Monday, February 1, 2016

வேதனையை அறுவடை செய்யும் விவசாயி

இன்றைய (01-02-2016) தினமணி நாளிதழில் கடந்த காலத்தில் நடந்த விவசாயிகள் மற்றும் மறைந்த விவசாயிகளின் ஒப்பற்றத் தலைவர் நாராயணசாமி நாயுடு பற்றியும் “வேதனையை அறுவடை செய்யும் விவசாயி!” என்ற தலைப்பில். தலையங்க பக்கத்தில் வந்த எனது பத்தி.

வேதனையை அறுவடை செய்யும் விவசாயி


- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற வட மாநிலங்களில் துயரமான விவசாயிகள் தற்கொலைகள் கடந்த காலங்களில் நடந்தன.  இன்றைக்கு தமிழகத்தில் 40 விவசாயிகள் வரை கடன் தொல்லையாலும், வாழ முடியாத என்ற விரக்திக்கு தள்ளப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக 40 விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர்.  விவசாயிகள் தற்கொலை தமிழகத்தையும் எட்டி பார்க்கின்ற கொடுமையான நிலை.  விவசாய போராட்டத்திலும், அரசு காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டால் இதுவரை 70 விவசாயிகள் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.  விவசாயிகள் போராடியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளான விவசாய விளைபொருட்களுக்கு விலை இல்லை. விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. விவசாயத்துக்கு கடன் வாங்கி சாகுபடி செய்தாலும் வறட்சியால் பயிர்கள் வாடிவிட்டன.  வெள்ளந்தி அப்பாவி விவசாயிகளை காப்பாற்ற வழி இல்லாத நிலை. விவசாயிகள் போராடி பார்த்தனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. விவசாயி உரிமை கேட்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்தியாவில் முதல் முதலாக நெல்லை மாவட்ட கடம்பூர் விவசாயி துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது வரலாறு.  காந்தியடிகளுக்கு விடுதலை போராட்டத்திற்கு அடிப்படையாக இருந்தவர்கள் விவசாயிகள் என்பதை மறுக்க முடியாது.  அவரி போராட்டம், கேரளாவில் மாப்புளா விவசாயிகள் போராட்டம் விடுதலைப் போராட்டங்களின் அங்கமாகவே திகழ்ந்தது. 

தமிழகத்தில் விவசாயிகள் 1950லிருந்து போராடினாலும், 1967ல் முதல் முதலாக கோவை ஜில்லா விவசாய சங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. சுந்தரம் அவர்கள் தலைமையில் துவக்கப்பட்து.  வி.கே. பழனிச்சாமி கவுண்டர் தலைவராகவும், என்.எஸ்.எஸ். மன்றாடியார் இணைத் தலைவராகவும், பி.ராமசாமி நாயுடு பொருளாளராகவும், சி.நாராயணசாமி நாயுடு செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த அமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கரூர் முத்துசாமி கவுண்டர், நீலகிரி நஞ்சா கவுடா, சாத்தூர் ராமமூர்த்தி, குலாம் மொய்தீன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த கோவை ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர், தென்காசி ஏ.ஆர். சுப்பையா முதலியார், சாத்தூர் சங்கிலி மற்றும் மதுராந்தகம் முத்துமல்லா ரெட்டியார், டாக்டர் சிவசாமி, டாக்டர் கொண்டல்சாமி, வி.கே. ராமசாமி, என்.எஸ். பழனிச்சாமி, கே. வரதராஜன், பால் பாண்டியன் போன்றோர் ஆரம்ப கட்டத்தில் விவசாய சங்கத்தை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்று விவசாயிகள் மத்தியில் எழுச்சியை உருவாக்கினர்.

குறிப்பாக சி. நாராயணசாமி நாயுடுவின் பங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாகும். அவருடைய தலைமையில் விவசாயப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.  கோவை செங்காலிப் பாளையத்தில் 6.2.1925ல் விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடு, விவசாயிகளின் உரிமை வேட்கைக்காக, இளைஞராக இருக்கும்பொழுதே போராட துணிந்தவர்.  1950களின் தொடக்கத்தில் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவது 16 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது.  பம்பு செட்களின் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. 1957ல் இதை எதிர்த்து நாராயணசாமி நாயுடு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி 16 மணி நேரம் விவசாயத்திற்கு மின்சாரத்தை பெற்றுத் தந்தார்.  அதன் பின் மின் கட்டண உயர்வை எதிர்த்தும் போராடினார்.  கடன் வசூல், ஜப்தி நடவடிக்கையை எதிர்த்தும் ஐயா நாராயணசாமி பல போராட்டங்களை நடத்தியதுண்டு. இந்தப் போராட்டங்கள் விளைவாக தமிழகமே விவசாயிகளை பார்த்தது. கோவை, கோவில்பட்டி போன்ற இடங்களில் கட்டைவண்டி போராட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.  விவசாயிகள் போராடியதால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு பாலும், காய்கறிகளும் செல்லாமல் நகரவாசிகள் ஒரு வார காலம் அப்போது சிரமப்பட்டதெல்லாம் செய்திகள். இந்தப் போராட்டங்கள் குறித்து, நியூ யார்க் டைம்ஸ் இந்த மாட்டு வண்டிகளை பார்த்து "இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்" என்று அப்பொழுது எழுதியது. 

அந்த காலகட்டத்தில் நாராயணசாமி நாயுடுவின் போராட்டத்தில் அடியேனும், விவசாய குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்திய நினைவுகளும் மனதில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விவசாயிகளுடைய கடன் தொல்லைக்கு வருவாய் துறை அதிகாரிகள், விவசாயிகளின் வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களையும், கதவுகளையும் 1975 அவசரநிலை காலத்தில் பிடுங்கி சென்றதை எதிர்த்து வழக்குத் தொடுத்து ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்தியும், கடன் நிவாரணத்தையும் விவசாயிகளுக்கு அடியேன் பெற்றுத் தந்தது மனதிற்கு ஓர் ஆறுதலான செய்தி.  நாராயணசாமி நாயுடு சென்னைக்கு வந்தாலோ, கோவில்பட்டி பக்கம் வந்தாலோ அவருடன் இருப்பது வாடிக்கை. இன்றைக்கும் கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு செல்லும்போது 1984 தேர்தலின்போது, 21.12.1984ல் அதே பயணியர் விடுதியில் உள்ள வடக்கு அறையில் ஐயா நாராயணசாமி மாரடைப்பால் காலமானார். அங்கு செல்லும்போதெல்லாம் அவருடைய நினைவுகள் வந்துவிடும்.  கோவில்பட்டி நகரில் ஐயா நாராயணசாமி அவர்களுக்கு சிலை எடுக்கும் பணிகளையும் கவனித்து வருகின்றேன்.

ஐயா அவர்கள் ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பால் இந்த விவசாய அமைப்பை எடுத்து செல்ல விரும்பினார். ஒரு கட்டத்தில் மற்றவர்களுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் 1982ல் உழவர் உழைப்பாளர் கட்சியைத் துவக்கினார்.  அதே ஆண்டு செப்டம்ரில் பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும், 1984 செப்டம்பர் தேர்தலிலும் போட்டியிட்டார்.  இந்த கட்சியைவிட தமிழக விவசாயிகள் சங்கம்தான் எனக்கு நிறைவாக உள்ளது என்று அவர் சொன்னதை கேட்டுள்ளேன். தமிழக விவசாயிகள் சங்கமும், அதன் போராட்ட விவரங்கள் குறித்தும் நான் எழுதிய நூல் விரைவில் வெளிவர உள்ளது. 

விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுடைய தியாகத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். கோவை பெருமாநல்லூர், மல்லேகவுண்டபாளையம், அய்யம்பாளையம், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையம், சாத்தூர் அருகே உள்ள வெத்தலையூரணி, விருதுநகர் அருகே உள்ள மீசலூர், பாலவநத்தம், வேடசந்தூர், கோவில்பட்டி அருகே உள்ள அப்பணேரி, குருஞ்சாக்குளம், மதுரை அருகே உள்ள நொச்சோடைப்பட்டி, வேலூர் அருகே உள்ள ஒருகத்தூர், விருதுநகர் அருகே உள்ள வாகைகுளம், உடுமலைப்பேட்டை, திருத்தணி அருகே உள்ள கண்டிகை, விழுப்புரம் அருகே உள்ள வீரப்பெருமாள்புரம் போன்ற இடங்களில் போராடிய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். கோவில்பட்டி நகரில் மட்டும் 1970, 1991 ஆகிய வருடங்களில் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடந்தது.  மொத்தம் இதுவரை துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 70 வரை தியாகிகளின் பட்டியல் இடம்பெறுகிறது.

நாட்டின் முதுகெலும்பு விவசாயி. நாட்டின் தொழில் விவசாயம் என்றாலும், விவசாயிகளினுடைய பாதிப்பையும், பாடுகளையும், ரணங்களையும் தீர்க்கப்படவில்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டாகும்.  விவசாய முதல்வர் ஓமந்தூரார், விவசாயிகளின் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்தார். அவர் நீண்டகாலம் ஆட்சியில் இருக்க முடியவில்லை.  ஜெய் கிஷான், ஜெய் ஜவான் என்று சொன்ன சாஸ்திரியும், கிஷான் தலைவர் சௌத்ரி சரண்சிங்கும் பிரதமராக நீண்டகாலம் நீடிக்கவும் முடியவில்லை.  விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் இலவச மின்சாரமும், 7000 கோடி கூட்டுறவு கடன்கள் தள்ளுபடியும், உழவர் சந்தை திட்டமும் நடைமுறைக்கு வந்தது.

பசுமை புரட்சி என்று விவசாயத்தில் 1960 காலத்தில் புகுத்தப்பட்ட திட்டம் விவசாயத்தை பாழ்படுத்துகின்ற திட்டமாகத்தான் பிற்காலத்தில் தெரியவந்தது.  மேலைநாட்டு உதவிகளை கொண்டு செயலுக்குவந்த இந்த நடவடிக்கை நம்முடைய மரபு ரீதியான விவசாயத்தை பாழடித்து விவசாய நிலங்களின் வீரியமும், விளைபொருட்களில் நச்சுப்பொருட்களும் சேர்ந்து நம்முடைய விவசாயத்தை நாசப்படுத்தியது. இன்றைக்கு வழங்கப்படுகின்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளும் மிகவும் ஆபத்தானவை.  இயற்கை விவசாயம் முற்றிலும் மாற்றப்பட்டு, தவறான அணுகுமுறையை நோக்கி நம்முடைய விவசாயத்தை அரசுகள் எடுத்துச்சென்றது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தற்போது தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது வேதனையையும் கவலையையும் தருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு விலை இல்லை. நெல்லுக்கு விலை இல்லை.  நோயினால் தென்னை விவசாயம் பாதிக்கப்படுகிறது.  இப்படி ஒவ்வொரு விவசாய சாகுபடி பயிருக்கும் சிக்கலும், இடையூறுகளும் உள்ளன.  விவசாய பணிகளுக்கு முன்பு மாதிரி பணியாளர்களும் கிடைக்காமல் விவசாயம் முடங்கிவிட்டது.  100 நாள் வேலை திட்டம் அறிவிப்பால் விவசாயம் பாதித்தது.  இப்படியான விவசாயிகள் சந்திக்கின்ற அன்றாட பிரச்சினைகளால் ஏதோ இருக்கிற நிலத்தில் முடிந்தவரை விவசாயம் செய்வோம் என்ற முடிவுக்கு விவசாயிகள் வெள்ளந்தித்தனமாக வந்துவிட்டனர்.  விவசாயத்தையும், விவசாய விளை நிலங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்துகொண்டு வருகின்றன.  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்று அரசும் விவசாய நிலங்களை கையகப்படுத்திக்கொண்டு வருகின்றது. 

விவசாயிகளே! உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.  எவ்வளவு துயரங்கள் வந்தாலும், உங்கள் முன்னோர் விட்டுச்சென்ற நிலத்தை யாருக்கும் விற்காதீர்கள்.  அதுதான் எதிர்கால வாழ்க்கை.  மற்ற பொன் பொருளைக் காட்டிலும் உயர்ந்து நிற்கப்போவது நம்முடைய மரபு ரீதியான விவசாய நிலங்கள் மட்டுமே! அதை பாதுகாக்க வேண்டும்.

விவசாயிகளே! ஒற்றுமையோடு, கண்ணியத்தோடு உங்களுடைய கோரிக்கைகளை வைத்து போராடுங்கள். வெற்றி உங்களை நோக்கி வரும்.  விவசாய தற்கொலை என்பது நமக்கு உகந்தது அல்ல.  மானமுள்ள வெள்ளந்தி ஜனங்களான நாம், விவசாய உரிமைகளுக்காக ஐயா நாராயணசாமி வழியில் போராடி வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையோடு விவசாயத் தொழிலை விடாமல் எந்த சிரமங்கள் இருந்தாலும் எடுத்துச்செல்வோம் என்று சூளுரைப்போம்.  இரத்தம், வியர்வை சிந்தினாலும் வேதனையை அறுவடை செய்கிறோம் என்று சிந்திக்காமல், விவசாயத்தை எடுத்துச் சென்று நாட்டுக்கு உணவை படைப்போம்.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...