Tuesday, February 2, 2021

———————————————————-
வட்டார வழக்கின் தொன்மையைப் பாதுகாக்க வேண்டும். தனித்தமிழ் இருந்தாலும் வட்டார வழக்கு சொற்கள் நம் நாகரிகத்தின் நம் பழக்கவழக்கத்தின் அடையாளமாக திகழ்கின்றது என்பதை தொடர்ந்து பதிவு செய்கிறேன். மதுரைக்கு தெற்கே திருநெல்வேலி வரை உள்ள பகுதிகளில் கிராமங்களில் வழக்கத்திலுள்ள சொற்கள் வருமாறு.
1. இறவாப்பெட்டி – கனண்மாயில் நீர்வற்றியபின் தகரப்பெட்டியில் கயிறுகட்டி நீரை இறைக்கும் கருவி.
2. களைக்கொட்டு – களை நீக்கப் பயன்படும் மிகச்சிறிய அளவிலான மண்வெட்டி.
3. காவெட்டா இருக்கு – காயாக இருக்கிறது.
4. சூடு அடித்தல் – களத்து மேட்டுக்குக் கொண்டு வரப்பட்ட நெற் தாளிலிருந்து நெல்லைப் பிரித்தெடுத்தல்
5. கொப்பரை – வெல்லம் காய்ச்சப்பயன்படும் வாய் அகன்ற பெரிய கலன்.
6. நாநடுகை – வயலில் முதன்முதலில் நெல் நாற்று நடுதல்.
7. பட்டம் கட்டுதல் – கரும்பு விரிந்த நிலையில் வளரும்போது அதன் தோகை கொண்டு அதனைக் கட்டிவிட்டு உரம் வைக்கும்முறை.
8. பண் அரிவா – பல்லுப் பல்லாக புல் மற்றும் நெல் அறுக்கப் பயன்படும் அரிவாள்.
9. பரம்பு – மேடு பள்ளமாக உள்ள உழவுத்தொழிலைச் சமப்படுத்தும் கருவி.
10. பள்ளுக்கலப்பை – கடினமாக இருக்கும் தொழியை கூழ்மநிலையில் மாற்றும் கருவி.
11. புடை – சிறு சிறு பகுதியாகப் பிரிக்கும் மண்மேடு
12. புனைமாடு விடுதல் – நெற்தாளில் ஒட்டியிருக்கும் ஒருசில நெல்மணிகளைப் பிரிக்க மாடுகளின் கழுத்தை ஒன்றுடன் ஒன்று பிணைத்து தாளில் வட்டமாக நடக்கவிடுதல்.
13. மடா – வெல்லம் காய்ச்சுவதில் கருன்புச்சாறுப் பிடிக்கும் கலன்.
14. மறுகா – கண்மாய் நீ பெருகி வாய்க்கால் வழியாக வழிந்தோடுதல்.
15. மொந்தை மொந்தையாய் இருக்கும் – பெரிதாக இருக்கிறது.
16. வாமடை – நீர் நுழையும் முகப்பு
17. வீச்சுக்சொளகு – நெல்லில் உள்ள பதர்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் கைபிடி உள்ள முறம்.
18. வெட்டரிவா – மரம் வெட்டப் பயன்படும் அரிவாள்.
••••••
1. அடுப்பங்கரை – சமையலறை.
2. ஆட்டுப்பட்டி – ஆடு அடைக்கும் இடம்.
3. ஊருணி – ஊர் மக்கள் நன்னீர் எடுக்கும் குளம்.
4. களத்துமேடு – தவசங்களை அடிக்கவும் காய வைக்கவும் பயன்படும் இடம்
5. கொல்லைக் கதவு – வீட்டின் பின் கதவு
6. கோழிக்கூடு – கோழி அடைக்கும் இடம்
7. தூப்பாக்குழி – வீட்டின் உல்முற்றத்தில், விழுந்த மழைநீரும், வீட்டைக் கழுவிவிட்ட கழிவுநீரும் செல்லும் துளை.
8. தொழுவம் – மாடு கட்டும் இடம்
9. நடை – வீட்டின் நுழைவாயிலை அடுத்து இருக்கும் பகுதி
10. நடைக்கதவு – வீட்டின் முன்கதவு
11. மச்சு – தவசங்களைச் சேமித்து வைக்கும் இடம்
12. மந்தை, சவுக்கை, சாவடி – ஊர்ப்பொது மன்றம்
13. மாடாக்குழி – வீட்டின் உட்சுவரில் விளக்கு ஏற்ற உருவாக்கப்பட்ட இடம்
14. வலவு – உள்முற்றத்தின் சுற்றுப்பகுதி
15. வல்லடை – உத்தரத்திலிருந்து வரும் கைமரங்களை இணைக்கும் பகுதி.
—————————————
1. அகப்பை – கொட்டாங்கச்சியால் செய்யப்பட்ட பெரிய கரண்டி
2. உலக்கை – உரலில் தவசங்களைக் குத்தப் பயன்படும் பூணிடப்பட்ட மரத்தண்டு
3. உறி – மண்ணலான வெண்ணெய்க் கலன்
4. ஊத்தா - இரும்பு வலையினால் ஆன மீன்பிடி கருவி
5. ஓலைக்கொட்டான் – பனை ஓலையால் செய்யப்பட்ட சிறிய பெட்டி
6. கச்சா – மீன் பிடிக்கப்பயன்படும் நூலினால் ஆன சிறிய வலை
7. கடகப்பெட்டி – பனை நாரினால் செய்யப்பட்ட பெரிய பெட்டி
8. குந்தாணி – உரலில் உள்ள தவசங்கள் சிந்தாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் கருவி
9. கையாறு பெட்டி – பனை நாரினால் செய்யப்பட்ட பெரிய பெட்டி
10. கொடியடுப்பு – அடுப்புடன் இணைந்த கிளை அடுப்பு
11. சிலாத்தி – கேழ்வரகு, எள் போன்றவற்றில் உள்ள சண்டைப் பிரித்தெடுக்கும் கருவி
12. சீனிச்சட்டி – வடச்சட்டி
13. தடுக்கு – சாப்பிடும்போது அமரப் பயன்படுத்தும் ஓலையாலான இருக்கை
14. தலைப்பலகைக் கட்டை – மரத்தாலான சிறிய இருக்கை
15. துடுப்பு – கூழ் கிண்டப்பயன்படும் பட்டைக் கரண்டி
16. தூரி – நீர்வரத்து அதிகமான இடத்தில் பயன்படும் மீன்பிடி கருவி
17. பஞ்சாரம் – கோழி அடைத்து வைக்கும் துளையுள்ள கூடை
18. பணிக்கம் – எச்சில் துப்பப் பயன்படும் கலன்
19. பத்தக்கட்டை – மரத்தைத் துளையிட்டு மீன் பிடித்தல்
20. பிரிமனை – வைக்கோல் மற்றும் தேங்காய் நாரில் செய்யப்பட்ட வட்ட வடிவத் தாங்கி
21. பொல்லாப்பானை – வெளியில் கைகால் கழுவ நீர் பிடித்து வைக்கப்படும் மண்பானை
22. வண்ணப்பெட்டி – பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டியின் வாய்ப்பகுதியில் வண்ணமிடப்படுதல்
23. வடிதட்டி – சல்லடை
24. வட்டை – வட்டி வடிவமான சாப்பிடும் பாத்திரம்

————————————-
1. அண்ணமண்டி, அத்தாச்சி – அண்ணி
2. அப்பத்தா – அப்பாவின் அம்மா
3. அம்மான் – மாமா
4. ஆயா, அம்மாயி, அம்மாச்சி – அம்மாவின் அம்மா
5. ஐயா – அம்மா மற்றும் அப்பாவின் தந்தை (தாத்தா)
6. ஒடம் பங்காளி – இரத்த உறவுடைய பங்காளி
7. சகளை – மனைவியின் உடன்பிறந்த தமக்கைகளை மணம் முடித்தவர்கள்
8. சின்னத்தா, சின்னம்மா – சித்தி
9. தாத்தா – ஐயாவின் அப்பா
10. பாட்டன் – தாத்தாவின் அப்பா
11. பாட்டி – அப்பத்தா மற்றும் ஆயாவின் அம்மா
12. பூட்டன் – பாட்டனின் அப்பா
13. பூட்டி – பாட்டியின் அம்மா
14. மாணான், சித்தப்பு – சித்தப்பா
———————————————
1. அலசாதியா இருக்கு – இடைவெளியுடன் துணி உள்ளது
2. ஆடையுடன் கோடையும் அடிப்பாக – எல்லாப் பருவ காலத்திலும் விளைச்சலைப் பெருக்கியவர்கள்.
3. இப்பக்கொஞ்சம் மொடையா இருக்கு – இப்போது பணப்பற்றாக்குறையா உள்ளது
4. இப்படி சண்டை மஞ்சிவறியிறாளுகளே – மிகுதியாகச் சண்டைபோடுதல்
5. உச்சிப்பொழுதாயிருச்சு – மதியம் ஆகிவிட்டது
6. என்னய ஏசுராக – என்னைத் திட்டுகிறார்கள்
7. என்னிக்காவது நீங்க முட்டுப்படாமலா போவீங்க? – என்றைக்காவது உங்களுக்குப் பொருள் தட்டுப்பாடு இல்லாமலா போகும்
8. ஓடி ஓடி ஒழச்சது – கடினமாக உழைத்த பொருள்
9. கசகசன்னு பேசாதீங்க – தேவையில்லாமல் பேச வேண்டாம்.
10. கடுசா இருக்கு – மிகவும் கடினமாக இருத்தல்
11. கரையில் வைத்தல் – இடுகாட்டில் அடக்கம் செய்தல்
12. கல்யாண நெருக்குவெட்டுல நகை எடுக்கனும் – திருமண நாளையொட்டி நகை எடுக்கவேண்டும்.
13. காடேத்து கருமாதி – இறப்பு நிகழ்வைச் சுட்டுதல்
14. காளாங்கன்னு போட்டுருக்கு – ஆண் கன்றுக்குட்டியை மாடு ஈன்று உள்ளது.
15. கிடேரிக்கன்னு போட்டுருக்கு – பெண் கன்றுக்குட்டியை மாடு ஈன்று உள்ளது
16. கேதத்துக்குப் போனேன் – இறப்புக்குச் சென்றேன்
17. சடக்கா பிடிச்சுக்கெடக்கு – அடுக்கடுக்காக விளைச்சல் பெருகிக்கிடத்தல்
18. சட்டி பானை கழிச்சாச்சா – பிள்ளைப்பேறு, சடங்கு வீடுகளில் தீட்டுக்கழிக்கும் பொருட்டு தீட்டு நாளில் பயன்படுத்திய மண்பாத்திரங்களை வெளியில் போட்டுவிடுதல்
19. சண்டை எலங்கை அழியுது – மிகப்பெரிய சண்டையைக் குறிக்கும் சொல்
20. சத்த தலையைச் சாய்ச்சேன் – கொஞ்சநேரம் தூங்கினேன்
21. சுப்பி பெறக்கப் போறேன் – விறகு வெட்டப் போறேன்
22. சும்மா வதியழியுது – மிகுதியாகக் கிடத்தல்
23. செம்மையா வச்சுவிட்டானாமில்லா – நன்றாக அடித்துவிட்டானாம்
24. சொப்பணங் கண்டேன் – கனவு கன்டேன்
25. துப்புக்கெட்டவன் – திறமையற்றவன், வலிமையற்றவன்
26. நேக்குப்போக்கா இருக்கணும் – நுட்பமாக இருக்கவேண்டும்
27. நேத்து நெரவிக் கொடுங்க பாத்து பங்கிட்டுக் கொடுங்க
28. பத்தரமா வச்சுக்கோ – பாதுகாப்பாக வைத்துக்கொள்
29. பேரன் பொறந்துருக்கிறானாமில – மகள் பருவம் எய்தினால் உறவினர் கேட்கும்முறை
30. பையப் போ – மெதுவாகப்போ
31. பொக்குனு போகனும் – உடனடியானச் செல்லவேண்டும்
32. மொகட்டுல எலி இருக்கு – வீட்டின் உச்சிப்பகுதியில் எலி இருக்கிறது
33. ரெம்பத்தான் ஒசக்கப் பறக்கிற – கூடுதலாக முறுக்கிக் கொள்ளுதல்
34. வட்டிச்சொம்பு விளக்குதல் – பாத்திரங்களைத் துளக்கி எடுத்தல்
35. வண்டி கட்டுதல் – ஏதாவது ஒரு பொருளை துணியால் கட்டி மூடுதல்,(வெயிலடிக்கும்போது தலைக்கு வண்டு கட்டுதல், சோற்றுப்பானைக்கு வண்டு கட்டுதல்)
36. வந்தாரங்குடி – வேற்று ஊரினர்
37. விசயத்த கமுக்கமா அமிக்கிட்டாக – செய்தியை வெளிவராமல் செய்துவிட்டார்கள்
38. வீடெல்லாம் இப்படிப் பொருள எறஞ்சு போட்டது யாரு? – வீடு முழுதும் இப்படிப் பொருளை பரப்பிப் போட்டது யார்?
39. வெள்ளென எந்திரிச்சு – அதிகாலை எழுந்து.
———————————————————-
1. உச்சிக்கிடா வெட்டுதல் – நண்பகலில் கிடா வெட்டுதல்
2. கச்சை கட்டுதல் – வண்ணமயமான அரைக்கால் சட்டை அணிந்து கையில் சாட்டையுடன் இறை வழிபாடு செய்தல்
3. காளாஞ்சி – புடையலின் ஒரு பிரிவை வழிப்பாட்டுதாரர் பெற்றுக்கொள்ளல்
4. கொட்டுவான் கொட்டுதல் – கும்மி அடித்தல்
5. கோயில்வீடு – வீட்டில் உள்ள பூசை அறை
6. பேழைப்பெட்டி – இறை வழிபாடு பூசைப்பொருட்களை வைக்கும்பெட்டி
7. தெருப்பொங்கல் – மழைவேண்டி சிற்றூத் (கிராமத்) தெருக்களில் வைக்கப்படும் பொங்கல்
8. நாள் வைத்தல் – கோயிலுக்குக் காப்புக் கட்டுதல்
9. பல்லயம் – படையல்
10. பிரி சுற்றுதல் – வைக்கோல் பிரிகளை உடல்முழுதும் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துதல்
11. மதுவெடுத்தல் – பால் ஊற்றப்பட்ட மண் கலயத்தில் தென்னம்பாளையை வைத்து இறை வழிபாடு செய்தல்.
இன்னும சும்மாடு, பாம்படம், படிகாரம், தொரட்டி, ஜோடு, எசப்பாட்டு, குலவை என பல........ இந்தத் தலைமுறைக்குத் தெரியாது
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
27-12-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...