Tuesday, October 4, 2016

கொள்ளைப் போகும் தாது மணல்

கொள்ளைப் போகும் தாது மணல்
உயிர்மை இதழ் -அக்,2016
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
 ............................................................
வங்கக் கடலின் தென் பகுதி, அரபிக் கடலை ஒட்டிய தமிழகக் கடற்கரையில் இயற்கை கொஞ்சும் இயற்கையின் அருட்கொடையாம் நிமிர வைக்கும் நெல்லையின் கடற்பகுதிகள், எழில்கொஞ்சும் குமரி மாவட்டத்தின் கடற்கரையிலும் அரிய தாதுமணல் செல்வங்கள் கடந்த பல ஆண்டுகளாக கொள்ளை போகின்றன. இயற்கையாக உருவான கடற்கரை மணலை சில ஆதிக்க சக்திகள் தங்களின் சுயநலத்திற்காக கபளீகரம் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி செல்வத்தில் ஜொலிக்கின்றன. வல்லான் வகுத்ததுதான் வழி என்ற நிலையில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற சூழல். இதனால் கடற்கரையோர கிராமங்கள் பேரிடர் தாக்குதலில் சிக்கி தவிக்கின்றன. கடல் வளத்தையும், சுரண்டும்போது பல பாதிப்புகளை மனித சமுதாயம் சந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான பாறைகள் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, வெப்பத்தில் உருகி, குளிரில் சிதைந்து, சிறிது சிறிதாக கடற்கரையோர மணலில் சேர்கின்றன. இந்த கனிமத் துகள்கள் மழை வெள்ளத்திலும், ஆற்று வெள்ளத்திலும் கொண்டு வந்து கடல் மண்ணோடு சேர்கின்றன. இதற்கு அரிய இயற்கை குணங்கள் உண்டு. தென் தமிழக கடற்கரைப் பகுதிகளில் 9 மீட்டர் ஆழம் வரை இந்த கனிமங்கள் படிந்துள்ளன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. அணுசக்தி துறைக்குத் தேவையான தோரியம், மோனோசைட், கார்நெட், சிலுமினெட், சிர்கான் போன்ற கனிமங்கள் தென் தமிழக கடற்பகுதிகளில் படிமங்களாக உள்ளன. அவை தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு இயற்கை செல்வங்கள் பாழாகிவிட்டன. இதை எதிர்த்து பல குரல்கள் எழுப்பியும் எந்த பயனும் இல்லாமல் மத்திய-மாநில அரசுகள் மவுனமே காக்கின்றன.  இதனால் நாட்டின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் துவங்கி, தூத்துக்குடி, திருச்செந்தூர், உவரி, கூடுதாளை, குமரிமுனை வரை 140 கிலோ மீட்டர் வரை இந்த இயற்கை தாது வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன.  மொத்தம் 81 குவாரிகளுக்கு மேல் இருப்பதாக ஒரு கணக்கு. 1974ல் இருந்து இந்த தாது மணலை அள்ளத் துவங்கினர். இந்த வேதனைகள் யாவும் எந்த சுவடுகளும் இல்லாமல் அமைதியாக தொடர்ந்து நடைபெற்று வருவதுதான் வேதனையான விஷயம். எவ்வளவோ விழிப்புணர்வு இருந்தும் தவறு செய்பவர்கள் தொடர்ந்து இந்த இயற்கை வளத்தை கொள்ளையடித்துதான் வருகின்றார்கள். அதிகார வர்க்கமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.
 
இந்திய பொருளாதாரம், கடலோர கிராமங்களின் பாதுகாப்பு  மற்றும் பல்வேறு பிரச்னைகளை தாதுமணல் விஷயம் தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
 
தற்போது மாநில அளவில் இந்தப் பிரச்னை முழு விவாத  பொருளாக மாறிவிட்ட நிலையில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் தன்னிச்சையான விசாரணையை  தொடங்கி உள்ளன.
ஆனால், மணல் மாபியாக்களின் மிரட்டலும் தொடர்ந்தவாறே உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தென் மாநிலத்தின் மிக முக்கிய துறைமுக நகரம் தூத்துக்குடி. உலக அளவில் முத்துக்கு பெயர் பெற்ற இந்த கந்தக பூமியில்  ஸ்பிக் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன.
 
மிகவும் ரம்மியமான தூத்துக்குடி கடற்கரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் இப்போது படிப்படியாக  பாலைவனமாக மாறி வருகின்றன. எல்லாவற்றிற்கும் காரணம் இயற்கை வளமான தாது மணல் சுரண்டப்படுவதுதான்.
 
பெரும் பாலும் மரங்களைக்  காணமுடியவில்லை. நிலத்தடி நீர் சுத்தமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில கிராமங்களில் மட்டும் ஒன்றும் இரண்டுமாக பனை மரங்கள் மட்டும்  தென்படுகின்றன.
அவையும் விரைவில் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த அழிவுக்கு காரணம் கடற்கரையோர கிராமங்களில் தாது மணல்  மாபியாவின் ராஜ்யம்தான்.
 
அணு ஆராய்ச்சிக்கு மோனோசைட் தாது:
 
தூத்துக்குடி கடற்கரையோர மணலில் கிடைக்கும் மோனோசைட் தாது அணு ஆராய்ச்சிக்கும், விண்வெளி  ஆராய்ச்சிக்கும் மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும். சராசரியாக 2 முதல் 5 சதவீதம் வரை மோனோசைட் கடற்கரை மணலில் உள்ளது.
 
மாபியா கும்பல்  ஆதிக்கம்:
 
தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள மாபியாவை ஒருவரும் கேள்வி கேட்க முடியாது.
முதலில் பணத்தால் சமாளிப்பார்கள், இல்லையென்றால்  மிரட்டல் விடுப்பார்கள். அதிகபட்சமாக ஆளையே காலி பண்ணும் நிலைக்கு செல்வார்கள்.
 
இதனால் அவர்களை எதிர்த்து எந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களும்,  பொது நல விரும்பிகளும் பேசுவது இல்லை. சமூக ஆர்வலர்களும் நமக்கு ஏன் வம்பு என்று அடங்கிப் போனார்கள். மக்களின் இந்த பயத்தை தங்களுக்கு  சாதகமாக்கிய மணல் மாபியாக்கள் கடற்கரை கிராமங்கள் அனைத்தையும் சுரண்ட ஆரம்பித்தார்கள்.
அழியும் நிலையில் கிராமங்கள்:
பெரியசாமிபுரம், வைப்பாறு, வேம்பாறு, பெரியதாளை ஆகிய கிராமங்கள் கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்துள்ளது.  விளைநிலங்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.
விவசாயத்தைப் பார்த்தே ரொம்ப நாளாகி விட்டது என்று இந்த கிராம மக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
உச்ச  கட்டமாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த கிராமங்களில் மாநகரங்களைப் போல் போக்குவரத்துக்கு பஞ்சமில்லை. எல்லாம் டிரக்குகளும், அரைபாடி  லாரிகளும் கிராமங்களில் எப்போதும் சுற்றி வருகின்றன.
கேள்வி கேட்டு பிரச்னை செய்பவர்கள் மணலோடு மணலாக டிரக்குகளில் ஏற்படுவார்கள் என்பதுதான்  வேதனை.
 
கிராமத்துக்குள் கடல் நீர்:
பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த போதகர் செல்வ ஜார்ஜ் கூறும் போது, மணல்தானே அதுவும் கொஞ்சம்தானே எடுக்கிறார்கள் என்று  முதலில் அனுமதித்தோம்.
ஆனால், போகப்போக எங்கள் கிராமமே அழியும் நிலை வந்தபிறகு சுதாரித்துக் கொண்டோம்.
மணல் கொள்ளையால் இப்போது  இங்கே உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலையே விட்டுவிட்டனர்.
கடல் நீர் கிராமத்துக்குள் வந்துவிட்டது.
வேப்ப மரங்களைத் தவிர வேற எந்த மரமும்  வளர்வதில்லை என்று கூறினார்.
 
கிங்ஸ்டன் கடற்கரை மணல் ஆராய்ச்ச்சி:
லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கடற்கரை மணல் ஆராய்ச்சிப் பணியில் உள்ள பஹ்ரம் ஜியாஸீ  கூறும்போது, இந்தியாவில் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதிகளில் மோனோசைட் அதிக அளவில் உள்ளன.
உலக அளவில் 12 மில்லியன் டன்  மோனோசைட் உள்ளது. இவற்றில் மூன்றில் 2 பகுதி இந்தியாவில் அதுவும் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கிடைக்கின்றன என்று கூறியுள்ளார்.
 
யுரேனியம் 233:
மோனோசைட் தாதுவுடன் சுண்ணாம்பு, ரூட்டில், ஜிர்கான், கார்னெட் ஆகிய தாதுப்பொருட்களும் சேர்ந்துள்ளது. இந்த தாது மணலில் கிடைக்கும்  தாதுப்பொருளில் உள்ள தோரியம் மற்றும் யுரேனியம் பிரித்தெடுக்கப்படும்போது கிடைக்கும் மோனோசைட்டுக்கு தனி மதிப்பு கிடைக்கிறது.
 
இந்த மோனோசைட் நியூக்கிளியர் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப் படுகிறது. இந்த மோனோசைட்டை அணு ஆய்வுக்கூடங்களில் உள்ள ரியாக்டர்களில்  செலுத்துவதால் யுரேனியம்-233 என்ற வேதிப்பொருள் கிடைக்கிறது.
இந்த வேதிப்பொருள் அணுசக்தி ஆய்வில் அணுவைப் பிளப்பதற்கு பயன்படுத்தப்படும் மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று கூறுகிறார் பொக்ரான் நியூக்கிளியர் ஆராய்ச்சியாளர் சந்தானம்.
 
அதனால்தான், மோனோசைட் விதிமுறைகளுக்கு உட்பட்ட பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவேதான், தாது மணலை எடுக்கும் அதிகாரம் மத்திய  அரசுக்கு மட்டுமே உள்ளது.
ஆனால், தமிழக அரசு தனியார் நிறுவனத்துக்கு இந்த தாது மணலை அள்ள உரிமம் கொடுத்து விட்டது.
 
* மோனோசைட்  வரையறுக்கப்பட்ட அரியவகை கனிமங்கள்  பட்டியலில் உள்ளது. எனவே  மத்திய அரசிற்கு மட்டுமே மோனோசைட்டை  எடுக்கும் உரிமை  உண்டு.
 
* அரிய வகை கனிமங்கள் அடங்கிய தாது மணல் குவாரிகளை தொடங்க, நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அனுமதி தரும் அதிகாரம்  உள்ளது.
 
* தனியார் நிறுவனங்கள் தாது மணலில் குவாரிகளை நடத்தினால்  அணு சக்தி ஆராய்ச்சி வாரியத்தின் விதிகளின்படி மோனோசைட்டை   இருப்பில் வைக்க  வேண்டும். இது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஐதராபாத்தில் உள்ள அணு சக்தி  கனிமங்கள்  இயக்குனரகத்திற்கு அறிக்கை தர வேண்டும்.
 
* அணு சக்தி(சுரங்க செயல்பாடுகள்,  கனிமங்கள், வரையறுக்கப்பட்ட பொருட்களை யை£ளுதல்) விதிகள்(1984) பின்னர் அதாவது 1998ல்  திருத்தப்பட்டது. அதன்படி  அரிய வகை கனிமங்களுக்கான குவாரிகளை தனியார் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மோனோசைட்  எடுக்க மட்டும் அனுமதி கிடையாது என்பது  குறிப்பிடத்தக்கது.
 
* மோனோசைட், தோரியம் ஆகியவை உலோகமாக, உலோக கலவையாக, வேதிப்பொருட்களாக, அடர் பொருளாக என எந்த நிலையில்  இருந்தாலும் அவை  வரையறுக்கப்பட்ட பொருட்கள்தான் என்று அணு சக்தி சட்டம்(1962) தெரிவிக்கிறது.
 
எனவே இந்தச் சட்டத்தின் படி இந்திய அரசிடம் உரிமம் பெற்றவர்களை தவிர மற்றவர்கள், வரையறுக்கப்பட்ட பட்டியலில் உள்ள  கனிமங்களை தோண்டி  எடுப்பதோ, பிரித்தெடுப்பதோ, கையில் வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதோ  குற்றம்.
உரிமம் பெறாமலும் மோனோசைட்  இந்த பட்டியலில் இடம் பெறாது.
 
ராணுவத்தில் பயன்பாடு
அரிய வகை தனிமங்கள் எனப்படும் இல்மனைட், சிலிமனைட், கார்நெட்,  சிர்கான், ரூடைல், மோனோசைட் ஆகியவை 1064.79 மில்லியன்  டன்  இந்தியாவில்  இருப்பதாக என்று  இந்தியாவின் அணு சக்தி  துறையில் 2013-14ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இவற்றில் இல்மனைட் 593 மில்லியன் டன்,   சிலிமனைட் 226 மில்லியன் டன், கார்நெட் 168 மில்லியன் டன்,  சிர்கான் 34 மில்லியன் டன், ரூடைல் 31 மில்லியன் டன்,  மோனோசைட் 11.9 மில்லியன் டனும்  உள்ளதாக  அணு கனிமங்களுக்கான நில ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
*இந்த அரிய வகை கனிமங்கள் ராணுவத்திலும், தொலைத் தொடர்புகான கண்ணாடி இழை தயாரிப்பதிலும்,  விண்வெளி, அணுக்கரு  ஆராய்ச்சி துறையிலும்  பயன்படுத்தப்படுகின்றன.
 
எப்படி உரிமம் பெறுகிறார்கள்?
சுரங்கங்கள் நடத்த விரும்புபவர்கள் மாநில அரசு மூலமாக மத்திய அரசின் சுரங்கங்கள் துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள்  அணு சக்தி துறையில் பயன்படும் இல்மனைட், சிர்கான், கார்நெட், சிலிமனைட், ரூடைல் போன்ற பொருட்களை  எடுப்பதற்கான சுரங்கம் என்றால்  விண்ணப்பம்  பெற்ற சரங்க  அமைச்சகம்  அணு சக்தி துறையிடம் தடையில்லா சான்றிதழ்  கேட்கும்.
தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் விண்ணப்பத்தை  அனுமதிக்கலாம் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும்.
அதன் பிறகும் அனுமதி அளிப்பது, நிராகரிப்பது மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது. காரணம் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு  வாரியத்தின்  விதிகளை பூர்த்தி செய்யப் பட்டால்தான் அனுமதி என்பதுதான்.
ஆனால் தமிழகத்தில் தாது மணல் கொள்ளையில் இந்த  விதிகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள்  மீறியதால் தான் சுற்றுச்சூழலுக்கும் கேடு, அரசுக்கும் இழப்பு.
 
சமூக விரோதிகளுக்காக மாற்றப்பட்ட சட்டம்
இல்மனைட், ரூடைல், கார்நெட் ஆகியவற்றை 20 முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்க 2000ம் ஆண்டுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது.
 
பத்தாண்டுகளுக்கு பிறகு  தமிழ்நாடு மாற்றங்களுடன் சான்றளித்தது. அதன்பிறகு  மோனோசைட்டும்  எடுக்கலாம் என்று  பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்டது. அதை வைத்து  தமிழகத்தில் தாது மணல் கொள்ளையர்கள் மோனோசைட்டையும் எடுக்க ஆரம்பித்தனர்.
 
ஆனால் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை  கிளையில் 2013 ஜூன் மாதம் நடைப்பெற்ற வழக்கில் பதிலளித்த அணு  சக்தி துறை, தனியார் நிறுவனங்கள் எதற்கும் மோனோசைட் எடுக்க உரிமம்  வழங்கவில்லை என்று தெரிவித்தது.
 
அதே ஆண்டு மார்ச் மாதம்  இந்தப் பிரச்னை தொடர்பாக மக்களவையில் நடைப்பெற்ற விவாதத்தின் போது அளிக்கப்பட்ட பதிலில்  இந்திய அரியவகை மணல் நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு மட்டுமே மோனோசைட்  ஏற்றுமதி செய்ய அனுமதி  அளிக்கப்பட்டுள்ள என்று தெளிவாக்கப் பட்டிருந்தது.
 
மத்திய, மாநில அரசுகளின் பதில் என்ன என்பதுதான் நமது வினா.  1995 லிருந்தே தாது மணலை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் மணல் அரசியல் என்ற ஒரு அரசியல் ஏற்பட்டுவிட்டது. 30.6.1996 அன்று பெருமணலில் பெரிய சாலை மறியல் போராட்டம், 4.10.1996 அன்று ராதாபுரம் பேருந்து நிலையத்தில் பட்டினி போராட்டம், 20.3.1997ல் பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் போராட்டம், கடற்கரையோர கிராம மக்கள் இதை எதிர்த்து 15.12.1996ல் அரசு பேருந்துகளையே சிறைபிடித்தனர். 2013ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை எதிர்த்து கடுமையான போராட்டம். இந்தப் போராட்டங்கள் சென்னை வரை நடத்தப்பட்டும் செவிடன் காதில் சங்கை ஊதிய கதையாகத்தான் தாதுமணல் பிரச்சினை உள்ளது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...