Friday, October 16, 2026

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த கூட்டம், அவர் காங்கிரஸில் இருந்தபோது இருந்ததைவிட, உணர்ச்சிபூர்வமாகவே பூரித்திருந்தது. காங்கிரஸ் பிரமுகர்களின் கார்கள் மட்டும் மிஸ்ஸிங்.

'வருங்கால முதல்வரே! தமிழினத் தலைவரே! வருக வருக’ போன்ற ஸ்லோகங்கள் சிவாஜியைத் தனி உலகத்துக்கு அழைத்துச் சென்று இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தில் பிரஸ் மீட் வைத்தார். அங்கு என்னென்ன சொன்னாரோ, அது அப்படியே திருமண விழாவிலும் பிரதிபலித்தது. ''தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை ராஜினாமா செய்ய வைத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்த சிவாஜி, குருஷேத்திர யுத்தத்தில், பாண்டவர்களுக்கு உதவிய கண்ணனைப் போன்றவர். அவரை எங்கள் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டோம்!'' என்றார் செல்வேந்திரன். மணமக்களை வாழ்த்த வந்த ஒருவர், ''தலைவர் சிவாஜி, எட்டப்பர்களின் கொட்டத்தை அடக்க வந்த கட்டபொம்மன்!'' என்றார். ''எங்கள் இதய தெய்வம் டாக்டர் சிவாஜி!'' என்றார் பழக்கடை பாண்டியன். கடைசியில் பேசிய சிவாஜியின் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. ''நான் 30 வருஷமா கட்சி கட்சினு அலைஞ்சு, வேறு எதையும் சிந்திக்காமல் போயிட்டதால, சொந்தக்காரப் பயலுக எவனுமில்லாமப் போயிட்டானுக... (கூட்டம், 'நாங்கள் இருக்கிறோம்’ என அலறியது.) நம்மகிட்ட 3,60,000 மன்ற மறவர்கள் இருக்காங்க. ஒண்ணுமில்லாத கட்சி இப்போ காங்கிரஸ்தான். பொய்யை வெச்சே ஒரு கட்சி இருக்கிறதுன்னா, அது காங்கிரஸ்தான். இலங்கைப் பிரச்னையில் இவங்க ஆதரவும் கையெழுத்தும் எப்படி வாங்கினாங்கங்கிறது மத்தவங்களுக்கு வேணாத் தெரியாம இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்குமா? எனக்கு அங்கே மரியாதை கிடைக்கலேப்பா. தேசியம், தேசியம்னு... பம்பாய் நம்மது, காஷ்மீர் நம்மது, டில்லி நம்மதுன்னு நினைச்சு என்னத்தைக் கண்டேன்? எல்லாம் கைவிட்டிடுச்சி. பார்த்தேன்... இனி இந்த தமிழ் மக்கள்தான்! அவங்க காலடியில வந்து விழுந்திடுவோம்கிற முடிவுக்கு வந்துட்டேன். தோளில்வெச்சு சுமந்தா, சுமக்கட்டும். இல்லாட்டி, காலில் போட்டு மிதிச்சாலும் மிதிக்கட்டும். ஏன்? 30 வருஷம் காங்கிரஸுக்கு உழைச்சதுக்கு தண்டனை வேணுமே! என் உசுரு போறதும் இந்த தமிழ் மக்கள் மடியிலேயே போகட்டும். காலங்கெட்ட நேரத்துலதான் புத்தி வருது! சரி நான்தான் வேஸ்ட் பண்ணிட்டேன். நீங்களாவது (எதிர்வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு காங்கிரஸ் பிரமுகரைப் பார்த்து) காலாகாலத்துல வந்து சேருங்க. () இல்லேன்னா, அங்கேயே கிடந்து சாவுங்க. பாவம் இவரு... டெல்லிக்குக் கொண்டுபோன ஏலக்காய் மாலையைச் சேமிச்சு வைச்சிருந்தா, பெரிய ஏலக்காய்க் கடையே வைக்கலாம். என்ன ஆச்சு... ஒண்ணும் ஆகலை...'' - :-ஜூனியர்விகடன் 04-05-2011



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...