*
*
----------------------
மஞ்சப்பை, மஞ்சப்பை என்று நையாண்டி பண்ணியவர்களும் இனிமேல் துணிப்பையை தூக்க வேண்டியது தான். இன்று முதல் தமிழகத்தில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையாகிவிட்டது. ஒரு விதத்தில் உடல் ஆரோக்கியம், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு நல்லது என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த தடை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன்படி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை அதிமுக அரசால் விதிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது.
இதனால் தெர்மகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள், கேரிபேக், விரிப்புகள், துணிகள் போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும். இனி துணி, சணல் பைகள், மண் சட்டிகள், பீங்கான் பாத்திரங்கள் அதிகம் பயன்பாட்டுக்கு வரும். பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படலாம். நீதிமன்றம் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்குமாறு தமிழக அரசிடம் அறிவுறுத்தியிருந்தது.
எனக்கு தெரிந்த நினைவின்படி; முதன்முதலாக 1969இல் உலகத் தொழில் பொருட்காட்சி, இன்றைக்கு இருக்கும் அண்ணா நகர் டவர், ரவுண்டானா அருகில் அன்றைக்கு விவசாய நிலங்களாக இருந்த இடத்தில் நடைபெற்றது. அந்த பொருட்காட்சியில் ஜெர்மனி அரங்கம் வெள்ளை பிளாஸ்டிக் பையில் ஜெர்மனி நாட்டின் முத்திரையோடு பொருட்கள் வாங்கும் போது பிளாஸ்டிக் பை கொடுக்கப்பட்டது. அதுதான் நான் முதன்முதலாக பார்த்த பிளாஸ்டிக் பை ஆகும்.
முன்பெல்லாம் பண்டங்களை பனை ஓலை பெட்டி, செய்தித்தாளில் கூம்பு வடிவில் சணல் வைத்து கட்டித் தருவார்கள். இதை குறித்து சமூக வலைத்தளங்களில் பலமுறை பதிவு செய்திருந்தேன். பிளாஸ்டிக் தடையையொட்டி ஓலைப் பெட்டிக்கும், மஞ்சள் பைக்கும், பழைய செய்தித்தாளுக்கும் மாறிவிட்டது சுற்றுச் சூழலுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்புடையதே.
#மஞ்சப்பை
#பனையோலை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
01-01-2019.
No comments:
Post a Comment