Sunday, January 15, 2023

#*பொங்கல்நல் வாழ்த்துக்கள்*. (3)




#*பொழி கட்டுதல்* 
அதிகாலை விடியலில்,ஆவாரம்பூ- கன்னிப் பிளை பூ,வேப்பிலை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வீட்டின் கதவு ஜன்னல்கள் என்று வீட்டைச் சுற்றிலும் பொழி(காப்பு)கட்டுதல் கட்டும் பழக்கம் எங்கள் கரிசல்  மண்   பக்கம் உண்டு. காடுகளிலும்,  தோட்டத்திலும் கட்டுத்தரையிலும்,  மோட்டார் பம்பு ஷெட்களிலும் கோழிகூப்பிடும் போதே பொழி  கட்டுவாங்க.  இது கிருமிகளிடமிருந்து  நம்மை காக்கும்.

கையளவு துணி இருந்தாலும், கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாய் பொது இடத்தில் உட்கார முடிகிறது என்றால் உழைப்பு.  குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக் கூடிய துணிவு கடவுளுக்குப் பின் உழவனுக்கு மட்டுமே இருக்கிறது! 



படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட…. 

தமிழர்கள் அதிகம் குளிர் தாங்குவதில்லை.
முன் மற்றும் பின்  பனிக்காலங்களில்,
கார்த்திகை -மார்கழியில் குளிரில் முடங்கிக்கிடந்தவர்கள் தையில் வந்த வெயிலை" பொங்கலோ பொங்கல் " என ஆரவாரமாக  வரவேற்கிறார்கள்.  சூரிய வெயில் என்பது ஒவ்வொரு தனிமனித வாழ்வியலோடு பின்னிப்  பிணைந்தது..  கதிரவனோடு சேர்த்து உழவுக்கு சுவாசமான விலங்குகளையும் ஒரு சேர மதிக்கும்  தை பொங்கல் பண்டிகை.




திருவளர்வாழ்க்கை,கீர்த்தி ,தீரம்,நல்லறிவு,    வீரம்,   மருவுபல் கலையின் சோதி,வல்லமை,யென்ப வெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுது மெங்கள்பெருமைதா னிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு.
 
கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம்,வறுமைத்துன்பம்அவலமா மனைத்தைக்
காட்டில் அவலமாம் புலைமையச்சம்,
இவையெலாம்  அறிவிலாமை என்பதோர்இருளிற் பேயாம்,
நவமுறு ஞானபாநு நண்ணுக:தொலைக பேய்கள்.
- பாரதி

தை மாச மதிய வெயிலில் மணல் தெரிய தெளிந்தோடும் காவிரி….
தை நினைவுகள்…..
- குபராவின் எழுத்து….
*****
தை பிறப்பு உண்மையிலேயே உயிரின் பிறப்பு. அதனால்தான் அது பிறக்கும்  நாள் நமக்கு அவ்வளவு அழகான நாள். தெருக்களெல்லாம் கோலம், திண்ணைகளெல்லாம் சுண்ணாம்பு, செம்மண், சுவர்களெல்லாம் வெள்ளை, வீடுகள் மேலெல்லாம் வெள்ளை வெய்யில், வயல்களிலெல்லாம் கதிர் – கிராமத்தில்தான் தை பிறந்த வனப்பு தெருத் தெருவாகத் தோன்றும்.

கதிர் அறுவடை,  கரும்பு அறுவடை, மஞ்சள் இஞ்சி பூரண கர்ப்பத்திலிருந்து பொன்மேனியுடன் வெளிப்படும் காலம். நீரும் நிலமும் கலந்து கலவி புரிந்து பெரும் பேறு - இவையெல்லாம். தை மாதம் இயற்கையின் பேறுகாலம். குடியானவனும் மாடும் மருத்துவம் செய்கிறவர்கள்.

குடியானவனும் மாடும் இல்லாவிட்டால் என்ன இருக்கிறது? அவர்கள் தை பிறப்பில் தலை நிமிர்கிறார்கள். அவர்கள் பட்டபாடு கதிர்வாங்கிப் பழுத்து தலை சாய்ந்து நிற்கிறது.

பொங்கல் அவர்களுக்குத்தான். பொன்  போலப்  புதுவெயிலில் மின்னும் கதிர்கள் அவர்களுடைய உள்ளம் பொங்கி நிற்கும் நிலையில் தென்படுகின்றன. அவர்கள் வயிற்றில் பால் - புதுப்பானையின்  பாலுடன்! ஆறு மாதங்கள் ஆடியோடி உழைத்த  உழைப்பிற்கு தையில் பலன் - தை பிறக்கும் நாள் தூயநாள்  தான்.

அந்தத் திருநாளில் மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் என்பது உண்மை. செந்நெல்லும் கரும்பும் உள்ளே வந்து தித்தித்திப்பைத் தருகின்றன. உழைப்புக்குப் பிறகு இன்பம் - உழைப்பின்றி உயிர் வாழ முடியாது என்ற தேர்ச்சி உணவாகச் சமைந்து விடுகிறது.

பட்டணவாசிகள் தை பிறப்பை கொண்டாடுவதில் பொருளில்லை. குடியானவன்தான் அதைக் கொண்டாட வேண்டியவன். அவனுக்குத்தான் அந்த உரிமையுண்டு; அவன் போடும் சோறு நாம் உண்பது; அவன் கை  உழைப்பைக்  நாம் உண்டு களிக்கிறோம்; அவன் பெறுவது வாரம் ; நாம் பெறுவது மேல் வாரம். நிலம்  நம்முடையது !

நிலம் எப்படி நம்முடையதாயிற்று ? அவன் ஏன்  அந்த நிலத்தை இழந்தான்! அது வேறு கதை.

நிலத்தை இழந்தான் குடியானவன்; நிலம் அவனை இழக்க முடியாது. குடியானவனும் மாடும் மிதித்த பூமிதான் விளையும். அவன் கால் பட்ட இடம் கதிர்; கைப்பட்ட இடம் கரும்பு; ஏர் பிடித்த இடம் களஞ்சியம்; வாய்க்கால் பிடித்த இடம் வளப்பம்; குடியான மகளிர் குளித்த இடம் நாற்றங்கால்; நிமிர்ந்த இடம் நெஞ்சுக்கதிர்; நடக்குமிடம் நவ தானியம்; இந்த வளப்பத்தில் வாழ்ந்தும் வாடுகிறார்கள்.

ஆனால் அதுதான் இயற்கை விதியோ? தேன் சேகரித்த தேனீக்களா அதை அனுபவிக்கின்றன? பொருள் சேகரிப்பவனா பொருளை அனுபவிக்கிறான்? ஈட்டுகிறவன் அனுபவிக்க மாட்டான் என்பது சாபம் போலிருக்கிறது.

நினைவு எப்படிப் போகிறது! பொங்கலிலிருந்து 
பொருளாதாரத்திற்கு வந்துவிட்டேன்!

பொங்கலன்று புதுநினைவு வர வேண்டும்; புது நினைவு புதுவாழ்வு கொடுக்க வேண்டும். தொண்டைக் கதிர் கிளம்பி வெளியே வருவது போல் நமது நல்லெண்ணம் வெளியாகட்டும்! பழுத்தப்பயிர் தலை சாய்வது போல் நமது உள்ளம், கனிந்து படியட்டும்.

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...