Thursday, February 4, 2021

#திருப்பாவை----------- #பாசுரம்_24


-------------------------
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் ! திறல்போற்றி !
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ்போற்றி !
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி !
குன்று குடையா எடுத்தாய் குணம்போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்,
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.
------------------
பதவுரை
அன்று – அக்காலத்தில், இவ்வுலகம் – இவ்வுலகத்தை, அளந்தாய் – அளந்துகொண்டவனே, அடிபோற்றி – உன் திருவடிகளுக்கு மங்களமுண்டாகட்டும், அங்குசென்று – பிராட்டியைப் பிரித்த ராவணனிருப்பிடத்துக்குப் போய், தென் – அழகிய, இலங்கை – லங்காபுரியிலுள்ள அரக்கர்களை, செற்றாய் – நிரஸித்தவனே, திறல்போற்றி – உன் திருத்தோள் ஸாமர்த்யத்திற்கு மங்களமுண்டாகுக, சகடம் – சகடாஸுரனே, பொன்ற – கட்டுக் குலைந்து உருமாய்ந்து போம்படி, உதைத்தாய் – உதைத்து முடித்தவனே, புகழ்போற்றி – உன் புகழுக்கும் மங்களம் பொங்குக, கன்று – கன்றுருக் கொண்ட வத்ஸாஸுரனே, குணிலா – எறிதடியாகக் கொண்டு விளாமர உருக் கொண்ட கபித்தாஸுரன் மீது, எறிந்தாய் – எறிந்து இருவரையும் மாய்த்தவனே, கழல்போற்றி – உன் திருவடிகளுக்கு மங்களமுண்டாகுக, குன்று – கோவர்த்தனமலையைக், குடையாயெடுத்தாய் – குடையாய்ப் பிடித்தவனே, பகை – பகைவரை, குணம் போற்றி – உன் குணங்களுக்கு மங்களமுண்டாகட்டும், வென்றுகெடுக்கும் – வேரோடு களையும், நின்கையில் வேல் – உன்கையிலுள்ள வேலாயுதத்துக்கு, போற்றி – மங்கள முண்டாகக் கடவது, என்றென்று – இப்பேர்ப்பட்ட, உன் சேவகமே – உன் வீரச்செயலையே, ஏத்தி – துதித்து, பறைகொள்வான் – தேவரீரை அநுபவத்தற்காக, யாம் – நாங்கள், இன்று – இதுபோது, வந்தோம் – வந்துள்ளோம், இரங்கு – எங்களிடம் க்ருபை செய்தருள வேண்டுமென்கிறார்கள்.
“மகாபலி இவ்வுலகைக் கைப்பற்றியபோது, உனது திருவடிகளால் உலகை அளந்தவனே, நீ வாழ்க..!
சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைச் சென்று இராவணனை வெற்றி கொண்டவனே, உனது வீரம் வாழ்க..!
சக்கரவடிவில் வந்த சகடாசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே..உனது புகழ் வாழ்க..!
கன்று வடிவில் வந்த வத்சாசுரனைத் தடியாகக் கொண்டு, அவனை கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே..உன் கால்களில் அணிந்த வீரக்கழல் வாழ்க..!
கோவர்த்தன கிரியைக் குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையிலிருந்து காத்தவனே.. உனது குணம் வாழ்க…!
பகைவர்களை வெல்லும் உனது கையிலுள்ள வேல் வாழ்க..!
இவ்வாறு, உனது வீரசெயல்களைப்பாடி, உன்னருளைப் பெறுவதற்கு நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக…” என்று பாடுகிறால் கோதை..!
தாங்கள் விண்ணப்பித்தபடியே கண்ணன் செய்தருளவும், ஆயமகளிர் தம் நோக்கத்தை மறந்தவர்களாய்க் கண்ணன் பள்ளியறை விட்டுப் போதையூட்டும் வண்ணம் நடக்கும் நடையழகில் லயித்தவர்களாய் அவன் அழகுகளையும் அருஞ்செயல்களையும் எண்ணி மங்கல வாழ்த்துரைத்துப் பல்லாண்டு பாடுகின்றார்கள்.
காணும் வரையில்தான், ‘அதுவேண்டும் இதுவேண்டும்’ என்பார்கள். கண்டதும் விண்டுரைக்க மறந்துவிடுவார்கள் என்று அனுபவமொழி பகர்கிறார் உரைமேதை பெரியவாச்சான்பிள்ளை.
சீரிய சிம்மாசனத்தில் அவன் இருந்தருள பாதபீடத்திலே நீட்டியருளின திருவடிகளைக் கண்டார்கள். ‘தாள் கண்டார்தாளே கண்டோர்’ என்றவாறு திருவடிகளின் பெருமைகளை முதலில் நினைவுகூர்ந்தார்கள்.
மகாபலிக்காக மண்ணளந்த அன்று, இவ்வுலகையும் அளந்த மெல்லிய திருவடிகளுக்கு மங்கலம் கூறித் திருப்பல்லாண்டு என்றார்கள். சீதேவியும், பூதேவியும் பூத்தொடுமாறு போலக் கூச்சப்பட்டுத் தொடுகிற மெல்லிய பாதம் காடும்மேடுமான இவ்வுலகை அளந்ததே என்று மனம் நொந்து வாழ்த்தினார்கள்.
இலங்கைக்கே சென்று அரக்கர்களை அழித்த வல்லமைக்கு வாழ்த்துரைத்தார்கள். அறம் தலைநிறுத்துதற்காகப் புலி இருக்கும் குகைக்கே சென்று வேட்டையாடுவார்போல் குளவிக்கூடான இராவணாதிகள் இருக்கும் இலங்கைக்கே தேடிச்சென்று, ‘வேரும், வேரடி மண்ணுமில்லாமல்’ அழித்த ஆற்றலை வாழ்த்தாதிருக்க முடியுமோ? அதுவும் ஒரு பெண்ணுக்காக அச்செயலைப் புரிந்தருளிய திறத்தைப் பெண்பிறந்தாரானார் பாராட்டாதிருக்க ஒண்ணுமோ?
தாளையும் தோளையும் வாழ்த்தி மகிழ்ந்தபோது, கண்ணன் பிள்ளைமைப் பிராயத்திலேயே ஆற்றிய அருஞ்செயல் நினைவுக்கு வருகின்றது. பெற்ற தாயும், உதவாத குழந்தைப்பருவத்தில் நிகழ்த்திய கன்னிப்போருக்குக் காலில் காப்பிட வேண்டுமன்றோ? அதனால், சக்கரமாய் உருண்டோடி வந்த சகடாசுரனைப் பிஞ்சுக் காலில் உதைத்து அழித்தமைக்காக அக்காலுக்குக் காப்பு அணிவிப்பது போன்று ‘சகடம் உதைத்தாய் ! புகழ் போற்றி’ என்று வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

மாடு மேய்க்கும் மழவிளம் பருவத்தே விளாம்பழமாக வந்த கபித்தாசுரனைக் கொல்ல கன்று வடிவத்தில் வந்த வத்சாசுரன் என்பவனை எடுத்து வீசி, ‘கன்றால் விளவின் கனி உதிர்த்த’ வீரக் கழல்களை வியந்து போற்றினார்கள். எதிரியாலே எதிரியை அழிக்கும் வித்தகம் யாருக்கு வரும், கண்ணனைத் தவிர?
பகைவரை அழிக்கக் கன்றெடுத்த கதைபோல கன்றுகளைக் காக்கக் குன்றெடுத்த பண்பும் அவனுக்கு உடைமையானது. அந்த அருங்குணத்தில் உயிரன்பின் மாட்சி துலங்குவதால் அவன் குணத்தையும் துதித்து வாழ்த்தினார்கள்.
மாடுகளின் பின்னே திரிகிற கோவிந்தன் அவற்றுக்காக மலை எடுக்கிறவன் மட்டுமல்ல, அவைகளுக்குச் சிங்கமோ, புலியோ தீங்கு செய்தாலும் வேலால் குத்திக்கொல்லும் இயல்புடையவன். அந்த வேலின் திறத்துக்கும் பல்லாண்டு கூறிப்பரவி மகிழ்ந்தார்கள்.
இவன் புல்லாங்குழலும் மாடுமேய்க்கும் தடியும் ஏந்திய இடையனாயிற்றே! இவன் கையில் வேல் ஏது எனில், இவன். ‘கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்’ என்பதால் வாரிசுரிமையாக இவன் கையிலும் வேல் இருந்ததாம்.
‘என்றென்று’ என்ற சொல்லாமல் மீண்டும் மீண்டும் முடிவின்றிப் போற்றிச் செய்தோம் என்கிறார்கள். அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று நாவுக்கு அறுசுவைபோல் ஆறுமுறை சொன்னார்களாம்.
அப்பா திருவாழிக்குப் பல்லாண்டு கூறியதுபோன்றே, மகளும் (ஆண்டாளும்) ஆயுதங்களுக்குப் பல்லாண்டு கூறியது இயல்புதானே என்பார்கள் உரையாசிரியர்கள்.
‘உன் சேவகமே ஏத்தி’ என்றது ஒன்றுவிடாமல் உன் வீரச் செயல்களை உரைப்போம் என்ற கருத்தினால் ஆகும். வேறு எவர் வீரமும் பாராட்டோம் என்பதை ஏகாரத்தால் தெளிவுபடுத்தினர்.
உன் இரக்கமும் அன்புமே குறி என்பார் ‘இரங்கு’ என்று கண்ணனை வேண்டினர், வரம் வேறு வேண்டாத மடமங்கையர். மங்களாசாசனமாக மலர்ந்த திருப்பாட்டு இது.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
08-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...