Wednesday, October 12, 2016

இந்திய நதிநீர் பிரச்சினைகள்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகள் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினமணியில் (12.10.2016) தலையங்க பக்கத்தில் "இந்திய நதிநீர் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் வந்துள்ள எனது பத்தி,


இந்திய நதிநீர் பிரச்சினைகள்


- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

யூரி இராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வேதனையால், இன்றைக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பிரதமர் பண்டித நேரு, பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் இடையே 19-9-1960ல் சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்த முதன்முதலாக 1965ல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, இந்த ஒப்பந்த ஷரத்து பிரிவு 8ன் படி இந்த ஆணையம் வருடத்திற்கு ஒரு முறை அமர்ந்து பேசவேண்டும். ஆனால் இதற்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து உள்ளிட்ட ஆறு நதிகள் தொகுப்பில், சிந்து நதிக்கு கிழக்கே உள்ள ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளை இந்தியா முழுவதும் பயன்படுத்திக்கொள்வது என்றும், மேற்குபுறத்தில் இருந்த ஜீலம், செனாப், இண்டஸ் ஆகிய நதிகளை பாகிஸ்தான் முழுமையாக பயன்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. சிந்து நதியிலிருந்து 80 சதவீத தண்ணீரை இதுவரை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.  2 கோடியே 60 லட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதியை பாகிஸ்தான் பெறுகின்றது. குடிநீருக்கும் அந்த நாட்டிற்கு சிந்து நதி நீர்தான் முழுமையாகப் பயன்படுகின்றது.  இதில் என்ன வேதனையென்றால், திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து நதி தீரத்தில் அதிகமாக 93 சதவீதம் பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.  சீனா 2 சதவீதம், இந்தியா, மிகக் குறைந்த அளவான 5 சதவீதம் மட்டும்தான் சிந்து நதியின் தண்ணீரை பயன்படுத்துகின்றன.

நாடு விடுதலைக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து உலக வங்கி மத்தியஸ்தம் செய்து ஒப்பந்தத்தை நிறைவேற செய்தது.

சிந்துநதி நீர்ப் பகிர்வு, எல்லைப் பிரச்சினை குறித்து 1950ல் இரு குழுக்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. இரு குழுக்களின் தலைவர்களும் லாகூரில் ஒன்றாகப் படித்தத் தோழர்கள். இந்தியக் குழுவின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஸ்வரண்சிங், பாகிஸ்தான் குழுத் தலைவர் சிக்கந்தர் அலி பெக் ஆகியோர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை சிக்கலின்றி முடிந்தது. பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் டாக்காவுக்கு செல்லும் வழியில் டெல்லி பாலம் விமான நிலையத்தில் இறங்கி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாம் பிரதமர் நேருவை சந்தித்து இது குறித்து இறுதிப்படுத்தினர்.  இதற்குப் பின் 19-23, செப்டம்பர் 1960ல் நேரு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட நேரத்தில் சிந்து நதி நீர் உடன்பாடு முழுமைப் பெற்றது. ஆரம்பத்தில் 13 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம் என்று உடன்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த செலவு 107 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் பாகிஸ்தான் பங்கு 87 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த ஒப்பந்தத்தில் நேருவும், அயூப்கானும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினர். இது குறித்து அயூப்கான் சிந்து நதி நீரை இந்தியாவின் பாலைவனப் பகுதியான இராஜஸ்தானுக்கும் திருப்பிவிடத் தாயர். ஆற்றின் கீழ்ப் பகுதியில் அதற்காக அணைக் கட்டுவோம். பலுசிஸ்தான் பகுதியில் கிடைக்கும் இயற்கை நில வாயுவை பம்பாய்க்கு அனுப்பத் தயார் என்றொல்லாம் பேசினார். பதிலுக்கு லாகூரிலிருந்து டாக்காவுக்கு இந்திய நிலப் பகுதி வழியாக ரயில்களை இயக்கப் பரிசீலிக்கத் தாயர் என்று இந்தியக் குழுவினர் பேசினார். இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தக் கூட விவாதிக்கப்பட்டது. ஆனாலும் மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரை முழுமையாக தங்களுக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கை கடுமையாக எழுந்தது.

சிந்து நதி நீர் பங்கீடு குறித்து மறுபரிசீலனை என்று இந்தியா அறிவித்தவுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, தனது ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திராவை தடுக்க முயல்கிறது. ஏற்கனவே 5 அணைகளை இங்கு கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. ஷாங்மூ என்ற இடத்தில் நீர்மின் நிலையமும் ஜியாபுக்கு என்ற அணையும் கட்டி வருகிறது. இதிலிருந்துதான் அருணாச்சலப் பிரதேசத்திற்கு நீர்வரத்து வருகின்றது. சீனாவிடம் 2013ல் இது குறித்து இந்தியா பேசியும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. திடீரென சீனா இதில் முரண்டு பிடிக்க பாகிஸ்தான் காரணமாக இருக்குமோ என்ற ஐயங்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் மூன்று யுத்தங்கள் (1965, 1971, 1999 - கார்கில்) மற்றும் 1990லிருந்து பாகிஸ்தானுடைய எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றை இந்தியா சந்தித்தபோதிலும், இதுவரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் மீறப்படாமல்தான் இருந்தது.  காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநில விவசாயிகள் இந்த ஒப்பந்தம் தவறானது. இதை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பினர். மேலும் இந்தியா-பாகிஸ்தான் காஷ்மீர் குறித்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. சிம்லா ஒப்பந்தத்தை மீறி எல்லைத்தாண்டி பயங்கரவாத பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ரகசியமாக தொடர்ந்து நுழைவதும், பிரச்சினைகளை உருவாக்குவதுமாக நிலைமைகள் இன்றுவரை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தேவைதானா? இந்தியாவை எதிரி நாடென்று வெளிப்படையாகக் கூறும் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா? என்ற விவாதங்களும் நடந்தவண்ணம் உள்ளன. தொடர்ந்து பாகிஸ்தானுடைய எல்லை ஊடுருவல், பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்வதற்கும் ஒரு அளவு உண்டு.
ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாயமுடியாது என்று பிரதமர் மோடியும் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் தலைமையில் கடந்த 26.9.2016ல் நடந்த கூட்டத்தில் சிந்து நதியின் தண்ணீர் முழுவதும் இந்தியாவுக்கே சொந்தம் என்றும் பாகிஸ்தானுடைய கயமைத் தன்மைக்கு எச்சரிக்கை விடும் வகையில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை:

• இதுவரை பாகிஸ்தான் முழுமையாக பயன்படுத்திய ஜீலம், செனாப், சிந்து நதிகளின் நீரை இனிமேல் இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய நீர்ப் பாசனத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

• இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு ஆணையக் கூட்டம் 112 முறை நடந்துள்ளது. இனிமேல் இந்தக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்காது.

• பாகிஸ்தானுக்கு ஓடிய மூன்று நதிகளில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

• ஜீலம் நதியில் காஷ்மீர் மாநிலத்தில் துவங்கப்பட்ட துல்புல் நீர்மின் திட்டம் 1987ல் நிறுத்தப்பட்டது. திரும்பவும் அந்தப் பணி துவங்கப்படும்.

• சிந்து நதியின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து அது குறித்து முழுமையாக ஆய்ந்து நீர் வரத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்கு நீர்வளம், வெளியுறவு, நிதி, மின்துறை அமைச்சகங்கள் அடங்கிய ஒரு குழு அமைத்து இது குறித்து ஆய்ந்து திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

• ஒப்பந்தத்தின்படி 9.12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கான பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால், மேலும் 4.2 ஏக்கர் நிலப்பரப்புக்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் இதுவரை எட்டு லட்சம் ஏக்கருக்கான தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

• இந்நதியில், 18,600 மெகாவாட் திறனுள்ள, நீர்மின் திட்டத்தை இந்தியா நிறுவ முடியும். ஆனால் இதுவரை 3,034 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 2,525 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள திட்டம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. 5,846 மெகாவாட் திட்டம் இறுதி கட்ட அனுமதிக்கு காத்திருக்கிறது. இவற்றை விரைவுபடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.  அடாவடித்தனம் செய்யும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் முறையில் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.  இதை எதிர்பாராத பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே மத்தியஸ்தம் செய்த உலக வங்கி திரும்பவும் தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்று வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியின் தலைமையகத்திற்கு பாகிஸ்தான் பிரதிநிதிகள் அட்டர்னி ஜெனரல் அஸ்தார் ஆஸப் அலி, அமெரிக்காவி பாகிஸ்தான் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி நேரிடையாக சென்று முறையிட்டுள்ளனர். இதற்கான நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.  பன்னாட்டு நீதிமன்றத்திற்கும் இதை எடுத்துச்செல்வோம் என்று பாகிஸ்தான் கொக்கரிக்கின்றது. 1996 காட் ஒப்பந்தத்தில் அன்றைக்கு இந்தியா பாகிஸ்தானை மிகவும் ஆதரவான நாடு என்ற அந்தஸ்த்தை வழங்கியது தவறாகப் போய்விட்டது. இதனால் இந்தியாவின் வர்த்தகத்தில் பாகிஸ்தானுக்கு சில சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டது.

உலக அளவில் நைல், அமேசான், சீனாவில் யாங்சே, அமெரிக்காவில் மிசிசிப்பி-மிசூரி, யெனிசே-அங்காரா, ஓப்-இர்டிஷ், ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு), ஆமுர், காங்கோ, லெனா, அமு டாரியா, காங்கோ, தாமோதர், தன்யூப், கொலம்பியா, டெட்ரோயிட், நீப்பெர் (Dnieper), நீஸ்ட்டர் (Dniester), இயூபிரட்டீஸ் , ஜோர்தான் ஆறு, மியூஸ் ஆறு, நைஜர் ஆறு, பரனா ஆறு, ரைன், ரோன், வோல்ட்டா போன்ற பல நதிகள் நாடு விட்டு நாடு கடந்து பாய்கின்றன. எந்த சிக்கலும் இல்லாமல் நீர் பங்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏன்? நமது பிரம்மபுத்திரா நதியே இந்தியா, வங்கதேசம், திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே முறையாக நீரைப் பங்கீடு செய்கின்றது.  தீஸ்டா நதி நீரையும் வங்கதேம் பகிர்ந்துகொள்கிறது.  ஆனால் நமது நாட்டில் இன்னும் பல நதிநீர் தாவாக்களுக்கு தீர்வு எட்டப்படாமலேயே உள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிடையே நதிநீர் பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளக்கு ஆதரவாக, தற்போது எடுக்கப்பட்ட சிந்து நதி நீர் குறித்த முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு பேசக்கூடாது. இந்தப் பிரச்சினை வேறு. கர்நாடகாவிற்கும், நமக்கும் நடக்கும் பிரச்சினை வேறு.  காவிரிப் பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை, தென்பெண்ணை ஆற்றுப் பிரச்சினை, கேரளாவோடு நெய்யாறு, உள்ளாறு, செண்பகத்தோப்பு, முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு - புன்னம்புழா போன்ற சிக்கல்களும், ஆந்திராவோடு பாலாறு, பொன்னியாறு பிரச்சினைகளையும் இதைவைத்து முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.  இந்தியாவில் பஞ்சாபுக்கும், ஹரியானாவுக்கும் சட்லஜ்-யமுனா நதிநீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இரண்டு மாநிலங்கள் பிரிந்தபோது, தீராப் பிரச்சினையாக இருந்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், 2004ல் குடியரசுத் தலைவருடைய தலையீட்டால் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் இப்பிரச்சினைத் தீராமல் உள்ளது. மகாநதி நீர் பங்கீடு குறித்து ஓடிசாவும், சட்டீஸ்கருக்கும் பிரச்சினை. ஹிராகுட் அணையில் நீர்த்தேக்கம் குறித்து பிரச்சினைகள் எழுந்தன. சற்று முல்லைப் பெரியாறுப் போன்ற பிரச்சினை. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரத்துக்கு இடையில் கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்சினையும் தீர்க்கப்படாத சிக்கலாக இருந்தாலும், காவிரி மாதிரி இல்லாமல் நீர் பங்கீடு ஓரளவு முறைப்படுத்தப்படுகிறது.  கோதாவரி நதி நீர்ப் பிரச்சினையில் ஒடிசா, சட்டீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் கோலாவரம் அணை கட்டுவது குறித்து பிரச்சினைகள் உள்ளன.


வன்சதாரா நதிநீர் பிரச்சினை ஒடிசா-ஆந்திரப் பிரதேசம் இடையில் சிக்கலாக உள்ளது. இது குறித்து விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.  மகாதாயி / மண்டோவி  நதிநீர் சிக்கல் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலத்துக்கு இடையே நிலவுகிறது. இதையும் விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே நர்மதா ஆற்றுப் பிரச்சினைக் குறித்து குஜராத், மகாராஷ்டிராம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் இடையே பிரச்சினையாகி, 1979ல் நடுவர் மன்றம் தீர்ப்பை அளித்தது. மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கிடையில் நடந்த கோதாவரி நதிநீர் பிரச்சினையிலும் 1980ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைப் போலவே கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சினையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நடந்த பிரச்சினையில் 1976ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.  ஆனால் காவிரிக்கு மட்டும் தீர்ப்பு வந்தும், நடைமுறைப்படுத்தாமல், காவிரி ஒரு கேள்விக் குறியாக உள்ளது.

அண்டை நாடுகளில் பாயும் சிந்து நதி மற்றும் கங்கை-பிரம்மபுத்திரா-மேகனா படுகை என்பதெல்லாம் அண்டைநாடுகளுடன் தீர்க்கப்பட்டு உரிய நீர்வரத்து கிடைக்கின்றது. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் நதிநீர்ப் பிரச்சினையில் எதுவும் தீர்ந்தபாடில்லை.

எல்லைத் தாண்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் பிரச்சினைகளில் சரியான பதிலடி கொடுத்துள்ளோம். நாட்டு விடுதலைக்குப் பின் இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் பாகிஸ்தானுக்கு பெருந்தன்மையாக 93 சதவீத தண்ணீரை கொடுத்தோம். ஆனால் சமஷ்டி அமைப்பான இந்தியாவில் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய நீர் வளத்தை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா தடுப்பது மட்டுமல்லாமல் அடாவடித்தனமாக பேசுவதும், நடந்துகொள்வதும் வேதனையைத் தருகின்றது. நதிகள் இயற்கையாக பாய்ந்தோடுவதை யாராலும் தடுக்க முடியாது. அது இயற்கையின் அருட்கொடை. உலக நாடுகளுக்கு மத்தியில் நதிகள் பாய்ந்தோடுகின்றன. சகோதர பாசத்தோடு நதிநீரை அந்த நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. அந்த மனித நேயம் இந்தியா என்ற சமஷ்டி அமைப்பில் வரவில்லையே என்பதுதான் நம்முடைய வேதனை.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...