Tuesday, February 2, 2021


------------------------
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார்,
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று,
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் !
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் ! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
----------------
பதவுரை
புள்ளின் – பகாஸுரனுடைய, வாய் – வாயை, கீண்டானை – இருபிளவாய்ப் பிளந்தவனும், பொல்ல – பிராட்டியைப் பிரித்ததாகிற பெரும் பாபத்தை உடையவனும் துஷ்டனுமான, அரக்கனை – ராவணனாகிற ராஷசனின், கிள்ளிக்களைந்தானை – (பத்துத்தலைகளையும்) புல் மாதிரி கிள்ளி எறிந்து பொகட்டவனான சக்ரவர்த்தித் திருமகனுடைய, கீர்த்திமை – வீரசரித்ரங்களை, பிள்ளைகளெல்லாரும் – எல்லாப் பெண்களும் பாடி ப்ரீதிக்குப் போக்கு வீடாகப் பாடிக்கொண்டு, போய் – அதுவே வழிக்குத் தாரகமாய்ச் சென்று, பாவைக் களம் – க்ருஷ்ணனும் தாங்களும் சேருவதன் நிமித்தம் ஸங்கேதித்துக் கொண்ட இடத்தில், புக்கார் – புகுந்தனர், எழுந்திரு என்ன, (அவர்கள் போவதர்குப் பொழுது புலர்ந்ததோ என அவள் கேழ்க்க), வெள்ளி – ஸுக்ரன், எழுந்து – உச்சமாகி, வியாழம் – ப்ருஹஸ்பதியும், உறங்கிற்று – அஸ்தமநமாயிற்று (விரஹிகளான உங்களுக்கு நஷத்ரமனைத்தும், வெள்ளியும் வியாழமுமாகவே புலப்படும், எனவே வேறு அடையாளங் கூறுங்களென்ன,) புள்ளும் – பஷிகளும், சிலும்பினகாண் – கூவிச்சென்றன, போது – பூவையும், அரி – மானையும் (போன்ற), கண்ணினாய் – கண்ணழகை ம்ருதுத்தன்மையளான நீ, நன்னாளால் – க்ருஷ்ணனுடன் ஜலக்ரீடை செய்து, அவன் மடியில் சாயும் காலமான இந்நாளில், குள்ளக்குளிர – வவ்வலிடும்படி, குடைந்து – நீரினுள் புக்கு, நீராடாதே – ஸ்நாநம் பண்ணாமல், பள்ளி – க்ருஷ்ண ஸ்பர்ஸுமுள்ள படுக்கையில், கிடத்தியோ – தூங்கிக்கிடக்கிறாயோ, கள்ளந்தவிர்ந்து – க்ருஷ்ணகுண, சேஷ்டிதங்களை நினைத்துத் தனியே கிடப்பதான வஞ்சனையை விடுத்து, கலந்து – எம்முடன் கூடியின் புறதற்குப்பராய் என்கிறார்கள்.
“பறவை உருவெடுத்து வந்த பகாசுரனின் வாயைக்கிழித்துக் கொன்ற கண்ணனை, இராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளியெறிந்து, அவனை வதம் செய்த இராமனைப் போற்றிப்பாடி, நோன்பு நோற்க அனைத்துப் பெண்களும் வந்து சேர்ந்துவிட்டனர்..!
வெள்ளி எழுந்து வியாழனும் மறைந்துவிட்டது..!
காலைப் பறவைகள் ஆரவாரிக்கின்றன..!
தாமரை மலர் போன்ற கண்களையுடைய அழகிய பெண்ணே..உள்ளமும் உடலும் குளிரும் வண்ணம், குளிர்ந்த நீரில் நீராடுகிறோமே எங்களுடன் சேர்ந்து நீராடாமல், படுக்கையில் நீ கிடந்து உறங்கலாமோ?”
என்று தோழியைத் துயிலெழுப்புகிறாள் கோதை.!
நம் கண்ணழகு கண்டு கண்ணன் தானே நம்மைத்தேடி வருவான் என்று செருக்கோடு கிடக்கும் ஒருத்தியை எழுப்புவதாய் அமைவது இப்பாட்டு.
கிருஷ்ணாவதாரத்தில் கம்சனால் ஏவப்பட்டுக் கொக்கு வடிவாய் வந்த பகாசுரனை வாய் கிழித்துக் கொன்றான். இராமவதாரத்தில் பொல்ல அரக்கனை இலை கிள்ளுமாறு விளையாட்டாய் அழித்தான். அத்தகைய பெரிமானின் தீரச்செயல்களைப் பாடிக்கொண்டு ஆயர்குலச் செல்விகள் எல்லோரும் பாவைநோன்புக்கு உரியகளம் சேர்ந்து விட்டார்கள். ‘நீயும் வர வேண்டுமே’ என்று அழைக்கின்றார்கள்.

அப்போது செருக்கு மிக்க அவள், ‘போது விடிந்ததோ? எனக்கேட்க, வெள்ளி முளைத்து வெகுகாலம் சென்றுவிட்டது என்றார்கள். உங்களுக்கு வெள்ளிக்கும் வியாழனுக்கும் வேறு விண்மீன்களுக்கும் வேறுபாடு தெரியுமோ? விடியலுக்கு வேறு அடையாளம் சொல்லுங்கள்’ என்று உறங்குபவள் கேட்கிறாள்.
‘அடி, பெண்ணே, பறவைகளும் ஒலித்தனவே, அறியாயோ?’ என்றார்கள். ‘பறவைகளும் பொழுதறியாது கூவுகின்றன’ என்று வழி திறவாது மொழி கூறாதும் கிடந்தாள். அதுகண்டு மனம் வெதும்பிய ஆயர்குலப் பெண்கள், ‘மலர்களைப் போல் அழகியதாய்ச் செவ்வரி படர்ந்த கண்ணழகு உனக்கு உண்டு. அதன் கவர்ச்சியால் கண்ணனே இங்கு வருவான் என்ற செருக்கினால் அன்றோ இவ்வாறு கிடந்தாய்? அக்கண்ணழகால் கண்ணனைக் கவர்ந்து எங்களுக்கு அருள்வாய் என்றல்லவா கருதியிருந்தோம்’ என்று கடிந்து கொள்கிறார்கள்.
‘அதுதான் போகட்டும். கதிரவன் உதிக்கும் சமயமாகிவிட்டது. அதனால் ஆற்றுநீர் கொதி நீராகுமுன் குளிர்ந்த தண்ணீரில் குடைந்து நீராடலாம் வா. பாவையே, இது கண்ணன் புகழ்பாடிப் பரவும் மங்கல நாள் அல்லவா? கண்ணனுடைய அழகையும், அணிநலன்களையும் தனியே எண்ணித் திளைக்கும் கபடத்தனத்தைக் களைந்து விட்டு எல்லோரோடும் கலந்து நோன்பு நோற்க வருவாயாக’ என்று ஆதுரத்தோடு அவனை அழைக்கின்றார்கள் ஆயமடமகளிர்.
இராமவதாரச் சிறப்பைச் சொல்லி விட்டீர்களே என்பார்க்குக் கிருஷ்ணாவதாரச் செயலையும் சேர்த்துத்தான் சொல்கிறோம் என்பார் போன்று ‘புள்ளியின் வாய் கீண்டான்’ புகழ் கூறத் தொடங்குகின்றார்.
அவ்வாறாயின் இராமபிரான் பற்றி மீண்டும் கூறுவானேன் எனில், தங்களோடு ஒத்த பிராட்டி பிரிவு பெறாத சிறப்புடையதன்றோ இராமவதாரம் என்று கருதிக் கூறினார்களாம்.
விபீடணன் போன்ற நல்ல அரக்கரும் உண்டென்பதனாலே ‘பொல்ல அரக்கன்’ என்றார்களாம். ஒன்றியிருந்தாரைப் பிரிந்த கொடுமைக்காரன் என்பதால் இராவணனைப் பொல்ல அரக்கன் என்று மொழிகின்றார்கள். இராமன் வீரம் எல்லாரும் அறிந்ததுதானே எனில் இராவணன் பெருமாளின் வீரத்திற்கும், அவன் தங்கை அவர் அழகிற்கும், அவன் தம்பி அவர் கருணைக்கும் இலக்கானது போல காதல் வசப்பட்டு நின்ற ஆயர்மகளிர்க்கு ஆறுதல் மந்திரமாயிற்று அவன் பெயர் என்பதால் கூறினார்கள்.
’பிள்ளைகள்’ என்றது வயதால் சிறியவர்களும் சென்றுவிட்டார்கள் என்று உணர்த்துவதற்காக. திரளும் இடத்தை நெற்களம், போர்க்களம் என்றாங்கு நோன்பு நோற்கும் பெண்கள் திறளும் இடம் என்பதாலேயே பாவைக்களம் சென்றார்கள்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
27-12-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...