Wednesday, February 3, 2021


———————————————————
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் 6 லட்சம் ஏக்கர் நிலங்களில் அபினிச் செடிகளை விளைய செய்து சீனாவுக்கு அபினி போதைப் பொருளை அனுப்பி கொள்ளையடித்தது பிரிட்டிஷ் அரசு. அடுத்து இங்கிலாந்து நூற்பு ஆலைகளில் பயன்படுத்துவதற்காக பணப்பயிரான அவுரிச் செடியை மட்டுமே நிலங்களில் பயிரிட பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளை நிர்பந்தப்படுத்தினர். இதற்காக ஏழை விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் உணவுப் பயிர்கள் பயிரிடப்படுவது தடுக்கப்பட்டு செயற்கையான பஞ்சம் உருவாக்கப்பட்டது.

அவுரி விவசாயத்திற்காக பீகார் மாநிலத்தில் முசாபர்பூர், தர்பங்கா, சம்ப்ரான், சரண் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு பிரிட்டிஷ்காரர்கள் அவுரித் தோட்டங்களை உருவாக்கினர். இதற்கு துணையாக உள்ளூர் ஜமீன்தார்களை அழைத்துக் கொண்டனர். ஒரு சாயத்தோட்டம் என்பது ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இதில் உள்ளூர் விவசாயிகள் ஒன்றரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதை நிர்வகிக்க 200 பிரிட்டிஷ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த விவசாயம் மூலம் கிடைக்கும் கொள்ளை லாபம் முழுவதும் 16 பிரிட்டிஷ் வர்த்தக நிறுவனங்களுக்கே சென்றன. அவுரி செடி பயிரிட மறுத்த விவசாயிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலர் கொலை செய்யப்பட்டனர்.

அவுரி விவசாயத்திற்கு துணையாக இருந்த ஜமீன்தார்களுக்கு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது, துப்பாக்கி மற்றும் பட்டம் பதவிகளும் வழங்கப்பட்டன. அவுரி விவசாயத்தில் 16 வயது சிறுவர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.
1848 ஆம் ஆண்டு வங்க மாநிலம் பரிப்பூர் மாவட்ட நீதிபதியான டி.டி.லதுர் “இங்கிலாந்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு இண்டிகோ சாய பெட்டியின் மீது ரத்தக்கறை படிந்துள்ளது. பல விவசாயிகளின் உடல்கள் மீது ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவசாய முறை ரத்தம் சிந்த வைக்கும் கொடூரமான முறை” என்று கண்டித்திருந்தார். 1868 ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. பலர் உயிரிழந்தனர். செயற்கை சாயம் புழக்கத்திற்கு வந்த பிறகுதான் அவுரி அநியாயமும் முடிவுக்கு வந்தது.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
04-01-2021.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...