61 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை..
-------------------------------------
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் பவானிசாகர்அணை அமைந்துள்ளது. இந்த அணை 1948 ம் ஆண்டு பவானி ஆறும் மோயாறும்கலக்குமிடத்தில் ரூ.10.50 கோடி செலவில் கட்டு மானப்பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக 7 ஆண்டு நடைபெற்ற கட்டுமானப்பணிக்கு பின் 1955 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானிபிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.இது தவிர பவானி ஆற்றுப்பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர்நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.அணையின் முழு கொள்ளளவான 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த அணையின் கரையின் நீளம் சுமார் 8.78 கிலோ மீட்டர். அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சேறு கழித்து 105 அடி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அணையின் முழுத் தேக்க நீர்ப்பரப்பு 30 சதுர மைல். தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையையும் இந்த அணை பெற்றுள்ளது.கீழ்பவானி பிரதானக் கால்வாயின் நீளம் 200 கிலோ மீட்டர். பிரதான கால்வாயிலிருந்து 800 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால், 1900கிலோ மீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளன. அணையில் ஆற்றுமதகு 9 ம் கீழ்பவானி வாய்க்கால் மதகு 3 ம் நீர் வழிந்தோடி மதகு 9 என மொத்தம் 19 மதகு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் முலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் முலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அணையின் கட்டுமான பணி நடை பெற்ற போது 1953 ல்அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். முற்றிலும் மண்ணிணாலான இந்த அணை 60 ஆண்டுகளைக் கடந்தும் சிறிது கூட விரிசல் ஏற்படாமல் உறுதித் தன்மை வாய்ந்த அணையாக உள்ளது. இந்த அணை கட்டப்பட்டதால் தரிசு நிலங்கள் நஞ்சை நிலங்களாக மாறின.லட்சக்கணக்காண விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீர் வழங்க ஏதுவானது. நாடு போற்றும் இந்த அணை 60 ஆண்டுகளை கடந்து 61 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
No comments:
Post a Comment