#*கேரளாவின் டிஜிட்டல் ரீ சர்வே:
பாதிப்பை உணராத தமிழகம்*!
என்ற எனது கட்டுரை இன்றைய (4-1-2023)
தினமணியில்……
—————————————
கண்ணகி கோவில் சிக்கலைக் குறித்து தேனியிலிருந்து பேசிய நண்பர்கள் கண்ணகி கோயில் பிரச்னை மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு பிரச்னை, தற்போது கேரள அரசு அத்துமீறி தமிழக பகுதிகளில் நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வே குறித்து வேதனையோடு குறிப்பிட்டனர். தேனி பகுதியில் போராட்டங்களும் நடந்துள்ளன. தமிழக அரசு இதில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இதுவரை சரியாக எடுக்கவில்லை என்றும் கூறினர்.
ஒருமாதத்துக்கு முன்பே எனது சமூக வலைதளங்களிலும் என்னுடைய காணொலி சேனலிலும் இது குறித்து கருத்துத் தெரிவித்து இருந்தேன். ஆங்கில இந்து, தமிழ் இந்து போன்ற நாளேடுகளில் மட்டும் இல்லை, ஜீனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய வார ஏடுகளும் டிஜிட்டல் குறித்தான எனது கருத்தை வெளியிட்டிருந்தன.
தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு இந்த பிரச்னை சரியாகப் பிடிபடவில்லை என்று தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து அவர் பேசும்போது, கேரள அரசு அளந்து முடிந்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம் என்கிறார். கேரள அரசு அனுப்பிய தாக்கீது கூட, எங்களைப் போன்றவர்கள்இது குறித்து கருத்துகள் தெரிவித்தபின்தான் அவருக்கே தெரிய வருகிறது. என்ன சொல்ல?
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் எந்தவித டிஜிட்டல் ரீசர்வே பணிகளும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தரப்பில் முதலில் கூறப்பட்டது. இது குறித்து வருவாய்த் துறை செயலர் விளக்கச் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை வட்டத்தினைச் சேர்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை,சாத்தான்பாறைகிராமங்களில் டிஜிட்டல் நில அளவைப் பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படஉள்ளதாகவும், கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப் பெற்று உள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளைச் சரி பார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனிமாவட்டம் நிலஅளவைப் பதிவேடுகள் துறை
உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டு ஆலோசனைக் கூட்டம்நடத்துவதற்கான தேதியினை முடிவு செய்து அந்த தகவலினை கேரளா மாநிலம் தொடு புழாமறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு வரைவு மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை தமிழக – கேரள இரு மாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நில அளவைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும்,தமிழக வனச் சரகர்கள் இருமாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலரின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமாநில வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளின் மூலம் ரீ சர்வே செய்வதுதான் முறையானது.
கேரள அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வேயினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் பறி போகும் அபாயம் உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கேரள அரசின் நில அளவைப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில், கேரள அரசு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட14கேரள எல்லையோர மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களில் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் இடங்களை அறிவித்திருக்கிறது. இந்த சர்வே பணியில் தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்ட 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள், 4 வருடங்களில் தொடர்ச்சியாகப் பணி செய்து டிஜிட்டல் ரீ சர்வே பணியை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
கேரள மாநில அரசு எடுக்கும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளாவின் 15 தாலுகாக்களில் தமிழகத்திற்குச் சொந்தமான நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், தமிழகத்தின்எல்லையோர மாவட்டங்களில் அதிக அளவில் தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் கூறி ‘பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் ’ தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், திருவிதாங்கூர்,கொச்சி, மலபார் மாகாணங்களுக்கும், தமிழகத்திற்கும் எந்த முரணும் இல்லாததால், 1956 -இல் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக - கேரள எல்லைகள் முழுமையாகப் பிரிக்கப்படவில்லை.
பசல் அலி தலைமையிலான கமிஷன் (1956) மொழிவாரியாக மாநில எல்லைகளைப் பிரிக்கச் சொன்னது. ஆனால் முறையாக, கமிட்டிகொடுத்த வரையறையின் அடிப்படையில்‘தமிழக கேரளா எல்லைகள்’பிரிக்கப்படவில்லை. கடந்த 1956 - இல் தெற்கே நெடுமங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு பகுதிகள் என பல பகுதிகளை கேரளாவிடம் நாம் இழந்திருக்கிறோம். அதைப் போலவே கர்நாடகத்தில் கொள்ளேகால், குடகுபகுதிகள், கோலார் போன்ற தமிழக எல்லையோர பகுதிகளைத் தமிழகம் இழந்தது. ஆந்திரத்தில் நெல்லூர் மாவட்டத்தில் சில பகுதிகள், திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளை இழந்தோம்.
மத்திய அரசு பண்டித நேரு அமைத்த பசல் அலி குழுவில் தமிழகப் பிரதிநிதிகள் யாரும் இடம் பெறவில்லை. கே.எம்.பணிக்கர் கேரளாவைச் சேர்ந்தவர். குன்ஸ்ரூ வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்ல, பிரதமர் நேருவின் அலுவலகத்தில் அன்றைக்கு கிருஷ்ணமேனன், மத்தாய் மற்றும் எம்.ஜி.மேனன் போன்றோருடைய லாபி கேரளாவுக்கு சாதகமாக, அழுத்தமாக இருந்தது. இதனால் ஏற்கெனவே கேரளாவிடம் தமிழகம் தனக்கு உரிமையான பல பகுதிகளை 1956 - இல் இழந்துள்ளது.
தமிழக - கேரள எல்லையின் தூரம் 822 கிலோ மீட்டர். அதில் பாதியைக் கூட இதுவரை இரு மாநில அரசுகளும் அளக்கவில்லை. இப்படி எல்லைகள் அளக்கப்பட்டு சரியான வரையறை செய்யப்படாதநிலையில், தமிழக – கேரள அரசுகளின் கூட்டுமுயற்சியாக இல்லாமல், கேரள அரசு மட்டும் இந்த டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் முயற்சியில் இறங்கினால், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலுள்ள மிகப் பெரிய நிலப்பரப்புகளை தமிழகம் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
2017 - இல் உத்தமபாளையம் கோட்டாட்சியர் மற்றும் தேவிகுளம் சப் கலெக்டர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு சர்வேயில், கம்பம் மெட்டில் உள்ள கேரள போலீஸ் சோதனைச்சாவடி தமிழக எல்லைக்குள் வருகிறது என இரு மாநில அதிகாரிகளும் இணைந்து அளவீடு செய்தனர். ஆனால், இன்று வரைக்கும் கேரளா சோதனைச்சாவடியின் இடம் கேரள எல்லைக்குள் மாற்றப்படவில்லை. இப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட கேரள அரசின் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால், சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் வரையுள்ள, தமிழகப் பகுதிகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மூணாறில் தமிழக அரசின் பேருந்துகள் நிறுத்துவதற்கு கொடுக்கப்பட்ட 5 சென்ட் நிலத்தையும் தற்போது கோளா அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கேரளாவிற்கு சொந்தமான நிலம் தமிழக அரசால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை கேரளாவின் சொத்து. குற்றாலத்தில் 64 ஏக்கர் நிலம் கேரளா அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. செங்கோட்டை அருகே 24 ஏக்கர் நிலம் கேரள வனத்துறையினரின் வசம் உள்ளது. தமிழக அரசுக்கு கேரளாவில் ஒரு துண்டு நிலம் கூட இல்லை.
தேவிகுளம் தாலுகாவில் உள்ள டாடா வசம் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்டங்களை மறு அளவீடு செய்ய வேண்டும் என்ற கடந்த 2004 - ஆம் ஆண்டு கேரள தமிழர் கூட்டமைப்பு ஒரு கோரிக்கையை முன் வைத்தது. கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதமாக எழுந்த நிலையில், கடந்த 2006 - ஆம் ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில், அன்றைக்கு கேரள மாநில முதல்வராக இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன் சட்ட மன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி டாட்டா வசமுள்ள நிலங்களைசர்வே செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடைய மேற்பார்வையில் ஏஜென்சி நியமித்து ஓராண்டுக்குள் மறு அளவீடு செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்புநடைமுறைப்படுத்தப்படவில்லை.
1956- இல் நடத்தப்பட்ட மொழிவாரி மாநில பிரிவினையின் போது தமிழக, கேரளா எல்லையோர கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை நாணல் காடுகளாகவும், அட்டைக் காடுகளாகவும் வகைப்படுத்தி, அதில் மலையாளிகளை வலுக் கட்டாயமாக குடியேற்றினர். அப்படி குடியேற்றப்பட்டவர்கள், தமிழக -கேரள எல்லையில் உள்ள, தமிழகத்திற்கு சொந்தமான வனநிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றி, கேரளாவில்அந்த நிலங்களுக்கான பட்டாவை முறையாகப் பெற்று தங்களுக்குரியதாக மாற்றிக் கொண்டுவிட்டனர்.
இப்படிப்பட்ட பல சிக்கல்கள் இருக்கும்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களை மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருக்கிறார். இது உண்மையிலேயே கண்டனத்திற்கு உரியது.
1905-இல் மீன் குடியேற்றம் செய்யப்பட்ட பதிவேடுகள். 1966 - இல் நடத்தப்பட்ட மறுஅளவீட்டில் எடுக்கப்பட்ட குறிப்புகள் எனஎதைப் பற்றியும் கவலைப்படாமல், டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில அரசு அறிவித்திருக்கிறது.
கேரள அரசு இது தொடர்பாக ஒரு விரிவான தீர்வு சட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அதன் வரைவு வரவிருக்கும். சட்டமன்றத் தொடருக்குப் பின்னர், பொது விவாதத்திற்கு வைக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருக்கிறார்.
இப்போது புதிய மறு அளவீட்டின் விவரங்களை Real Time Kinematic இயந்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக இயங்கும் CORS குறிப்பு நிலையங்களின் நெட்வொர்க் போன்ற சேவைகளின் மூலம் உடனடியாக இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்ல, தாசில்தாருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நில மறு அளவீடு தொடர்பாக கொடுக்கப்பட்ட உரிமைகளை கேரள மாநில அரசு ரத்து செய்திருக்கிறது.
கேரள அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக, பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர், கேரள அரசு நடத்தும் சர்வேயால் தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் குறித்து தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை சந்தித்து கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமின்றி, இது தொடர்பான தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் மனுவாக அளித்தனர்.
கேரள அரசு நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வே முறை குறித்து தொடர்ந்து
அச்சம் நிலவி வந்த நிலையில், தேனி மாவட்டம் தேவாரம் கிராமத்தை உள்ளடக்கிய ஆனைக்கல்லுக்கும் பாப்பம்பாறைக்கும் இடைப்பட்ட பகுதி இடம் கேரள அரசுக்கு சொந்தமானது என்று போர்டு வைக்கப்பட்டது. அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,டிஜிட்டல் ரீ சர்வே தொடங்கி பல நாட்கள் ஆகியும் தமிழக அரசு அதன் மீது எந்த கவனமும் செலுத்தவில்லை என்ற அதிருப்தியை தமிழக மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. “தமிழக அரசின் மீது நாங்கள் வைத்துள்ள. நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
டிஜிட்டல் சர்வே தொடர்பாக, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எங்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை” என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
“இடுக்கி மாவட்டத்தில் டிஜிட்டல் ரீ சர்வேக்காக 18 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அரசுக்கு முறைப்படி தெரிவித்தோம். அதில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் பாறத்தோடு, சாந்தம்பாறை, சதுரங்க பாறைஆகிய மூன்றும் பட்டியலில் இருக்கிறது என்பதையும் அறிவித்தோம். தேவாரம் கிராமத்தை ஒட்டி இருக்கும் சாக்கலூத்து மெட்டு டிஜிட்டல் சர்வே அளவீட்டிற்குள் வருகிறது என்பது தெரிந்தும், தமிழக எல்லையில் உள்ள வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
ஜமீன் ஒழிப்பிற்கு பிறகு, ஜமீன்தார்கள் கைவசம் இருந்த நிலங்கள் அத்தனையும் வனத்துறைக்கு ஒரு பகுதியும், வருவாய்த்துறைக்கு ஒரு பகுதியும் பிரித்துக்
கொடுக்கப்பட்டது.ஜமீன்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை இரண்டு துறைகளுமேமுறையாகப் பராமரிக்கவில்லை” என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், தமிழகத்தின் வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறைகள் முறையாக பதிவேடுகளைப் பராமரிக்காததால், ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களை கேரளா Double Entry (இரட்டை பதிவு) மூலம் கையகப்படுத்தி வைத்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஜமீன் பட்டா அடிப்படையில்தான்.இன்றைக்கும் ஒரு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், சுதந்திரத்திற்கு பிந்தைய யூடிஆர் எனப்படும் ‘அ’ பதிவேட்டின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. ஜமீன் பட்டா அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதை தமிழக வருவாய்த்துறை செயலாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தன்னுடைய மாநிலத்தை கேரளா அரசு தன்னிச்சையாக சர்வே செய்வதற்கு அது ஒன்றும் தனித்தீவு அல்ல. தமிழகம் மற்றும் கர்நாடகாவோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மாநிலம்.
காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் கர்நாடகாவோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரள மாவட்டங்கள். மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் எல்லையை கேரளா டிஜிட்டல் ரீ சர்வே செய்யும்போது, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல், எல்லையை அளக்க முடியாது. அதே நடைமுறையை ஏன் தமிழகத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களிலும், டிஜிட்டல் ரீசர்வேகுழு கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழகத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள 16 தாலுகாக்களான, கட்டக்கடை, நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, புனலூர், கோணி, பீர்மேடு, உடுமஞ்சோலை, தேவிகுளம், சித்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு, நிலம்பூர், வைத்ரி, மானந்தவாடி, சுல்தான், பத்தேரிஆகியவற்றில் கேரளா நடத்தவிருக்கும் ரீ சர்வே பணிகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட 15 தாலுகாக்களில் எல்லையை அளவீடு செய்வதற்கு முன் இரண்டு மாநில கூட்டு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே செய்து முடித்த பிறகு அதைப் பற்றி இருதரப்பினரும் பேசுவோம் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கூறியிருப்பது, பொறுப்பான, அக்கறையான பேச்சாகஇல்லை.
ஏற்கெனவே கேரளாவிடம் பலவற்றை நாம் இழந்திருக்கிறோம். தெற்கே குமரி மாவட்டம் நெய்யாறு அணையில் தொடங்கி செண்பக வல்லி, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு,கொங்கு மண்டலத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம் திட்டம் வரை பத்துக்கும் மேலான நதிநீர்ச் சிக்கல்களில் கேரளா பிடிவாதமாக உள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய நீர்வரத்தும் இதனால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. நதிநீர்ச் சிக்கல்கள், கண்ணகிக் கோவில் பிரச்னை, தமிழக எல்லையோரங்களில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுதல் என பல தொடர் சிக்கல்களை கேரளா உருவாக்கி வருகிறது.
கடந்த 2002 - இல் எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் தென்காசி அருகே உள்ளே தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ள செங்கோட்டை அடவி நயினார் அணையை இடிக்க கடப்பாரை மண்வெட்டியோடு வந்தது எல்லாம் உண்டு. அதே காலகட்டத்தில் குமரிமாவட்டம் களியாக்கவிளை எல்லையோரப் பகுதிகளில் உள்ள தமிழக கிராமங்களிலேயே கேரள அரசு தனது ரேஷன் கார்டுகளை வழங்கியதும் உண்டு. கடந்த 7 - 8 ஆண்டுகளுக்கு முன்னால் அட்டப்பாடி பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேற வேண்டும்என்று சிக்கலும் எழுந்தது.
அண்டை மாநிலத்துக்கு கேரளா ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றாலும் கேரள சட்டமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் கொடுக்க வேண்டும் என்று ஒரு வினோதச் சட்டத்தையும் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். எந்தவொரு மாநிலமும் இதுபோன்ற சட்டத்தை இதுவரைஇயற்றியதில்லை. இப்படியான சூழலில் திரும்பவும் தமிழகப் பகுதிகளில் விவசாய நிலங்களை அபகரிக்கக் கூடிய டிஜிட்டல் ரீ சர்வே செய்ய கேரள அரசு முனைந்துள்ளது. இது கண்டனத்துக்கு உரியதாகும்.
அரிசி, பருப்பு, காய்கறிகள், சிமெண்ட், தமிழ்நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிற மணல் முதலிய அத்தனையையும் பெற்றுக் கொண்டு, இவ்வளவு நெருக்கடிகளைத் தமிழகத்துக்குக் கேரளா ஏற்படுத்துகிறது.கேரளாவின் இந்தபிடிவாதப் போக்கு நல்லதல்ல.
இந்திய துணைக் கண்டத்தில் கூட்டாட்சி என்ற சமஷ்டி முறைக்கு ஏற்றவாறு மாநில அரசுகள் நடந்து கொண்டால்தான், ‘பன்மையில் ஒருமை ’ ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது உண்மையும் ஆகும்; உறுதியும் ஆகும்.
தமிழக முதல்வர் இதில் நேரடியாக கவனத்தைச் செலுத்தி கேரளாவின் மறு நில அளவையால் தமிழ்நாடு பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
கட்டுரையாளர்:அரசியலார்
#கேரளாவின்_டிஜிட்டல்_ரீ_சர்வே
#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#தமிழக அரசியல்
#ksrpost
4-1-2023
No comments:
Post a Comment