Friday, October 21, 2016

கோட்பாடு(Theory) என்றால் என்ன?

கோட்பாடு(Theory) என்றால் என்ன?
 சொல் பற்றிய குழப்பங்கள்.
  
1)கைலாசபதி எழுதிய விமரிசனம் அன்று கோட்பாடு என்று கூறப்பட்டது. சி.சு.செல்லப்பா அப்படி அழைத்தார். காரணம் கைலாசபதி கம்யூனிஸ்டு.இங்குப் கோட்பாடு என்பது வேறு. சித்தாந்தம் என்ற சொல்லுக்கு சமமான தனித்தமிழ்ச்சொல். மாறாக சி.சு.செ.தான் எழுதியது விமரிசனம் என்றார்.

2) வேறு ஒரு கோட்பாடு உள்ளது. சில அபிப்ராயங்களை அதிக அபிப்பிராயங்களுடன் சேர்த்து நிரூபிக்கத்தக்க, எதிர்விவாதங்களுடன் தாக்குப்பிடிக்கத்தக்க முறையில் முன்வைப்பது. (பல்கலைக் கழக ஆய்வு 
முறையியலில் கற்பிப்பார்கள்.) சமூகஆய்வுகளில் அதிகம் வரும்..

3) மூன்றாவதான #கோட்பாடுதான் சிக்கலானது.இலக்கிய 
விமரிசனத்துக்கு மாற்றாய் மேற்கில் உருவாகி  அமைப்பியலை அடித்தளமாய் வைத்து உருவானது. எண்பதுகளில் இருந்து தமிழில் பேசப்பட்டுக் கொண்டு வரப்படுவது. ஆங்கிலத்தில் #Theory  என்பர். (மேலே இரண்டாம் எண்ணில் சொன்னதும் 'தியரி' தான்  மூன்றாம்  எண்ணில் சொன்னதும் தியரி தான். இதுதான் குழப்பத்துக்குக் காரணம்) ஆனால் மூன்றாம் எண்ணில் சொல்லப்படும் தியரி அமைப்பியல்,  பின்னமைப்பியல்,
#பின்னவீனத்துவம் சார்ந்த சிந்தனையாளர்களோடு இணைத்துப் பேசப்படுவது -பார்த், ஃபூக்கோ, டெரிடா போன்றோர் இங்கு பல்வேறு கிரமத்தில் வருவர். இந்த தியரி, விமரிசனமும் தியரியும் இணைந்தது.இது தெரியாதவர்கள்தான் இலக்கிய விமரிசனம் போச்சு என்று 'கண்ண்ண்ணீர்' வடிப்பவர்கள்.
......

கோட்பாடும் தத்துவமும்  - விவாதம்
  
படைப்பும் கோட்பாடும் எதிர் எதிரானவை அல்ல. கோட்பாடு தத்துவத்துடன் தொடர்பு கொண்டதாகும். இவைபல்கலைக்கழகங்களில்   விவாதிக்கப்பட   வேண்டியவை.மேற்கத்திய தத்துவவாதிகள் எல்லோரும் பல்கலைக்கழகம்   சார்ந்தவர்கள்.  பார்த், டெரிடா எல்லோரும். தமிழில் தொல்காப்பியம் போன்றவற்றில் பயிற்சி உள்ளவர்கள் தமிழ்க் கோட்பாட்டில் கவனம் செலுத்தலாம். மேற்கின் தத்துவத்திற்கு பதிலியாய் தமிழ் உரைமரபையும் சிந்தனை மரபையும் (சைவம், வைணவம், பெரியார்) கொண்டுவரலாம். மேற்கின் கோட்பாட்டை இனிமேல் தவிர்ப்பதுகூட தேவை. அப்போது மிரட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வர வாய்ப்பில்லை. சிற்றேடு இதழில் தமிழ்கோட்பாட்டை உருவாக்க முயல்கிறோம். இதில் ஓராபத்து பண்டிதம் புகுந்துவிடும். தமிழ்க்கோட்பாட்டைப் பண்டிதத்திடமிருந்தும் வெறும் மேற்கு எனப்பேசுகிறவர்களிடமிருந்தும் காக்க வேண்டும். லக்கானை விளக்க தொல்காப்பியக் கருத்துக்கள் பயன் படுத்திக்கட்டுரைகள் சிற்றேடு இதழில் வந்துள்ளன.   என்ன  நினைக்கிறீர்கள்?

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...