Tuesday, October 25, 2016

கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி

கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி... மான ரோஷமில்லாத தமிழகமும், தமிழக மக்களும்..

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. சுற்றுச்சூழலை காக்க இன்னும் ஏராளமான சட்டங்களை கடுமையாக பின்பற்றுகிறது கேரளா.

கேரளா ஆறுகளில் மண் அள்ள அனுமதியில்லை என்பதால் தமிழகத்தில் இருந்து பொக்கிஷமான மணல் பெரும் விலைக்கு கேரளாவில் விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கேரளாவில் கொட்ட அனுமதிக்கப்படாத அபாயகரமான மருத்துவ கழிவுகளை, பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு கொட்டப்படுகிறது தெரியுமா? சந்தேகமே வேண்டாம் தமிழகத்தில் தான்.

கேரளாவில் அபாயகழிவுகளை மருத்துவக்கழிவுகளை உரியமுறையில் அழிக்காத மருத்துவமனைகள் மீது கேரளா அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதால், மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்திற்கு கடத்தி கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களின் வழியே சர்வசாதாரணமாக கொண்டு வந்த கொட்டப்பட்டு வருவதற்கு உடந்தையாக இருப்பவர்களே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

கேரளாவில் இருந்து இது போன்ற அபாயகரமான கழிவுகள் தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டப்படுவது நடந்து வருவது தான். அவ்வப்போது பொதுமக்களே இதுபோன்ற கழிவு லாரிகளை பிடித்து அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவதும் நடந்து வந்தது. ஆனால் இதன் உச்சகட்டமாக 2 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து, அதில் அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளது தான் கொடுமை.

தமிழக எல்லை பகுதியான எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் பிளாஷ்டிக் கழிவுகளை பிரிக்க பயன்படுத்திக் கொள்வதாக கூறி குத்தகைக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு எடுத்துள்ளனர். அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஷ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்றவற்றை கொட்டத்தொடங்கினர். துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர். யாரும் கண்டுகொள்ளாததால் தினமும் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுகளை கொண்டு வரத்தொடங்கினர்.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. பிளாஷ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின. இதனால் பொறுமை இழந்த அப்பகுதி பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று அங்கு திரண்டு சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். 2 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய குப்பை கிடங்கு போல் காட்சியளித்தது அந்த இடம்.

அப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. விவசாய நிலம் முழுக்க கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை நிலத்தின் ஒரு பகுதியில் புதைத்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது. உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர். இதையெல்லாம் கண்டு மக்கள் கொதித்து போயினர்..

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்  லாரிகளை சிறை பிடித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்று லாரிகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் லாரிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கே கொண்டு செல்ல உத்தரவிடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் தமிழகத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன.

அபாயகரமான மருத்துவக்கழிவுகள்  மாநிலத்தை விட்டு போனால் போதும் என கேரளாவில் இருந்து இந்த கழிவுகளை தமிழகத்துக்கு ஏற்றி வரும் லாரிகளை எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் அனுப்பி வைக்கிறது கேரளா. அபாயகரமான கழிவுகளுடன் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் லாரிகளுக்கு தலா 200 லஞ்சம் பெற்று அனுமதிக்கிறது தமிழகம்.

அபாயகரமான கழிவுகளுடன் தமிழகம் வந்த லாரிகளில் சில லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்லும் லாரிகளான இவை, கேரளாவில் இருந்து அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தான் கொடுமை.

அபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்திற்கு போலீசார் மட்டுமே வந்தனர். வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேற்று மாலை வரை வரவில்லை. தமிழகத்தின் சூழல் பாதுகாப்பில அதிகாரிகள் காட்டும் அக்கறை இது தான்.
பொக்கிஷங்களான மணலையும், உணவுக்கு அரிசியையும், காய்கறியையும் கேரளாவுக்கு கொட்டிக்கொடுக்கிறோம். பதிலுக்கு அபாயகரமான குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் கடவுளின் தேசமான கேரளாவால் மனிதர்கள் வாழ முடியாத தேசமாக தமிழகம் மாறிவிடும். என்ன செய்யப்போகிறது தமிழக அரசு...

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...