திருப்பாவை. மார்கழி 20.
******************************
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும், அவர்களுக்கு துன்பம் நெருங்குவதற்கு முன்னரே அவர்களைக்காக்கும் கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச்செய்பவனே! பகைவரை அடக்கும் வலிமையுடையவனே! பகைவருக்கு துன்பங்களைக்கொடுப்பவனே! உறக்கம் நீங்கி எழுந்துவாராய்! செப்பைப்போன்ற மென்மையான மார்பகங்களையும், சிறு இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து, உங்கள் மணாவாளனான கண்ணனையும் எங்களுக்களித்து நாங்கள் நீராடச்செய்வாயாக!
No comments:
Post a Comment