Monday, January 30, 2023

இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியவில்லை. அனந்தசாமியை பற்றி

#அன்றைய காங்கிரஸ் நிகழ்வுகள்….. 
—————————————
இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியவில்லை. 

அனந்தசாமி எனபவரை அன்றைக்கு காங்கிரஸில் இருந்த பழ.நெடுமாறன். எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம், ப.சிதம்பரம் என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு தெரிந்திருக்கலாம்.  ஒருக்கால் பீட்டர் அல்போன்ஸுக்கும் ஓரளவு தெரிந்திருக்கலாம். குமரி அனந்தன் அப்போது காங்கிரஸ் கட்சியில் இல்லை. கண்ணதாசன் அன்றைக்கு உயிரோடு இருந்தார். 
 
அனந்தசாமி காங்கிரசில் எந்தவொரு பொறுப்பும் வகிக்காமல் இருந்தாலும், அவரால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக ஆனதெல்லாம் உண்மை. அவரிடம் காங்கிரசில் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனும், சி.சுப்பிரமணியமும், முன்னாள் முதல்வர் பக்தவத்சலமும் கூட சற்று  கவனமாக தூரமான நட்பையே வைத்திருந்தனர். அந்த அளவுக்கு அவர் ஆபத்தான மனிதர். 
 
சென்னையில் அறுபதுகளில் இருந்து 1983 வரை காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு முக்கிய பிரமுகராக அவர் திகழ்ந்தார்.  அவர் வீடு, ஆழ்வார்பேட்டை கவிதா ஓட்டலுக்கு எதிர்ப்புறம் இருந்தது. அவர் வீட்டின் முன்புறத்தில்தான் இப்போது பாலம் கட்டப்பட்டு பாலத்தின் இறுதிப் பகுதி உள்ளது. ரமணர், மகரிஷி படத்தை அனந்தசாமி வைத்துக் கொள்வார். ஆனால் அதற்கு மாறாக செய்வதெல்லாம் அயோக்கியத்தனமாக இருக்கும். 
  
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் நடந்தபோது, நெடுமாறனும், கருப்பையா மூப்பனாரும் போட்டியிட்டார்கள்.  அந்த தேர்தல் 10 ஆகஸ்ட் 1977  மயிலாப்பூர் சாயி பாபா திருமண மண்டபத்தில் நடந்தது. தஞ்சை ராமமூர்த்தி  3 ஆவது வேட்பாளராக நின்று  வாக்குகளைப் பிரித்துவிட்டார். திருநெல்வேலி செல்லப்பாண்டியன் வாக்களிக்கிறேன் என்று நெடுமாறனுக்கு உறுதி கொடுத்துவிட்டு,  வேறு சில வகையில் கடைசி நேரத்தில் மூப்பனாருக்கு வாக்களித்தார்.  இதனால்  மூப்பனார் வெற்றி பெற்றார். மூப்பனார் வெற்றியின் பின்புலத்தில் இந்த அனந்தசாமியின் வேலை இருந்தது. இந்த தேர்தல்தான்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடைசி தலைவர் தேர்தல். அதற்குப் பிறகு இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. பி.வி.நரசிம்ம ராவ் அன்று நெடுமாறன் நலம் விரும்பியாகவும், பிரணப் முகர்ஜி மூப்பனார் பக்கம் இருந்தார்.அப்போது நான் மாணவர் காங்கிரஸ் நிர்வாகி.
  
அங்கு அனந்தசாமி என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது தவறுதலாக சில வார்த்தைகளை விட்டுவிட்டார். எனக்கு அப்போது சின்ன வயது. ‘தாயோளி’ என்று எங்களூர் பாஷையில் அவரைத் திட்டிக் கொண்டே, எனது காலில் இருந்து செருப்பைக் கழற்றி அவரை அடிக்கப் போய்விட்டேன். அப்போது வந்து  என்னைத் தடுத்த அண்ணன் வாழப்பாடி ராமமூர்த்தியிடம் அனந்தசாமி என்னிடம் சொன்னதைச் சொன்னேன். அவருக்கும் கோபம் வந்துவிட்டது. அப்போது பொறையார் ஜம்பு, தி.சு.கிள்ளிவளவன்,. எம்.கே.டி.சுப்பிரமணியம், தமிழழகன், ஆர்.எஸ்.பாண்டியன், குன்னக்குடி தங்கவேலன், தின்டுக்கல் அழகர்சாமி,திருமாறன், வழக்கறிஞர்கள் நடனசாபாபதி, ஜேசய்யா ஆகியோர் இருந்ததாக எனக்கு நினைவு. இது நடந்து  ஏறத்தாழ  43-44 ஆண்டுகளாகிவிட்டன.
 
நல்லவர்களை  ஒழித்துக் கட்ட கூடிய மாமனிதராக வலம் வந்த அனந்தசாமி,  ஜெயந்தி நடராஜன் போன்றவர்களுக்கு எல்லாம் நல்லவராகவே இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஆஷாடபூதிகள் வெட்கமில்லாமல், மானமில்லாமல் மாமனிதர்களாக இருக்கிறார்கள். அனந்தசாமி ஒரு குடிலனைப்  போன்றவர். சமீபத்திய தினமலரில் அவரைப் பற்றி படிக்கும்போது,  எனக்கு அவரைப் பற்றிய பழைய நினைவுகள் வந்தன. தினமலரில் வந்ததையும் இத்துடன் இணைத்து இருக்கிறேன்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
30-1-2023.

https://imgg.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3224673.jpg?w=400&dpr=3.0

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...