———————————————————-
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அன்றைக்கு ஆந்திரம், தமிழ்நாடு , தென் கர்நாடகம், கேரளத்தின் மலபார், தமிழகத்தில் கன்னியாகுமரி நீங்கலாக இருந்த சென்னை ராஜதானியின் பிரதமர் – பிரீமியர்(முதல் அமைச்சர்). அவர் பொறுப்பில் இருந்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை புதிதாக ஏற்படுத்தி அச்சு கலைக்கு இன்றைய வசதி -எளிதாக இல்லா நிலையில், தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்க உரிய ஆணையைப் பிறப்பித்தார். இன்றைக்குள்ள பலருக்கு இது தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தாலும், திட்டமிட்டு வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவார்கள்.
இந்த கலைக்களஞ்சியத்தைக் கொண்டு வர அன்றைய கல்வி அமைச்சர் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார், பெரியசாமிதூரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர்கள் முழுமூச்சுடன் செயல்பட்டனர். தெலுங்கு, கன்னடம்,
ம லையாளம் ஆகிய மொழிகள் பேசக் கூடிய மக்கள் சென்னை ராஜதானியில் இருந்தபோதிலும் தமிழுக்காக ஓமந்தூரார் செய்தது பலரிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. என்றாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அப்படித்தான்... எங்கள் மொழி தமிழ் என்று ஓமந்தூரார் செய்ததை இன்று நினைத்தப் பார்க்க யாருமில்லை.
கடந்த 1947 - இல் தொடங்கப்பட்ட தமிழ் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளாக வெளிவந்தது. முதல் தொகுதி 1954 - இல் வெளிவந்தது. கடைசித் தொகுதி 1966-67 காலகட்டத்தில் வெளிவந்தது. தமிழுக்கு ஓமந்தூரார் அளித்த இந்த அற்புதமான கொடையை யாரும் மறுக்க முடியாது.
இன்று பெரிதாக பேப்படும் சமூகநீதி ஆணையை நாட்டின் விடுதலைக்குப் பின் முதன்முதலாக பிறப்பித்தவரும் ஓமந்தூரார்தான். அது மட்டுமல்ல, தமிழைப் பயிற்சி மொழியாக்குதல், தமிழ் பாட புத்தகங்களை வெளியிடுதல் ஆகியவற்றுக்கான அரசு ஆணகளைப் பிறப்பித்தவரும் அவர்தான். ஹைதராபாத் நிஜாம் பகுதிகள் இணைப்பு என பல பணிகள் உண்டு
எந்தவொரு தகுதியுமற்ற நபர்களைத் தூக்கி நிறுத்தும் இக்காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி, சமூகநீதி, விவசாய முதல்வர் என பெயர் பெற்ற ஓமந்தூராரின் படம் கடந்த 70 ஆண்டுகளாக சட்டபேரவையில் வைக்கப்படவில்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் பல்வேறு கோரிக்கைகளில் விளைவாக தமிழ்நாடு அரசு வைத்தது.
தமிழகத்தில் புது அணைகளைக் கட்ட ஆரம்பத்தில் திட்டம் இட்டவரும் ஓமந்தூரார்தான். இவருக்குப் பின் வந்த ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா இவர் திட்டமிட்ட ஆணைகளுக்குப் பணம் ஒதுக்கினார். நேர்மையான இரண்டாவது முதல்வராகவும் விளங்கினார். பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் படம் இதுவரை சட்டமன்றத்தில் வைக்கப்படவில்லை. அது குறித்த சிந்தனையும் தமிழ்சாதிக்கு இன்னும் வரவில்லை.
‘விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?’ என்ற பாரதியின் கவிதை வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.
#KSR_Post.
20-1-2023.
No comments:
Post a Comment