Friday, January 11, 2019

கவியோகி சுத்தானந்த பாரதி


கவியோகி சுத்தானந்த பாரதி
-----------------------
“காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
யாபதியும் கருணைமார்பின்
மீதொளிர்ச்சிந் தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார்இன்பப்
போதொளிர்பூந் தாமரையும் பொன்முடிசூ
ளாமணியும் பொலியச்சூடி
நீதியளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடுவாழ்க”
தமிழ்த்தாய் வாழ்த்தாக விளங்க வேண்டிய பாடல் இது. தமிழை தாயாக்கி அவளுக்கு அணிகலன்களாக பண்டைத் தமிழிலக்கியங்களை அலங்கரித்து அவளை, சர்வாலங்கார பூஷிதையாகப் போற்றிய இந்தப் பாடலை தமிழர்கள் எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் இந்தப் பாடலை எழுதியவரைத் தான் மறந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. தமிழாகவே வாழ்ந்த தவஞானிகளை, தமிழ்த் தியாகிகளை மறவாது அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
மேற்கண்ட பாடலை எழுதியவர் பாரதியார் என்றால் எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், இந்தப் பாடலை எழுதியவர் பாரதியார்தான். இன்னொரு பாரதியார். கவியோகி சுத்தானந்த பாரதியார்.
ஒரு மாணவர் தம்முடைய இளவயதில் இந்தப் பாடலை மனப்பாடம் செய்து மிகச்சரியான உச்சரிப்போடு தன்னிடம் வினவிய ஆசிரியரிடம் ஒப்பித்தார். ஆசிரியரின் அடுத்த கேள்வி, இந்த பாடலை எழுதியவர் யார்? என்பது. மாணவர் சரியாக, சுத்தானந்த பாரதி என்று சொன்னார். ஆனபோதும் அம்மாணவர் அறையப்பட்டார். காரணம் புரியாது விழித்த மாணவரை நோக்கி ஆசிரியர் சொன்னார், அப்படிச் சொல்லக் கூடாது. அவர்கள் எல்லாம் மிகப்பெரியவர்கள். அவரை மகரிஷி யோகி சுத்தானந்த பாரதியார் என்று தான் சொல்ல வேண்டும். பாடல் சரி. பாடலாசிரியரின் பெயரைச் சொன்ன முறை தவறு. அந்த ஆசிரியர் லாசதேவராயர் எனும் கிறித்துவர். அடிபட்ட மாணவர் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நேர்முக உதவியாளர் கவிஞர் மரு.பரமகுரு.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் சிவகங்கைச் சீமை என்றால் வீரர்கள் பிறந்த பூமி என்பர். விடுதலைப் போராட்ட வீரர்களான முத்துவடுகு, வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள் ஆண்ட பகுதி. இந்த சிவகங்கையில் 11/05/1897ஆம் ஆண்டு பிறந்தவர் சுத்தானந்த பாரதியார். இவர் தம்மை பற்றிக் கூறும்போது, சிவகங்கை ஜீவகங்கை என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். இவரது பெற்றோர் சிவிகுல ஜடாதர அய்யர் - காமாட்சி அம்மையார். காமாட்சி அம்மையார் தாலாட்டுப் பாடல்களைப் போலவே மகாபாரத, ராமாயணக் கதைகளைச் சுயமாக கூடியவராக இருந்தார். குழந்தைகளுக்கு உணவூட்டும்போது இப்பாடல்கள் தவறாது பாடப்படும். தந்தையோ வேதவித்தகராகத் திகழ்ந்தார்.
மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் வர்தம் குடும்பத்தில் முதல் அண்ணனுக்கு வக்கீல் தொழில். விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக மட்டுமே வாதாடக் கூடியவர். கதராடையின் மீது ஈர்ப்புள்ள இவர் தானே கதர்நெய்து அணிந்து கொள்வார். தேசியத்திலும் அருளுணர்விலும் ஊறித் திளைத்த இக்குடும்பத்தில் சுத்தானந்த பாரதியார் தமிழ் உணர்விலும் யோக நெறிகளிலும் ஊறிச் செழித்தார்.
இவர்தம் சீடரான கம்பரசம்பேட்டை அமரர் ஸ்ரீபா. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மகரிஷி குறித்த செய்திகளை நினைவலைகளை தன் கையேட்டில் குறித்து வைத்துள்ளார்.
கருவில் இருந்தபோது இவரின் தாயார் காமாட்சியம்மாள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வதா என கருதி எரியும் கற்பூரத்தை அப்படியே விளங்கினாராம். அன்றிரவு கனவில், ‘கற்பூர நெருப்பால் இந்த உலகிற்கு உருவாகும் பேரொளியை அணைக்க இயலுமா? அவன் உலகில் யோகியாய் பெருஞ்சுடர்விடுவான் என்ற அசரீரி எழுந்தது. இவ்வாறு கருவிலே திருவுடையவராகப் பிறந்தவர்தாம் சுத்தானந்த பாரதியார்.
காட்டுப்புத்தூரிலும், தேவக்கோட்டையிலும் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். அந்த காலகட்டங்களில் சாரண இயக்க விழாக்களில் ஆசிரியராகவும் இருந்து நாட்டு விடுதலையைத் தூண்டக்கூடிய தேசிய பாடல்களை இசையோடு பாடி பயிற்றுவித்திருக்கிறார்.
தன் தாய்வழிப் பாட்டனாரான பூரணாந்ந்தரிடம் யோகக் கலையை கற்றுக் கொண்ட சுத்தானந்த பாரதியாருக்குத் தமிழ்ப் பயிற்றுவித்தது புலவர் தெய்வசிகாமணி அய்யர் ஆவார். இமாலய மகான் ஞானசித்தர் இவருக்குச் சுத்தானந்தம் என்னும் பெயரை வழங்கி உபதேசம் செய்வித்தார்.
சிருங்கேரி பாரதி ஸ்வாமிகள் இவருக்கு கவியோகி என்றும் பாரதி என்றும் சிறப்புப் பட்டம் வழங்கினார். இவருக்கு மகரிஷி பட்டம் அளித்தவர் சுவாமி சிவானந்தர் ஆவார். சீரடி சாய்பாபா இவருக்கு பராசக்தி மந்திரத்தை உபதேசித்து, அது அவரிடம் என்றும் திகழுமாறு காதைச் சுற்றிலும் தலையில் காவித் துணியை கட்டுவித்தார்.
தம்காலத்தில்  வாழ்ந்த அரிய ஞானிகள் அனைவரோடும் தொடர்பு கொண்டிருந்தார் சுத்தானந்த பாரதியார். ரமணார்தாம் தன்னிறைவு பெறச் செய்திருக்கிறார். சேஷாத்திரி சுவாமிகள் சித்தர் பாபா ஆகியோர் இவர்தம் ஆன்மீக வளர்ச்சிக்கு உரமிட்டவர்கள் எனலாம்.
திலகர், காந்தி, நேதாஜி,.வே.சு ஐயர், சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா சுப்பிரமணிய பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர பிரதாப், தமிழ்த் தென்றல் திரு.வி.கா. போன்றோர் இவரது தேசியப்பற்று உறுதுணை ஊட்டினார்கள்.
காந்திஜியைக் குருவாகப் பாவித்து கிராமப் பணி, கதர்ப்பணி, மதுவிலக்கு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்பலி தடுத்தல், பெண்கள் மறுவாழ்வு அவர்தம் கொள்கைகளை நிலைநாட்ட விருப்பத்தோடு தொண்டு செய்திருக்கிறார்.
புதுச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் 20 ஆண்டுகள் மௌனத் தவம் மேற்கொண்டு பாரத சக்தி மகா காவியத்தை எழுதினார். அதைப் படிப்பவர் கவிதை வீச்சும், தேசக் கனலும் தெய்வீகமும் தமிழ் மேல் ஆராக்காதல் ஏற்படும் என்பது உறுதி எனலாம். பாரதசக்தி மகாகாவியம் 50 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு படைப்பிலக்கியம். தஞ்சை தமிழ் பல்கலைகழகம் முதல் ராஜராஜன் விருதை இந்த நூலுக்கே அளித்தது யோகசித்தி என் ஆங்கில வடிவத்தையும் சுத்தானந்தர் இது The Gospel of Perfect Life எனும் பெயரில் இயற்றியுள்ளார். இவர் 1984 இல் தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றுள்ளார். அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், "பாரத சக்தி மகாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.
யோகசித்தி பிரெஞ்சு, சமஸ்கிருத மொழிகளில் வெளிவந்துள்ளது. கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவு பரிசு பெற்றது. அந்நாட்களில் பிரெஞ்சு நாட்டிலிருந்து ஸ்ரீஅரவிந்தரின் சீடராகவும் அன்னையாகவும் விளங்கிய அவர்களிடம் தினம் ஒரு பாடல் எழுதி அன்னைக்கு சமர்ப்பித்தார். இச்செய்தி அவர்தம் பெயர்த்தி முறை கொண்ட ஆரோவில் கவிஞர் இரா. மீனாட்சி அவர்களின் வாய்மொழி குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகும். விடுதலை போராட்ட வீரர்களின் புகலிடமாகவும், கூடாரமாகவும் விளங்கிய புதுவையில் சுத்தானந்தர் பக்தியை போலவே நாட்டுப் பற்றையும் விதைத்தவர் என்கிற செய்தி கிடைக்கிறது.
ஆயினும் அவர் புதுவையில் இருந்த காலத்தில் மகாகவி பாரதியாரை சந்தித்தது குறித்த பதிவுகள் ஏதும் கிடைக்கப் பெறாது நமது துரதிர்ஷ்டமே. 20 ஆண்டுகள் மௌனவிரதம் காத்து வந்த சுத்தானந்தர் இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டில் தன் மௌனத்தை கலைத்து சுவாமி சிவானந்தர் முன்னிலையில் ரிஷிகேசத்தில் சுதந்திரதின சொற்பொழிவு செய்திருக்கிறார்.
தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். பல சமயங்களில் இருந்து மகாகவி பாரதியாரைப் போலவே உரிமை காட்டி ஒற்றுமைப்படுத்தி ஆதரித்துவந்த இலக்கணம் உட்பட்ட மரபுக்கவிதைகள் தொடங்கி, உரைநடை, நூல்கள், தத்துவ, நூல்கள், யணநூல்கள், வாழ்க்கை, வரலாறு, நாடகம் திறனாய்வு நவீன சிறுகதை அறிவியல் நாட்டிய ஸ்ரீ பாடல்கள் கீர்த்தனைகள் போன்ற பல்துறைகளிலும் நூல்களை இயற்றியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தென்பகுதி தமிழகத்தில் நடந்த வீரர்களை கொண்ட மருது சகோதரர்களை கதைமாந்தர் ஆக்கி சுதந்திரக் கனல் என்ற நாவலை எழுதியுள்ளார் இவர்தான் பாடல்களை பட்டம்மாள். /சந்தகோகிலம் ஜெயராமன் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடியுள்ளனர் வான்புகழ் வள்ளுவர் அதே அளவில் சந்தமும் பொருளும் குன்றாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். இம்மொழிபெயர்ப்பு செய்த தகுதி வாய்ந்தவர் என்று சுத்தானந்த பாரதியாரை அறிஞர் அண்ணாவே முன்மொழிந்து இருக்கிறார். 1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் அப்புத்தகம் கழகத்தால் வெளியிடப்பட்ட துறவிகள் கடல் கடந்து செல்வது கூடாது என்ற கருத்து நிலவிய காலத்தில் உலக நாடுகள் பலவற்றை வலம் வந்திருக்கிறார். ஜெனிவா நகரில் நடந்த உலக அமைதி மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறார். ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் இவர் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி வைக்கிறார். 1977ம் ஆண்டு சிவகங்கை அருகில் அமைந்த சோழபுரம் கிராமத்தில் சுத்தானந்த யோக சமாஜம் என்ற அமைப்பை நிறுவினார். 1979ஆம் ஆண்டு சுதேசிய வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பள்ளியை நிறுவி அதன் அருகிலேயே தன் குடிலை அமைத்துக் கொண்டு வாழ்வை தொடர்ந்தார். தமிழை மகுடத்தில் ஏற்றி வைத்த கவிஞர் மகாயோகி திருக்குறளை அதன் சுவை குன்றாது ஆங்கிலத்தில் ஆக்கித்தந்த அறிஞர் மகாசக்தி காவியம் எழுதிய தேசியச் செம்மல் தமிழ் மொழி இலக்கியத்தை நோபலின் தரத்திற்கு உயர்த்த பன்மொழி படைத்தளித்த பேராசான். இன்றைக்கு யாரும் அறியாத நிலையில் அவர்தம் நூல்கள் எங்கும் கிடைக்காத நிலையில் மறக்கப்பட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது இவர் எழுதிய ஆயிரம் நூல்களில் இன்று ஒன்றோ, இரண்டோ எங்கோ பதிப்பிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கலாம். நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னர் அவரையும் காணவில்லை தேடிய வரையிலும் பாடப் புத்தகங்களில் எங்கும் இவர் குறித்த செய்திகளே இல்லை வரலாற்று களஞ்சியங்களை தேடி படிப்பவர்களுக்கும் ஏதோ சில செய்திகள் கிடைக்கப் பெறுகின்றன. இணையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம் ஜெயசேகரன் என்னும் பெயரிலான இணையதளமும் குறித்த செய்திகளை திரட்டி தந்திருக்கின்றன. நூற்றாண்டு விழாக் கொண்டாடும் காலம் மே 11 நாளன்று 122 வது பிறந்த நாள் ஆகும் தமிழை செம்மொழியாக பன்மொழிகளிலும் அதனை உருவேற்றி அந்த தமிழ்நாயகி அவர் தம் படைப்புகளை பரப்புவதே சரியான கைமாறாகும்.
தமிழுக்கு தொண்டு செய்த இவர் போன்ற மகா பேரறிஞர்களை போற்றவேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டவேண்டும் சிலை வைத்து வேடிக்கை பார்ப்பதை விட வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவும் அவர்தம் வாழ்க்கை வரலாற்றை புகட்டவேண்டும் அவருடைய நூல்களை மலிவுவிலையில் யாவர்க்கும் சென்று சேரும்விதமாக பதிப்பித்து பரப்ப வேண்டும்.
இன்பமே சூழட்டும், எல்லோரும் வாழட்டும்.

#சுத்தானந்த_பாரதியார்
#KSRpostings

#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-01-2019

1 comment:

  1. தமிழ்த் தாய் பற்றிய ஒரு பாடல் போதுமே...மிக மிக மகிழ்ச்சி

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...