Wednesday, February 3, 2021


————————————-
படைப்பாளி ஆ.மாதவன் அவர்கள் ( 86 வயது) இன்று காலமானார். தந்தையின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. தாயின் ஊர் நாகர்கோயில். திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின்போதே திருவனந்தபுரத்தில் குடியேறிய குடும்பம். தந்தை திருவனந்த புரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார் 1934-ல் பிறந்த இவர் திருவனந்தபுரம் சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அதிகமான சிறுகதைகளை எழுதியவர். அவர் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார்.அங்குள்ள
பத்மநாபசாமி கோவில் அருகே இருந்த
இவரின் கடையில் இரண்டு தடவை சந்தித்ததுண்டு. கதைசொல்லி பற்றி
அடிக்கடி செல்பேசியில் விசாரிப்பார்.
7 சிறுகதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகிய குறிப்பிடத் தக்க படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.
தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு கட்டுரை நூலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதினையும், 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றவர்.
//'அப்பா பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்தார். சொந்த ஊர் கொட்டாரம். வீட்டில் பெரிய அளவில் வசதிகள் ஒன்றும் இல்லை. திருவனந்த புரத்தில் தங்கியிருந்தோம். வீட்டில் என்னையும் சேர்த்து ஏழு பேர். மலையாள வழிக்கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட நான் முழுமையாக முடிக்கவில்லை. ஒரு பாத்திரக் கடையில் முதலில் வேலைக்கு சேர்ந்தேன். அதே நேரம் எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம். ரஷ்ய, பிரஞ்சு, ஆங்கில இலக்கிய நூல்களை மலையாள மொழிபெயர்ப்பில் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். அதே வேளை தமிழில் இருந்து சித்திரங்களுடன் வெளியாகும் சஞ்சிகைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

சஞ்சிகைகளை படிக்கும்போது நமக்கும் எழுதினா என்னவென்று தோன்றியது. அப்படி முதலில் நான் மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து 'கழுமரம்' என்ற குருநாவலை 'சிறுகதை' என்ற இதழில் எழுதினேன். இதற்கு நல்ல வரவேற்பு. அதன்பின்பு எதற்கு மொழிபெயர்ப்பு என்று எண்ணியவன் தொடர்ந்து, எனது கண்ணில் பட்டவற்றை கதைகளாக எழுதத் தொடங்கினேன். பெரும்பாலும் சாமான்ய மக்களின் வாழ்க்கையைத் தான் எழுதினேன். 'கடைத்தெருவின் கதைசொல்லி' என்றே என்னை அழைப்பார்கள். நான் நடத்தி வந்த பாத்திரக்கடையில் தினசரி சந்திக்கும் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தேன். அது இலக்கிய வட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
82 வயதைத் தொட்டபின் என்னை தேடிக் கண்டுபிடித்து விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சி. இலக்கியச் சுவடுகள் நூலுக்கு விருது வழங்கியிருக்கிறார்கள். அது 1955 முதல் பல்வேறு கட்டங்களில் நான் எழுதிய பல்வேறு விஷயங்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலுக்காக விருது வழங்கியிருப்பது எனது திறனாய்வை சாகித்திய அகாடமி உணர்ந்திருப்பதாக அறிகிறேன்' //—— ஆ.மாதவன்
ஆழ்ந்த அஞ்சலி.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...