Saturday, February 13, 2016

வட்டார வழக்கு சொற்கள் - ஒரு வேண்டுகோள்

சீலத்தூரு (ஸ்ரீவில்லிபுத்தூர்), ராஜவாளையம் (இராஜபாளையம்), பிருதுபட்டி (விருதுநகர்), அரவக்கோட்டை (அருப்புக்கோட்டை), தின்னவேலி, சீமை (திருநெல்வேலி), சக்கனாக்குடி (சங்கரன்கோவில்), எட்டயாபுரம் (எட்டையபுரம்), சிலுகாச்சி (சிவகாசி), எளாரம்பண்ணை (ஏழாயிரம்பண்ணை), பட்ணம் (சென்னை), திருச்சினாப்பள்ளி (திருச்சி), தஞ்சாலூர் (தஞ்சை), கோயம்முத்தூரு (கோயம்புத்தூர்), திருசெந்தூரு (திருச்செந்தூர்), நாலட்டமுத்தூர் (நாளாட்டன்புத்தூர்), மருதை (மதுரை), சின்னமனூரு (சின்னமனூர்), ராம்நாடு (இராமநாதபுரம்) என்று பல ஊர்களை பேசும் மொழியில், வட்டார மொழியில் கடந்த நூற்றாண்டுகளில் பழக்கத்தில் இருந்தது.  இம்மாதிரி ஊர்ப் பெயர்களை நீண்ட பட்டியலிடலாம்.

கதவுகளில் பூட்டுப்போட பயன்படும் பேட்-லாக்-கை பாட்-லாக் என்றும், வயல்வெளியில் குளத்து நீரை பாய்ச்சினால் வாட்டர்-ரேட் என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அதை வாட்ரேட் என்று கிராமத்தில் சொல்வதும் வாடிக்கை. குளத்தில் நீர் வற்றிவிட்டால் தடுப்பு களிங்கலில் நீர்மட்டம் இருந்தால், இறவைப் பெட்டியை வைத்து கொச்சக் கயிறில் இரு பக்கமும் இருவர் தனித்தனியாக நின்றுகொண்டு நீரை எடுத்து வாய்க்காலில் விடுவது வாடிக்கை. அந்த இறவைப் பெட்டியை இறாப்பெட்டி என்றும் மருவிப் பேசுவது உண்டு.

வீடு கட்டும் பணிகளுக்கு ஏணி பயன்படுவதுபோல கோக்காளி என்ற உயர்ந்த நான்கு கால்களைக் கொண்ட கட்டைகளைக்கொண்டு அமைக்கப்பட்ட தளவாடங்கள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது.

இப்படியான பல சொற்கள் நடைமுறையில் இல்லை என்றாலும் அதை எழுத்துப்பூர்வமான பதிவில் கொண்டுவரவேண்டியது நமது கடமை. கி.ரா.வுக்கு ஆசிரியர் எஸ்.எஸ். போத்தையா, கழனியூரான், பாரதிதேவி போன்றோர் இதற்கு உதவியாக இருந்தார்கள்.

மனிதர்களுடைய உணர்வுகளை கடத்துவதற்கு முக்கிய மொழியாக, அதுவும் பேசும் யதார்த்த மொழி, குறிப்பாக அந்தந்த வட்டாரத்துக்கேற்ற வகையில் பேசும் சொற்களைப் பார்த்தால் வித்தியாசப்படும். எத்தனையோ சொலவடைகள் அதில் எத்தனையோ அர்த்தங்கள் கிராமத்தில் அக்காலத்தில் இலக்கியம் படித்தவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் பேசும் வழக்கு மொழிகளில் ஆயிரம் அர்த்தங்களும் இருந்தன.  இந்த சொலவடைகள் எல்லாம் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது என்று தெரியாது. காலம் காலமாக மரபு ரீதியாக நாம் பயன்படுத்தி வந்தவை கடந்த 1980 களிலிருந்து காணாமல் போய்விட்டது. வடமொழி, பிறமொழி கலப்புகள், தூய தமிழ் என்ற நிலையில் சில வட்டார வழக்குச் சொற்கள் மருவிவிட்டன.  அது பயன்பாட்டில் இருக்கின்றதோ, விரும்புகிறோமோ இல்லையோ, நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்த சீதனத்தைப் போற்றிக் காக்கவேண்டும். நாட்டுப்புற இயலும் பிரதான பாடங்களாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். இதில் ஆய்வுகளும் இதன் வரலாற்று தரவுகளையும் அறியப்படவும் வேண்டும்.

வழக்கத்தில் உள்ள சொற்கள் சேகரித்து கி.ரா.வின் வட்டார வழக்கு சொல் அகராதியில் சேர்க்க இருக்கின்றோம்.  இவ்வாறான தரவுகள் நண்பர்களிடம் இருந்தால் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.

1 comment:

  1. அசை - பாய் வைக்க பயன்னடுவது..பாயை தரையிலே வைக்க மாட்டார்கள்..இதிலே தான் வைப்பார்கள்

    ReplyDelete

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...