தில் சீசல்ஸின் டீகோகார்சியா பிரிட்டன் மூலமாக அமெரிக்கா குத்தகைக்கு எடுத்து ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்சும், ரஷ்யாவும் இந்த கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டங்களை தீட்டியுள்ளது. பெயருக்குத் தான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும், சீனாவும் வியாபாரத்திற்காகவும் (Silk Road), தனது போர்க்கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்தவும் மட்டுமல்லாமல் கடற்படை பயிற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. கச்சத்தீவு வரை சீனாவின் தேசியக் கொடிகள் பறந்தன. தற்போதைய நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, வங்காளதேசம் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. மாலத்தீவு மட்டும் இந்தியாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சூழலுக்கேற்றவாறு நடந்து கொள்கிறது.
இந்தியப் பெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் வல்லரசுகளின் வல்லாதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அமைதி மண்டலமாக இருந்த இந்த கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் புவி அரசியலில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.
நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர் நடந்தது. அவர் காலத்திற்குபின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இம்மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் தற்போதுள்ள சூழலில் ஏற்படுகின்றது. அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பெரும் துயர விளைவுகள் ஏற்பட்டுவிடலாம். எனவே இதை முன்கூட்டியே தடுக்கக் கூடிய வகையில் இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் இறையாண்மை காக்கக் கூடிய நிலையில் அயல்நாட்டுடைய அத்துமீறலை கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் தென் மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் வரலாம்.
பண்டித நேரு அவர்கள் தென் தமிழகம் அமைதியான பகுதி என்று நினைத்துதான் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தென்மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணினார். ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி இந்து மகா சமுத்திரத்தால் இந்தியாவிற்கு கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் கண்ணில்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரமும், அவசியமான பணியாகும். டீகோகார்சியா தீவில் பிரிட்டன், அமெரிக்காவும் ராணுவ தளங்களை அமைக்க வேண்டும் என்று 1969லிருந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியா, சோவியத் நாட்டின் ஆதரவுடன் கடுமையாக எதிர்த்ததால் இராணுவ தளங்கள் அமைக்க முடியவில்லை.
அப்போது, அமெரிக்கா, தனது ராணுவத் தளத்தை அமைப்பதற்காக, டீகோகார்சியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட மொரீசியஸ் நாட்டினர் வெளியேற்றப்பட்டனர். அந்தத் தீவுக்கு மொரீசியஸ் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக் காலம், சமீபத்தில் காலாவதியானது. எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை, வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது.இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மொரீசியஸ் அரசு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரபிக்கடலிலும், வங்கக் கடலிலும் பாதுகாப்பற்ற, மோசமான புவியரசியல் நிலை ஏற்படும்.
இந்தியப் பெருங்கடல் பிரச்சனையில் இயற்கை துறைமுகமான திரிகோணமலை துறைமுக சிக்கலையும் நாம் கவனித்தாக வேண்டும்.
திரிகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவைகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல இந்த திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் திரிகோணமலை துறைமுக்த்தில் இடம்பெறத் துடிக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா 1970களில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவும், எண்ணெய் கிடங்குகளும் அமைக்க, இந்த துறைமுகத்தை கைப்பற்ற கழுகுப் பார்வையில் இருந்தது. ஜப்பானும் இந்த துறைமுகத்தின் மேல் ஒரு கண் வைத்திருந்தது. இதற்கான நிலஅமைப்பை கொண்ட திரிகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இந்திரா காந்தி காலத்திலிருந்து திரிகோணமலை துறைமுகத்தையும் நிலஅமைப்பு ரீதியாக கவனித்தும் வருகிறது. இந்த துறைமுகத்துடன் இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும்.
இத்தோடு இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுக விவகாரத்தையும் இந்தியா கவனிக்க வேண்டிய கடமைகள் உள்ளது.
தென் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுக பங்குகள் சீனாவிற்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை இறுதி யுத்தத்திற்கு பிறகு தற்போது அங்கு செய்யப்பட்டு வரும் கட்டுமான வேலைகள் சீனாவின் முதலீடு அதிகளவில் உள்ளது. ஹம்பன்தோட்டா துறைமுக கட்டுமான பணிகளுக்கு சீனாவின் முதலீடு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன அரசின் துறைமுக வணிக குழுமத்திற்கு அம்பான்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை குத்தகை அடிப்படையில் 99 வருடங்களுக்கு இலங்கை அரசு அளிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஹம்பன்தோட்டா துறைமுகம் சார்ந்த பணிகளில் 1.1 பில்லியன் டாலர்கள் (6,500 கோடிகளை) சீனா முதலீடு செய்கிறது.
ஏற்கனவே இந்த துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற இந்தியாவின் கவலையை மீறி, இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி மற்றும் இலங்கைக்கான சீன தூதர் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி துறைமுக பாதுகாப்புக்கு இலங்கை கடற்படையே பொறுப்பு எனவும், அங்கு தளம் அமைக்க எந்த வெளிநாட்டு கடற்படைக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே போல மேலை நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்து மகா சமுத்திரத்தில் இருப்பதாக செய்தி வருகிறது.
“HSBC World in Forecast 2050” நடத்திய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price Water House Coopers (PWC) அறிக்கையில் இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. உலகமயமாக்கல் என்ற நிலையில் எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பல்வேறு நாடுகளின் கேந்திரப் பகுதியாகும் பட்சத்தில் பெரும் அபாயங்கள் நேரலாம்.
அமெரிக்காவும், இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தை மாற்றி இந்தியப் பெருங்கடலை அதோடு 2018இல் இணைத்து இந்தியாவை தன் வலைக்குள் போட்டுக்கொண்டது. இந்தியப் பெருங்கடலில் 13 முக்கிய கேந்திரத் துறைமுகங்கள் உள்ளன. கடல்சார் வணிக போக்குவரத்து, எண்ணெய் உற்பத்தி போன்ற பணிகளுக்கு உலக நாடுகளிடையே இந்த கடலில் போட்டிகள் உள்ளன.
தற்போதைய நிலையில் இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது.
நமக்கு நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாள், மியான்மார், வங்காள தேசம், இலங்கை என யாருடனும் சுமூகமான நட்புறவு இல்லை. இத்தகைய நிலையில் மாலத்தீவில் மட்டும் சுமூகமான உறவுள்ளது. இந்திய பிரதமர் மோடி மாலத்தீவு வளர்ச்சிக்கு வழங்கிய கடனும் ஒரு காரணமாக இருக்கலாம்.இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை இந்தியா கவனிக்காமல் புறக்கணித்தால் என்ன செய்ய…… ?
வல்லரசாக வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும் என்று நினைக்கும் நாம் நம் நாட்டின் தெற்கெல்லையில் உள்ள நமது கடல் ஆதிக்கத்தை இழக்கலாமா?
-செய்தித்தொடர்பாளர் - தி.மு.க
இணை ஆசிரியர் - கதைசொல்லி
பொதிகை - பொருநை – கரிசல்
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
07/01/2019
No comments:
Post a Comment