வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் அமையவுள்ள இராஜபாளையம் - செங்கோட்டை
நான்குவழிச் சாலை
-------------------------------------------------
தரிசு நிலங்களைப் பயன்படுத்தி புதிய திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள்
மத்தியில் வரவேற்பு கிடைக்கும். ஆனால், இராஜபாளையம்-செங்கோட்டை வழித்தடத்தில் அமையவுள்ள நான்குவழிச்
சாலையால் (என்எச்.744) ஆயிரக்கணக்கான ஏக்கர்
விவசாய நிலங்கள், பல நூறு கிணறுகள், பல்லாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாகவே, பல்வேறு நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்களை எளிதில்
அணுகும் வகையிலும், பயண நேரத்தை
குறைப்பதற்காகவும் நான்கு மற்றும் 8
வழிச் சாலைகள் அமைக்கப்படுவது வழக்கம். அதேபோல, தமிழகத்தையும், கேரளத்தையும்
இணைக்கும் வகையில், திருமங்கலம், செங்கோட்டை வழித்தடத்தில்
சுமார் 147 கி.மீ. தொலைவுக்கு
நான்குவழிச் சாலை அமைக்க அரசு முடிவு செய்து அதற்கான ஆணையும்
பிறப்பிக்கப்பட்டுவிட்டது.
முதற்கட்டமாக இராஜபாளையம், சத்திரப்பட்டியிலிருந்து, செங்கோட்டை வரை சுமார் 69 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள்
தொடங்கியுள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியானது முதற்கொண்டே விவசாயிகள் இத்திட்டத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைக்க வேண்டாம் என சொல்லாமல், ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்ட
பகுதி வழியாக சாலை அமைக்காமல், ஆயிரக்கணக்கான
விவசாய நிலங்கள் வழியாக சாலை அமைக்க வேண்டிய அவசியம் எதற்கு என்று விவசாயிகள்
தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதுடன், அடுத்தடுத்த
போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
கடையநல்லூர், சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட
வட்டங்களிலுள்ள கிராமங்கள்,
நிலங்கள், கிணறுகள் வழியாகத்தான் புதிதாக
அமைக்கப்படும் சாலை செல்கிறது. இதனால், விவசாயமே
கேள்விக்குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக நான்குவழிச் சாலை எதிர்ப்பு விவசாயிகள்
கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டு, சாலை
அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை
மனுக்களையும் இந்த அமைப்பினர் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், புதிதாக அமையவுள்ள
சாலையால் கடையநல்லூர், காசிதர்மம், அச்சன்புதூர், வடகரை, பண்பொழி, புளியரை
சொக்கம்பட்டி பகுதிகள் பாதிப்படைவதாக கூறுகின்றனர். நான்குவழிச்
சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்காக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகின. இதைத்
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறையை
அணுகி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், எந்தவித அறிவிப்புமின்றி விவசாயிகளுக்கு சொந்தமான
இடங்களில் அளவுக் கற்கள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர்.
எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கல் நடுவதை நிறுத்தவில்லை.
சாலை அமைக்கப்படும் கடையநல்லூர், காசிதர்மம், அச்சன்புதூர் ஆகிய
கிராமங்களில் 2 போகம் நெல் விளையும்
நிலங்களும், தென்னை, மா தோப்புகளும் உள்ளன. வடகரை, பண்பொழி, புளியரை பகுதிகளில் 3 போகம் நெல் விளையும் நன்செய்
நிலங்களும், மா, பலா, நெல்லி, தேக்கு, வாழை, பாக்கு சாகுபடியும் உள்ளது.
சொக்கம்பட்டியில் தென்னை மரத்தோப்புகளும், வீடுகளும் உள்ளன. இந்த புதிய சாலையால் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள்
பாதிக்கப்படுவதுடன்,
200-க்கும்
மேற்பட்ட கிணறுகள், நூற்றுக்கணக்கான
ஆழ்குழாய் கிணறுகளும் பாதிக்கப்படும். அதையும் தாண்டி, மேற்குத் தொடர்ச்சி மலையின் நீராதாரங்களும் வீணாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில், உயிர்ப்பன்மை
செறிந்துள்ள இடங்களை உள்ளடக்கி நெல்லை வன உயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில், அந்தப்
பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ.
சுற்றளவுக்குள் திட்டங்கள் எதையும் செயல்படுத்தக் கூடாது என தெளிவுரைகள்
இருக்கும்போது, புதிய சாலையை அமைக்க
இந்தப் பகுதியை ஏன் தேர்வு செய்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
ராஜபாளையம், செங்கோட்டை
நான்குவழிச் சாலை அமைப்பதற்காக முன்பு தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தை (பாம்புக்
கோவில்சந்தை-ஆய்க்குடி) மாற்றி புதிய வழித்தடத்தை தேர்வு செய்ததன் நோக்கம்
தெரியவில்லை. பழைய வழித்தடத்தில் அமைத்தால் பயண நேரம் வெகுவாக குறைவதுடன், சாலையை நேராக, வளைவுகள் இல்லாமல் அமைக்க
முடியும்.
மேலும், அந்த வழித்தடத்தில்
விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், அதை கைவிட்டு விவசாயிகளை பாதிக்கும் புதிய வழித்தடத்தை
உருவாக்கியிருப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஏற்கெனவே, மலையிலிருந்து
யானை உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி
வரும் நிலையில், புதிய சாலையால் இந்த
விலங்குகள் இடம்பெயர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து மனிதர்கள் மற்றும்
வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை தாக்கும் அபாயமும் ஏற்படும்.
இதற்கிடையே, விவசாயிகள் பலர்
வனத்துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பி பதில்
பெற்றுள்ளனர். நெல்லை வன உயிரின சரணாலயத்துக்கும், சிவகிரி-உள்ளாறு வரையுள்ள என்எச்.744 சாலைக்கும் இடையே உள்ள தூரம் 6 கி.மீ. எனவும், சாலை அமைப்பது தொடர்பாகவும், பாலங்கள் கட்டுவது
தொடர்பாகவும் எந்தவித அனுமதியும் வனத்துறையால் வழங்கப்படவில்லை எனவும், தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் வனத்துறை தெரிவித்துள்ளது. வன உயிரின சரணாலயத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவிற்குள்
எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்ற நிலையில், இந்த சாலை 6 கி.மீ. தொலைவுக்குள்
அமைக்கப்படுவது எப்படி? என்ற கேள்வியை
விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் இந்த புதிய திட்டத்தால் பெரும்
பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே, விவசாயிகளை
பாதிக்காத வகையில் சாலை அமைக்கப்பட வேண்டும்.
#Rajapalayam_Sengottai_4_ways_road
#ராஜபாளையம்_செங்கோட்டை_4_வழிச்சாலை
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-01-2019
No comments:
Post a Comment