Friday, January 27, 2023

உண்மையை உரத்துச் சொல்லவே இந்த ‘ஒரு சொல் ’ ! ***** திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில், யார் யார் எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதை ‘ஒரு சொல் ’ என்ற தலைப்பில் பதிவிட இருக்கிறேன்.

உண்மையை உரத்துச் சொல்லவே இந்த ‘ஒரு சொல் ’ !
*****
திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில், யார் யார் எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதை ‘ஒரு சொல் ’ என்ற தலைப்பில் பதிவிட இருக்கிறேன். 
 
கவர்னர் சென்னா ரெட்டியைப் பற்றி ஜெயலலிதா  குறிப்பிட்டதைப் போல, ஒரு பெண்மணி குமுதம் ஏட்டுக்கு அளித்த ஒரு பேட்டியில் கலைஞரைப் பற்றி  தப்பும் தவறுமாகச் சொன்னார். திமுக  ஆட்சியில்  இப்போது அவருக்கு விருது வழங்கப்படுகிறது. 

திமுக ஆட்சியில் இருந்தால் நான் திமுகவில் இருந்தது இல்லை இருக்கவும் முடியாது. எதிர் கட்சியாக திமுக இருந்தால் திமுகவில் நான் இருக்க முடியும்.எனது 52 ஆண்டுகளில் அரசியியல்  பயணத்தில் 38 ஆண்டுகள் திமுகவில்  நான் பார்த்தது.

முள்ளிவாய்க்கால் பிரச்னை, ஜெயலலிதா வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றம் செய்வதற்காக செய்த அடிப்படை வேலைகள்,  ஜெயலலிதா ஆட்சியில்  நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அது தொடர்பான  சிடியை சன் டிவிக்கு நான்  கொண்டு சென்றது, கனிமொழி பிரச்னை, ஜெயலலிதா ஆட்சியின்போது இன்றைய முதல்வர் வேளச்சேரி வீட்டில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது நான் ஆற்றிய பணிகள், மறுநாள் இன்றைய முதல்வரின் துணைவியாரை மனித உரிமை ஆணையத்துக்கு அழைத்துச் சென்றது, அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை என  இப்படியான பல விடயங்களில் திமுகவுக்காக உழைத்த நான்,  தற்போது இடைநீக்கம் என்ற திமுகவில் அரிய விருதை பெற்றுள்ளேன். திமுகவுக்கு மிக்க நன்றி.

ஆனால், நேற்று வரை திமுகவைத் திட்டியவர்கள், எதிர்வினையில் இருந்தவர்கள்,திமுகவிற்காக  எதுவும் செய்யாதவர்களுக்கு எல்லாம் இன்று பெரிய பதவிகள், அந்தஸ்துகள்.  என்னதான் நடக்கிறது திமுகவில்? 
 
உண்மையைப் பேசுவது தவறில்லை. உண்மையை தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டும். நான் பேசாவிட்டால்  உண்மையில் நிகழ்ந்தவை எதுவும் வெளியே தெரிய வராது. வரலாற்றின் பக்கங்களிலும் பதிவு பெறாது. உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தினமும்  ஒரு  சிறிய பதிவை ‘ஒரு சொல் ’ என்ற தலைப்பில்  பதிவிட இருக்கிறேன். 
 
இது யாரையும் குறை சொல்வதற்கோ, பழி பாவத்திற்கோ அல்ல.  வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டால், உண்மை வெளியே தெரியாமல் போய்விடும்  என்பதற்காகத்தான் பேச வேண்டியிருக்கிறது. #தகுதியே_தடை என்ற நிலையில் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் என்னைப் போல களப்பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டவர்கள் எல்லாம் எந்தவித காரணமும் இன்றி ஒதுக்கப்படுவதும், எதுவுமே செய்யாமல் - சில நேரங்களில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள்  கூட அங்கீகரிக்கப்படுவதும் எந்தவிதத்தில் நியாயம்?  உண்மையை உரத்துச் சொல்லவே இந்த ‘ஒரு சொல் ’.
********

என்னை அழித்தாலும்
என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது

அழிப்பது இயல்பு
தோன்றுவது இயற்கை....

- #ஆத்மாநாம்
—————-
(உ-ம்)முள்ளிவாய்க்கால் கொடுமையின் பின் திமுகவுக்கு கலைஞர் காலத்தில் என் பணி, உழைப்பை பெற்றபோது இப்படியான பேச்சுகள் இருந்தன. அன்று திமுகவை சாடியவர்களுக்கு  எல்லாம் இன்று பதவிகள்.எனக்கு இடை நீக்கம் என்ற திமுக விருது. யார் இந்த வில்சன் இளங்கோ அப்துல்லா இப்படி பலர். மிக்க நன்றி முதல்வர் ஸ்டாலின் அவர்களே)

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
27-1-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...