இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதற்கு இந்தியா ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறது. பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் அங்கு மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 252 கி.மீ. தூர ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்த ரயில் பாதை 81 மில்லியன் டாலர் (சுமார் ரூ.650 கோடி) மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் பாதை இது.
இது மட்டுமல்ல, இலங்கையில் பல்வேறு ரயில் பாதை மறுசீரமைப்பு பணிகளை இர்கான் இன்டர்நேஷனல் என்ற இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக மடு ரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. தூர பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
இதற்காக நடந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “இலங்கை ரெயில்வே துறையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்டங்களை இந்தியா மேற்கொண்டு உள்ளது. மேலும் சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டிலும், பரிசீலனையிலும் உள்ளன ” என்று தெரிவித்தார். இந்த தொடக்க விழாவில் பேசிய இலங்கை அமைச்சர் பந்துல குணவர்தனா இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 1905-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரெயில்பாதை ஒரு நூற்றாண்டுக்கு மேல் மேம்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், “மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான இந்த ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் ” என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment