---------------------------
உங்கள்புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்,
செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்,
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான்போகின்றார்,
எங்களை முன்னமெழுப்புவான் வாய்பேசும்
நாங்கள் ! யெழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
------------------
பதவுரை
உங்கள் – உங்களுடைய, புழக்கடைத் தோட்டத்து – புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற, வாவியுள் – தடாகத்திலுள்ள, செங்கழுநீர் – செங்கழுநீர் மலர்கள், ஆம்பல் – கருநெய்தல் பூக்கள், வாய் கூம்பினான் – மொட்டுகளாயினகாண் எழுந்திராய் என்ன அவை உங்களால் மலர்வதும், மொட்டாவதுமாயின, வேறு அடையாளமிருப்பின் கூறுங்கோளென்ன, செங்கல்பொடி – காவிப் பொடியில் தோய்த்த, கூறை – ஆடைகளையும், வெண்பல் – வெளுத்த பற்களையுடையவராய், தவத்தவர் – தவவேடம் பூண்ட துறவிகள், தங்கள் – தங்களுடைய, திருக்கோயில் – திருக்கோயிலுக்கு, சங்கிடுவான் – சங்கூதிக்கொண்டு, போகின்றார் – போகின்றார்களென்ன தாமஸர்களான அவர்தம் அநுஷ்டாநம் விடிவுக்குடலன்று என்ன, எங்களை – நீராட இருக்கிற எங்களை, முன்னன் – முன்னமே வந்து, எழுப்புவான் – எழுப்புவதாக, வாய் பேசும் – வாயால் கூறி செய்யாமற்போன, நங்காய் – பூர்ணையானவளே, நாணாதாய் – கூறியபடி செய்யாததற்கு வெட்கத்தையடையாதவளே, எழுந்திராய் – எங்கள் குறையை நீக்க எழுந்திராய் என்ன என்னைப் பழித்துக்கொண்டாகிலுமிங்கே வருகிறதென் என்ன, நாவுடையாய் – உனது மதுரபாஷணம் கேட்க வந்தோமென்ன நான் உங்களுக்கு செய்ய வேண்டுவதென் என்ன, சங்கொடு – ஸங்கத்தையும், சக்கரம் – சக்ரத்தையும், ஏந்தும் – தரித்தவனாய், தடம் – முழங்கால் வரை நீண்ட, கையன் – கைகளையுடையவனை, பங்கயம் – தாமரைமலர் போன்ற, கண்ணானை – திருக்கண்களை உடையவன், பாட – பாடவேணுமென்கிறார்கள்.
உங்கள் வீட்டு பின்புறத் தோட்டத்தில் உள்ள குளத்தில் குவளை மலர்கள் இதழ் விரித்துவிட்டன. கருநெய்தல் மலர்கள் இதழ் குவிந்து கூம்பி நிற்கின்றன.
செங்கல் பொடியின் நிறமான காவியுடையைத் தரித்த, வெண்மையான பற்களையுடைய துறவிகள் வெண்சங்கை முழங்கியவாறு இறைவனது திருக்கோவிலைத் திறக்கச் செல்கின்றனர்.
எங்களை முன்னமே எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அதைச் செய்யாமல் இருப்பதற்குச் சிறிதும் நாணப்படாமல் இருக்கும் பெண்ணே ! கைகளில் சங்கும், சக்கரமும் ஏந்தும் தாமரைக் கண்ணுடையவனைப் பாட துயிலெழுந்து வருவாயாக… என்று தோழியை அழைக்கிறாள் கோதை !
இப்பாவைப் பாடலில் அனைவரையும் தான் முன்னே எழுப்புவதாய் வாக்களித்து மறந்து உறங்குவான் ஒருத்தியை விளித்துப் பேசுகின்றார்கள்.
நாங்கள் வந்து வாசலில் நிற்க எழுந்திராது காலம் தாழ்க்கின்றாய் என்று சொல்ல ‘விடிந்ததோ?’ என்று அவள் வினவுகின்றார்கள். ‘விடிவுக்கு அடையாலமாய்ச் செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்கள் வாய்கூம்பின என்றார்கள்.’ ’எந்தக் குளத்திற் போய்க் கண்டீர்களோ?’ என்று அவள், கேலி பேச, ‘உங்கள் புழைக்கடைத் தோட்டத்தில்தான் கண்டோம்’ என்று மறுமொழி கூறினார்கள்.
‘வேறு அடையாளமும் உண்டோ ?’ என அவள் ஐயமுற்றுக் கேட்க, ‘ காஷாயம் தரித்துக் காலைக் கடனாகப் பற்களை வெண்மையுறத் தூய்மை செய்து தவக்கோலம் பூண்ட துரவிகளான பெருமக்களும் தங்கள் திருக்கோயில்களில் திருவாராதனை செய்யப் போகின்றனர்’ என்றார்கள்.
இந்நிலையில் அவள் ‘எப்போதும் சித்தத்தைத் திருமால் மேல் வைத்த பேரன்பர்க்கு நேரமும் காலமும் இல்லையன்றோ ?’ என்றாள். இவ்வாறு அவள் பேசியது கேட்டு மெல்லிய சினம் உடையவர்களாய், ‘நானே எல்லாரையும் முன்னால் எழுந்து வந்து துயிலுணர்த்துவேன் என்று சொன்னாய். அதனையும் செய்யாது இப்போது நாங்கள் கூறுவதற்கெல்லம் மறுப்புரை தருகின்றாய். இது அழகன்று’ என்றார்கள்.
‘நிறைவு மிக்கவளான நங்கையே, சொல்லும் செயலும் ஒன்றிப்போகாமல் இருப்பதும் உனக்கு நிறைவோ ? எங்கள் குறை தீர எழுதிருக்க வேண்டும்’ என்று மீண்டும் வேண்டினார்கள். அவள் எழுந்திராதது கண்டு, ‘சொன்னவாறும் நடவாதது மட்டுமின்றி வெட்கமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறாயே. கேட்டதற்கெல்லாம் விட சொல்லும் அதிகப் பேச்சுடைய நாவு உன்னுடையது’ என்று கடிந்தார்கள்.
‘அவ்வாறாயின், நான் என்னதான் செய்யவேண்டும்?’ என்று, அவள் கேட்கவும், அவர்கள் சொன்னார்கள். ‘சங்கும் சக்கரமும் ஏந்தும் தடக்கையனும், செந்தாமரைக் கண்ணனுமான பெருமானை உன் இனிய குரலினால் பாடவேண்டும். நாங்கள் கேட்க வேண்டும். எழுந்து வாராய்.’ இவ்வாறு ஆயர்குல நங்கையர் அழைப்பு விடுத்தனர்.
‘செங்கழுநீர் மலர்ந்து ஆம்பல் வாய் கூம்பின்’ என்பதற்கு மற்றொரு பொருளும் கூறுகின்றாள் உறக்கம் மீதூர நின்றவள். நீங்கள் என் வாசலிலே வந்த பேசாமையால் வெறுத்து வெட்கித்து உங்கள் வாய்கள் கூம்பின. அதனைப் போய்ச் செங்கழுநீர் மலர்ந்ததாகவும் ஆம்பல் கூம்பியதாகவும் கருதிவிட்டீர்கள் போலும் என்கிறாள்.
‘சங்கிடுவான் போதந்தார்’ என்று ஆராதனைக்குரிய ஓர் உபகரணமான கருவியைக் கூறினாலும் ஆராதனையே பொருளாகக் கூறினார்கள். மலர்கள் மலர்ந்த எனில் அவை அஃறிணைப் பொருள்தானே என்பாளெனக் கருதித் துறவிகளும் வழிபாடு இயற்றப் புறப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
‘வாய் பேசும் நங்காய்’ என்றது ‘உண்மை பேசுவாய் என்றிருந்தோம், கண்ணனொடு பழகின உனக்குப் பொய் சொல்லுவதும் இயல்பாகுமோ ? எல்லா நலமும் நிரம்பியதாலன்றோ நங்கையெனத் தக்கவளானாய்? சொன்னபடி நடவாதர் இப்பெயருக்குப் பொருத்தமானவர்தானோ ?’ என்று பொருள் கொள்ளுமாறு பேசினார்கள்.
இத்தனையும் இருந்தாலும் உன் பேச்சினிமை கேட்கத்தெவிட்டாதது என்ற கருத்துப்பட ‘நாவுடையாய்’ என்றார்கள்.
திருவாழியும் பாஞ்சசன்யமும் ஏந்திய சிறப்பாலே வளர்ந்த திருக்கரங்களை உடையவன் பெருமாள். சந்திரனும் சூரியனும் போல் ஒளி வீசும் திவ்யாயுதங்களைக் கண்டு அலரவும் குவியவுமாயிருக்கிற மலர்கண்களைப் பெற்றவன் அவன்.
உன் விருப்பத்துக்குக்கேற்ற வண்ணம் அவனைப் பாடி எம்மையெல்லாம் கரையேற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர் இடைக்குல மகளிர்.
மலர்கள் விரிவதாகத் தொடங்கும் இப்பாடல் உறங்குவான் கண்மலர் விரியவும், கேட்பார் மன மலர்கள் விரியவும், பங்கய மலர்க்கண் படைத்தவனைப் பாடிப் பரவும் மலர்ப்படையலாயிற்று.
No comments:
Post a Comment