Monday, February 22, 2016

தோற்பதை யார் கொண்டாடுவார்? ஆனால் இவர் கொண்டாடுவார். தோற்போரை, தோற்றவரை, எளியாரை நாடிப் போய் ஆதரவளிப்பார். ஊக்கமூட்டுவார்.  ஊரில் சிறுபான்மையென யாரும் இருந்து விடக் கூடாது. விட மாட்டார். வலியப் போய் தூக்கிவிடுவார். இது குறித்துப் பலமுறை நான் சிந்தித்தது உண்டு. இத்தகைய போக்குக் காரணம் அவரிடம் குடியிருந்த அந்த துணிபு, துணிச்சல் எனப் புலப்படப் பிடித்தது எனக்குக் கால்நூற்றாண்டு காலம். அவர் அழுது நான் பார்த்தது ஒரே ஒருமுறைதான். எங்கள் மனத்தால் எளிய உறவுக்காரப் பெண்மணி ஒருவர் காணாமற் போய்விட்டார் எனும் தகவல் இரவு பதினொரு மணிக்குக் கிடைக்கிறது; அப்படியே தரையிலமர்ந்து விசும்பி அழுகிறார். இவர் அழுவதைப் பார்த்து ஊரே கலங்கிப் போனது. மற்றபடி, எத்தனையோ முன்னெடுப்புகள் தவறாக, தோல்வியில் முடிந்ததுண்டு. அந்த முடிவிலிருந்து பின்னோக்கிப் போய் அவரின் செய்ற்பாடுகள், அதனின்று முன்வந்து நடப்புக்காலத்திய அவர்தம் மனநிலை என்பதையெல்லாம் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. எந்த சலனமோ குற்றவுணர்வோ இருந்ததில்லை. ஒரு முடிவு எட்டப்பட்டபின், அந்த முடிவுக்கு வித்து நான் என்கிற நிலையில் அதன்விளைவுகளுக்கு முதுகுகொடுத்துத் தாங்கி நிற்பார். அத்தகைய மனவலிமைக்கேற்ற ஒரு குரல். கணீரென ஒலிக்கும் ஒலிப்பில் அந்தியூரே அதிர்ந்ததுண்டு. 

அவருடன் அந்த அறையில் எழுபது நாட்கள். இரவு முழுக்க அமெரிக்க நேரத்துக்கொப்ப அலுவலக வேலை. அவ்வப்போது அவருடனான உரையாடல். பகல் முழுக்க அவர் உறங்கும் போதெல்லாம் நானும் உறங்குதல் இப்படி. தன்னுடைய இளம்பிராயம், பள்ளிநாட்கள், தோழர்கள் என எல்லாவற்றைப் பற்றியும் நினைவு கூர்ந்து கொள்வார். அந்த இரண்டு நாட்கள் அண்ணனும் விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டிலிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்தவனே விடுப்பெடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறான். இவனுக்கெதுக்கு விடுப்பென அவருடைய நண்பர்கள் கலாய்த்ததன் பொருட்டு அவரே அழைத்து வேலைக்குப் போகச் சொன்னார். காலை ஒன்பது மணி வாக்கில் ஒவ்வொருவராக அழைத்து இன்சொற்கள், அறிவுரைகள் நல்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனக்கு விநோதமாக இருந்தது. இரகசியம் கருதி சில செய்திகளை சொற்களால் சொல்லாமல் செய்கையால் செய்து காண்பித்தார். அவற்றைப் புரிந்து கொள்வதில் வீட்டிலிருந்த அம்மா, சித்தி, அண்ணன்களுக்குப் பெரிய சிக்கலிருந்தது. ஆனால் எனக்கோ ஒவ்வொரு செய்கையிலும் ஒவ்வொரு கதையே வெளிப்பட்டது.

காலை பத்து மணி வாக்கில் தன் ஞானக்கண்களால் நமக்குக் காணக்கிடைக்காத ஓர் உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் ஆவலில், எனக்கும் சொல்லுங்கவென்றேன். பேச்சுக் கொடுக்க வேண்டாம்; நான் தூங்க வேண்டுமென்றார். ஆனாலும் கண்களை மூடியவாறு தொடர்ந்து அவரொரு உலகில் உலாப் போய்க்கொண்டிருப்பதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது சிரிப்பார். ‘அட்ப் போடா’, ‘பார்த்துக்கலாம்’, ‘அப்பிடியெல்லாம் விட்ற முடியாது’ போன்றவைகள் மட்டும் எப்போதாவது அறையில் ஆலங்கட்டி போல வந்து விழுந்து கொண்டிருந்தன. தொடர்ச்சியற்றுப் பெய்த அத்தகைய சொல்மழையில் கடைசியாக வந்து விழுந்த துளி, ”ஒரு பொம்பளைய, அப்பிடிக் கைவிட்ற முடியுமா?”. அதற்குப் பிறகு நன்கு உறங்கிப் போனாரென்றே நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு நான் கண்ணயர்ந்து விட்டேன்.

அம்மா வந்து எழுப்பினார்கள், “மணியொன்னாகுது. சாப்பிட்டுவந்து படுக்கலாம். வா!”. ஒரு கணம் வெறுமனே படுத்திருந்தேன். தலையை வலப்பக்கம் திரும்பிப் பார்த்தேன். தன் தண்டுவடங்களைத் தரையில் பதித்துப்படரும் கொடிகளின் செய்ற்பாடு மல்காத்திருத்தல். அதையே மல்லாக்கப்படுத்திருத்தல் என்கிறோம். அதைப் போன்ற மல்காத்தல்தான் நான் கண்ட காட்சியாக இருந்தது. தன்னைச் சார்ந்தவர்களையும், தன்னை நாடி வந்தவர்களையும் காத்துப் படர்ந்திருக்கும் கொடி போலவே படுத்திருந்தார். விழிகள் மூடியிருக்க ஆழ்ந்த அமைதி. இடையூறு செய்வானேன்கிற சிந்தனையோடு மெதுவாக, அக்கொடியின் இலைகள் அசைவதைக்காட்டிலும் மிக மெதுவாக எழுந்து வந்து வீட்டு முற்றத்தில் நின்று உறக்கச் சோம்பலைத் துரத்தியடிக்கும் பொருட்டு நெட்டி முறித்துக் கொண்டேன். “மணீ... மணீ...”, கணீரென வந்து விழுந்தன.

உள்ளறைக்குள் ஓடிப் போனேன். என் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தன விழிகளிரண்டும். அகல விரிந்த கண்கள். நிலைகுலையாத தீர்க்கமான பார்வை. ‘அப்பா’ என்றேன். அவருக்கேவுரிய ஊக்கம், மனவுறுதி முதலானவற்றை என்னுள் புகுத்தின அவரது புன்முறுவல். வலுவாகக் குழப்பமற்று வெளிப்பட்டது பேச்சு. குரலின் ஓசையில் கொஞ்சம் கூட அதன் கட்டு, ஒலியோசை, வீரியம் குறைந்திருக்கவில்லை. அதே குரல். “மணீ... வா சாமி! நான் இனி இருக்கிறதுக்கில்ல. கிளம்புறன்!”. ”அப்படி சொல்லாதீங்ப்பா, தைரியமா இருக்கணும்!”. “எனக்கென்ன? பாத்துக்கலாம்!” என்ற அவரது வழமையான சொற்களால் என் மனம் உறுகி வைரமாகிப் போனது அக்கணம். கையைப் பிடித்தேன். அவரும் என் கையைப் பிடித்துக் கொண்டார். அருகிலிருந்த சுடுபானக் கொள்கலத்திலிருந்து சற்று வார்த்து புகட்டப் போனேன். ஒரே ஒரு வாய் வாங்கிக் கொண்டார். சைகையால் மேற்கொண்டு வேண்டாமெனச் சொல்லி விட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டார். போர்வையை நன்கு கழுத்து வரை இழுத்து விட்டேன். இசைந்து ஏற்றுக் கொண்டதை அவரது தலையசைவு குறிப்பால் உணர்த்தியது. 

அன்று ஒலித்த அந்தக் குரல், தன்னில் கரைந்து போகிற குரல் அல்லவென்பது அந்தக் காற்றுக்குத் தெரிந்திருக்கவில்லை அக்கணம். ஆமாம்; இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிற அக்குரல் விட்டுப் போயிருப்பது ஒன்றே ஒன்றைத்தான்! எதையும் எதிர்கொள்கிற துணிபு!!!

-பழமைபேசி

__._,_.___










.
 
__,_._,___

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...