Tuesday, February 2, 2021


———————————————————-
இன்றைய தமிழ் ஏட்டில் நண்பர் புவியரசின் ‘மாணவர் அரசியலில் தமிழகம் ஏன் பின்தங்கிப் போனது..?’ என்ற பத்தியைப் படித்தேன். உண்மைதான்.
திராவிட இயக்கத்தை எடுத்துக்கொண்டால் நாவலர், பேராசிரியர், எஸ்.டி.சோமசுந்தரம், பின்னாட்களில் பெ.சீனிவாசன் என வரிசையாக மாணவர் பட்டாளம் இருந்தது உண்டு. எம்ஜிஆர் தன் கட்சியைத் தொடங்கியபோது மாணவர் அணியை பலப்படுத்தினார். அழகு திருநாவுக்கரசு அன்றைக்கு மாணவர் அணியில் எம்ஜிஆர் இயக்கத்தில் இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சங்கரய்யா, நல்லகண்ணு, பாலசுப்ரமணியம், தா. பாண்டியன், மகேந்திரன் என பலர் தொடங்கி பொதுவுடைமைக் கட்சி மாணவர் அணி நடைபோட்டது.
நாங்கள் எல்லாம் மாணவர் காங்கிரஸில் இருந்தவர்கள், காமராஜர் காலத்தில்- நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர் லூர்தநாதன் மரணப்பிரச்சினை(இவருக்கு பாளை தெற்கு பஜாரில் காமராஜர் திறந்து வைத்தார்), திருச்சி ஜோசப் கல்லூரி கிளைவ் ஹாஸ்டல் மாணவர்களைத் தாக்குதல் பிரச்சினை, அண்ணாமலை பல்கலைக்கழகம் உதயகுமார் மரணம் என்றெல்லாம் 1971,72 காலக் கட்டங்களில் முன்னெடுத்து போராடினோம். நான் அறிந்தவரை 1980-வரை மாணவர் அரசியல் அமைப்பு சரியாக இயங்கியது. அதன்பின்பு கல்லூரிகளில் மாணவர் அரசியல் அமைப்பு சிறுக சிறுக காணாமல் போனது.
நெடுமாறன் அடிக்கடி என்னிடம் சொல்வார், தானும், எஸ்டிஎஸ், பண்ருட்டி இராமச்சந்திரன், திண்டுக்கல் அழகிரிசாமி போன்றவர்கள் அறிஞர் அண்ணவை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாற்ற பல போராட்டங்களுக்கிடையே துணைவேந்தர் ஒப்புதலோடு அண்ணாவின் கூட்டத்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டோம் என்றார். அதுமட்டுமல்லாமல், திமுக ஆங்கில ஏடான ஹோம்லேண்டுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்கள் சார்பில் நிதி சேகரித்தும் அண்ணாவிடம் அப்போது அளித்தோம் என்றும் நெடுமாறன் கூறியது உண்டு. திமுகவின் ஆங்கில ஏடான ஹோம்லேண்ட் ஏட்டை அண்ணா நிறுவினார். ஈவிகே.சம்பத், துணை ஆசிரியராக மூத்த வழக்கறிஞர் வி.பி.ராமன், பிற்காலத்தில் காங்கிரஸில் என்னோடு பணியாற்றிய தி.சு.கிள்ளிவளவன் இணைந்து வி.பி.ராமனுடைய இன்றைய லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் வீட்டில் இந்தப் பத்திரிக்கை அலுவலகம் இயங்கியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், நாராயணசாமி நடந்திய விவசாய போராட்டக் களத்தில் சில கல்லூரி மாணவர்கள் போராடியது யாவும் நினைவில் உள்ளன. சுதந்திரா கட்சி மாணவர்கள் அமைப்பும் இருந்தது. கடந்த 1960-ல் சோசிலிஸ்ட் கட்சியிலும் மாணவர்கள் இணைந்து பங்கேற்றதும் உண்டு. அதன் அகில இந்தியத் தலைவர்கள் லோகியா, ஜெயபிராகாஷ் நாராயணன் போன்றவர்கள் எல்லாம் சோசிலிஸ்ட் பாதையில் இருந்தனர்.
பின்னாட்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மாணவர்கள் ஆங்காங்கு கட்டமைப்பு முறை சாராமல் தமிழகத்தில் எழுச்சியாக போராடியது உண்டு. ஜனசங்கின் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷீத், பெரிய அளவில் இல்லாமல் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் சில மாணவர்களை கொண்டு இயங்கியதாக நினைவுகள் உள்ளது.
எங்களுடைய மாணவ அரசியல் காலத்தில், 1970களில் விடுதியில் தங்கும் சக மாணவரகள் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்றுதான் கவனிப்போம். பின்னாட்களில் ஜாதிவாரியாக கல்லூரிகளிலும் கல்லூரி விடுதிகளிலும் மாணவர்கள் பிரிந்து அரசியலை விட்டு கடந்துவிட்டனர். இது தமிழகத்தில் நடந்த ஜாதி கலவரங்களால் தவறான பாதைக்கு வழி செய்துவிட்டது.
அப்போது நக்சலைட்டு மாணவர்களும் இருந்தது உண்டு, பிராட்வே எம்யூசி சட்டக்கல்லூரி விடுதிக்கு ஆந்திர, கொண்டப்பள்ளி சீதாராமையா வந்திருந்தார், மாணவர்களைச் சந்தித்து பேசினார். புதிய தமிழகம் தலைவர் நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமி நக்சலைட்டு இயக்கம் என்று அவரை அவசர நிலைகாலத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்தார். இதெல்லாம் கடந்த காலச் செய்திகள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெ.சீனிவாசன், எல்.கணேசன் தலைமையில் பங்கேற்ற போது அவர்களுடன் இருந்த மாணவர்கள் வேறு பெயர்களில் மறைமுகமாகவும் தலைமறைவாகவும் இயங்கினார்கள். இப்படி மாணவர் இயக்கங்கள் அரசியலுக்கு நாற்றங்காலாக விளங்கி பண்பட்ட அரசியல் தலைவர்களாக பலரை உருவாக்கியது. கடந்த கால மாணவர் அரசியலில் இன்னும் பல வரலாற்று செய்திகள் உண்டு.கொள்கை, லட்சியம் என்ற போக்கில் மாணவர் இயக்கங்கள் அன்றைக்கு ஆரோக்கியமாக இயங்கின. இன்றைக்கும், அந்தக் கால மாணவர் அரசியல் மலரும் நினைவுகளாக உள்ளன.
கேரளத்தில் ஏகே.அந்தோணி, கே.பி.உன்னிகிருஷ்ணன், ரமேஷ்செந்தாலா (காங்கிரஸ் மாணவர் இயக்கத்தில் NSUI இருந்தபோது என்னுடன் பணியாற்றிவர்.) அங்கு மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்களும் மாணவர்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் தான்.
இந்தியாவைப் பொறுத்தவரை சோசிலிஸ்ட் கட்சி மாணவர் இயக்கத்தில் நிதீஷ்குமார், ராம் விலாஸ் பாஸ்வான், லல்லுபிரசாத் யாதவ், என்று பீகாரில் மாணவர்கள் அரசியலை முன்னெடுத்து பின் தலைவர் ஆனவர்கள். அதுபோன்றே, மேற்கு வங்கத்தில் மாணவர்கள் அரசியல் இயக்கம் முக்கியமாக இருந்தது. பிரனாப் முகர்ஜி, பிரிய ரஞ்சன் தாஸ் முனிஷி, மம்தா பானர்ஜி, என பல தலைவர்கள் மாணவர் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். அனைத்து அசாம் மாணவர்கள் இயக்கம் மகாந்த காலத்தில் இந்திரகாந்தி பிரதமராக இருந்தபோது வீறுகொண்டு எழுந்தது. இப்படி மாணவர்கள் அரசியல் வரலாற்றை விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து விரிவாக பதிவு செய்யலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏனோ நான் அறிந்த வரை வீரியமான மாணவர் அரசியல் 1985-க்கு பிறகு தென்படவில்லை, அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. நான் மாணவர் காங்கிரஸிலிருந்த காலத்தில் இந்திரகாந்தி பேச்சையும் கேட்போம், மொரார்ஜி தேசாய் பேச்சையும் கேட்போம், கலைஞர் பேச்சையும் கேட்போம், கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யா, டாங்கே மேடைப் பேச்சுகளையும் கேட்போம். கருத்துகள் வேறுப்பட்டாலும் என்ன சொல்கிறார்கள் என்றும் எங்களைப் போன்றவர்களுக்கு அது அரசியல் பாடங்கள் மட்டுமல்ல எங்களின் விவாத பெருளாகவும் தலைவர்களின் பேச்சுக்கள் இருக்கும். அன்றைக்கு இருந்த ஆரோக்கியமான அரசியல் இன்றைக்கு மங்கிவிட்டது. திரும்பத் தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த மாணவர்கள் அரசியல் ஜாதி அரசியலைத் தாண்டி முன் வரவேண்டும். இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் அரசியல் கொள்கை தாக்கங்களும் லட்சியங்களும் திரும்பவும் வரவேண்டும். அந்த மறுமலர்ச்சி இன்றைக்கு அவசியம்..
அரசியலில் என்னை ஆரம்பக் கட்டத்தில் அடிப்படையில் வார்ப்பித்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர், ஈவிகே.சம்பத், நெடுமாறன் தமிழகப் பேரவை எதிர்கட்சி தலைவராக இருந்த இலக்கிய வாதி கோவை கம்பன் பி.ஜி.கருத்திருமன், மத்திய முன்னாள் அமைச்சர் தாரகேஸ்வரி சின்கா அம்மையார் என்ற பல ஆளுமைகளுண்டு.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
29-12-2020

No comments:

Post a Comment

2023-2024