ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்!
ஐநா அவையில் வெள்ளிக்கிழமை (28.9.2016) நடந்த தேர்தலில் உலகின் அனைத்து நாடுகளும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைப் பேரவைக்கு (UN Human Rights Council), 2017 ஆம் ஆண்டுக்காக 14 உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் ரஷ்ய நாடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும், "சிரியா நாட்டில், நேரடியாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்யா எவ்வாறு மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர் ஆகலாம்?" என்கிற கேள்வியை முன்வைத்தன. ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்தன.
எனினும், பன்னாட்டு அரசியலில் ரஷ்யாவுக்கு இருக்கும் பலத்தை வைத்து, அந்த நாடு வெற்றிபெரும் என்றே பெரும்பாலான ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால், அனைத்து நம்பிக்கைகளையும் மீறி, ரஷ்யா தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.
மனித உரிமைப் பேரவை உறுப்பினர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் தகுதி ஆகும். தொடர்ந்து இரண்டு முறை உறுப்பினராக இருந்த நாடுகள் மூன்றாவது தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு மீண்டும் தேர்தலில் நிற்கலாம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டில் உறுப்பினராக இல்லாத அமெரிக்கா, இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் 2017 ஆம் ஆண்டுமுதல் ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக சேர்கிறது. இந்தியா ஏற்கனவே, உறுப்பு நாடாக இருந்துவருகிறது.
No comments:
Post a Comment