Sunday, February 7, 2016

மதுரையில் விவசாயிகள் கலந்துரையாடல்

U
நேற்று 6.2.2016 மதுரை செய்தியாளர்கள் அரங்கத்தில் உழவர் உழைப்பாளர் சங்கம் பொங்கலூர் இரா. மணிகண்டன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பேசிய உரையின் சுருக்கம்:

இன்று விவசாயிகளின் தலைவராக விளங்கிய நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த நாள். இந்த நிகழ்வில் தலைமையேற்றுள்ள
மணிகண்டன் தலைமையில் காவிரி டெல்டா மீத்தேன், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ, கோவை மாவட்டத்தில் கெயில் போன்ற
திட்டங்களை திரும்பப் பெற்று விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பசுமை புரட்சி என்ற பெயரில் பூச்சிக்கொல்லி
ரசாயன உரங்கள், மரபணு மாற்று உரங்கள் என்று விவசாயத்தை பாழ்படுத்திய கொடுமையை மாற்றி இயற்கை விவசாயம்
மேற்கொள்ள அரசுகள் உரிய நடவடிக்கைகளோடு அதற்கான உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

விவசாயத்துக்கு அடிப்படையான நீர் ஆதாரங்களையும் பெருக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும். முல்லைப்
பெரியாறு, காவிரி போன்ற நதி நீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு சிலை அமைக்க
வேண்டும். #விவசாய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை நினைவுப்படுத்தும் வகையில் நினைவு மண்டபங்கள் நிறுவ வேண்டும்.
இயற்கை விவசாயத்துக்காக பாடுபட்ட கோ. நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் காட்டிய வழியினை பின்பற்ற வேண்டும் என்று
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.

விவசாய சங்கத்தை ஐயா நாராயணசாமி நாயுடு நடத்தும்போது உடன் பணியாற்றியவன் என்ற காரணத்தினாலும், ஒரு விவசாய
குடும்பத்தில் பிறந்தததால் விவசாயிகளின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்ற அக்கறையும் ஆர்வமும் எப்போதும் உண்டு.
இன்றைக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு விவசாயிகளுக்கு முன் உள்ள பிரச்சினைகள் என்ன என்று கவனித்தால் விவசாய உற்பத்தி பொருளுக்கு கட்டுபடியான
விலையும், விவசாய இடு பொருள்கள் விலை ஏற்றத்தை குறைக்கவும் நடவடிக்கைகள் அடிப்படையில் வேண்டும்.

கரும்பு விவசாயமோ, நெல் விவசாயமோ, பணப் பயிர் விவசாயமோ, மானாவாரி விவசாயமோ என அனைத்து விவசாய தொழிலிலும்
நட்டமே ஏற்படுகிறது. 1960 களில் பசுமை புரட்சி வந்ததால், நம்முடைய விவசாய நிலங்கள் நஞ்சாகி, பழைய இயற்கை விவசாயம் மாறி
சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் விவசாய உற்பத்தி பொருள்களிலும் ரசாயனம் கலந்ததை உற்பத்தி செய்கின்றோம். அதையே
உண்கின்றோம். அதனால் பல்வேறு பாதிப்புகள்.

விவசாயத்துக்கு அடிப்படை நீர் ஆதாரங்கள். குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளை தூர் வாராமல் கருவேல மரங்கள் வளர்ந்து நீரை சேகரிக்க முடியவில்லை. அது மட்டுமா? குமரி மாவட்டம் நெய்யாறு அணை மூடப்பட்டுவிட்டு 8 வருடங்கள் ஆகிவிட்டன. நெல்லை மாவட்டம் அடவி நயனார் அணையில் சரியான நீர்வரத்து இல்லை. இதன் அருகே திட்டமிடப்பட்ட உள்ளாறு செண்பகத் தோப்பு போன்ற அணைத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை திட்டம் நீண்ட காலம் கிடப்பில் உள்ளது.  பிரச்சினைக்குரிய முல்லைப்பெரியாறில் தீர்வு எட்டப்படவில்லை. கொங்கு மண்டலத்தில் ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, என கேரளாவோடு முட்டுக்கட்டையான நீர் ஆதாரப் பிரச்சினைகள், கர்நாடகாவோடு காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினைகள், ஆந்திராவோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு பிரச்சினைகள் போன்றவற்றால் விவசாயத்திற்கு நீர் ஆதாரப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் ஒரு பக்கத்தில் பிரச்சினை.

அக்காலத்தில் விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி வளர்த்தல், உள்நாட்டு மீன்பிடித் தொழில்கள் எல்லாம் விவசாயத்தோடு சார்ந்திருந்தன. இவையெல்லாம் அறவே நலிவடைந்துவிட்டது. நாட்டுக் கோழி, ஆடு வகைகள் மேச்சேரி, வேம்பாடு போன்ற இனங்கள் எல்லாம் குறைந்து வருகின்றது. காங்கேயம் மாட்டு வகையும் குறைந்துவிட்டது. விவசாயம் என்ற கலாச்சாரமே சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய வேலைக்கே ஆட்கள் கிடைப்பதில்லை. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விவசாய நிலங்களை பறிகொடுக்கவேண்டிய நிலை. பாரம்பரிய மரபு ரீதியான விவசாய விதைகள் இப்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. இதுதான் இன்றைய விவசாயிகளின் உண்மையான நிலை. இப்படி எத்தனையோ பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  பண்டிதர் நேரு காலத்தில் தொழில் வளர்ச்சியால் விவசாயம் புறம் தள்ளப்பட்டதுதான் உண்மை. அப்போது நேரு அவர்கள் நாட்டின் பாதுகாப்பையும், விவசாயத்தையும் சற்று கவனிக்க தவறிவிட்டார். வெளி விவகாரத்திலும், தொழில்துறையிலும் காட்டிய அக்கறையை விவசாயத்திலும் நேரு காட்டியிருக்க வேண்டும். விடுதலை பெற்ற காலத்திலிருந்தே விவசாயம் நசுக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிராமிய பொருளாதாரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

விவசாயி தன்மானத்தோடு வாழ முடியாத நிலை. இன்றைக்கு 40 விவசாயிகள் தமிழகத்தில் கடன்தொல்லை, விவசாயம் பொய்த்துப் போய்விட்டது என்று தற்கொலை செய்துகொண்ட கொடூரமான நிலைமை. இந்த நிலைமை கடந்த காலத்தில் மகாராஷ்டிரத்திலும், சட்டீஸ்கரிலும், ஆந்திரத்திலும் என வடமாநிலங்களில் நடைபெற்றது. இந்த துயரம் தமிழகத்திலும் 2012 லிருந்து துவங்கி இதுவரை நமது விவசாயிகள் 40 பேரை தற்கொலையில் இழந்துள்ளோம்.  விவசாயி உரிமை கேட்டால் துப்பாக்கிச் சூடு. சுதந்திர போராட்டக் காலத்திலேயே நெல்லை மாவட்டம் கடம்பூரில் ஆங்கில ஆட்சியாளர்களால் முதல் விவசாயி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி 1960 களிலிருந்து இன்று வரை 70 விவசாயிகள் அரசு காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டியிலேயே இரண்டு முறை நடந்தது. என்னுடைய சொந்த கிராமம் குருஞ்சாக்குலம் கிராமத்திலும் 1980 டிசம்பர் 30ம் தேதி 8 பேர் சாகடிக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் பெருமாநல்லூர், மல்லலேக கவுண்டன் பாளையம், அய்யம்பாளையம், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம், சாத்தூர் அருகே வெற்றிலையூரணி, விருதுநகர் அருகே மீசலூர் மற்றும் பாலவநத்தம், கோவில்பட்டி அப்பனேரி, திண்டுக்கல் அருகே வேடசந்தூர், மதுரை மாவட்டம் நொச்சோடைப்பட்டி, வேலூர் மாவட்டம் ஒருகத்தூர், விருதுநகர் மாவட்டம் வாகைகுளம், கோவை மாவட்டம் உடுமலை, திருத்தணி அருகே கண்டிகை, விழுப்புரம் அருகே வீரப்பெருமாள்புரம் என்று துப்பாக்கிச் சூடுக்கு 70 விவசாயிகள் இதுவரை பலியாகியுள்ளனர். தற்கொலை 40, துப்பாக்கிசூட்டுக்கு 70 ஆக மொத்தம் 110 விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காக தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இது எதற்கு? விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்கு உணவளித்துவிட்டு, பராரியாக இருக்கிறோமோ என்று உரிமைக்குரலுக்காக போராடியதன் விளைவுதான் இந்த இழப்பு.  இது மாதிரி வேறு துறையில் தற்கொலை, துப்பாக்கிச் சூடு நடந்தால் கொதித்தெழுவார்களே! ஆனால் அப்பாவி விவசாயிகள் மட்டும் இறந்தால் கேட்பதற்கு யாரும் இல்லையே என்ற மமதை அரசுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது.  ஒரு நாள் விவசாயி வீறுகொண்டு எழுவான். இன்னும் இறந்த விவசாயிகளுடைய தியாகம் தீப்பொறியாக உள்ளது. இதற்கு பதில் சொல்லவேண்டியது ஆட்சியாளர்கள்.

விவசாய முதல்வர் என்று சொல்லப்பட்ட ஓமந்தூரார் முதல்வர் பதவியிலேயே நீடிக்க முடியவில்லை. விவசாய பிரதமர் ஜெய் கிஷான், ஜெய் ஜவான் என்று சொன்ன சாஸ்திரியும் நீண்ட காலம் பிரதமராக இருக்கவில்லை. விவசாயியாக இருந்த சௌத்ரி சரண் சிங் பிரதமர் பதவியில் நீடிக்க முடியவில்லை. ஏன் இந்தியாவின் முதுகெலும்புத் தொழில் விவசாயம் என்று சொல்லிக்கொண்டு, விவசாயத்தை நசுக்குவதில் அரசு பரிவாரத்தில் இருப்பவர்கள் அக்கறையோடு இருக்கின்றார்கள்?  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற வேண்டும் என்கிறார். இன்றைக்கு பா.ஜ.க. மத்திய அமைச்சர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்று திமிராக பேசுகிறார். இதையும் பார்த்துக்கொண்டும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. நிச்சயமாக மறுபடியும் விவசாயப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.  அதற்கான காரணங்களும் கொழுந்துவிட்டு எரிகின்றன.

இன்றைக்கு ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்தநாள். கோவில்பட்டி விருந்தினர் விடுதிக்கு சென்றால் அவருடைய காலமான அந்த விடுதியின் வடக்குப்புற அறையை நினைத்தாலே பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.  இந்த நாளில் நாமெல்லாம் விவசாயிகள் நம்முடைய உரிமைகளை மீட்க போராடுவோம். அதற்கான அடிப்படை பணிகளை எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கின்றோம்.

விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் ஒளிமயமான நிலை ஏற்படவேண்டும். அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், தான் ஒரு ஆப்பிள் விவசாயி என்கின்றார். முன்னால் அதிபர் ஜிம்மி கார்டன், தான் ஒரு நிலக்கடலை உற்பத்தி விவசாயி என்று பெருமையோடு சொல்கின்றார். ஆனால் இங்கு மட்டும் விவசாயி என்றால் இரண்டாம்தர குடிமகனாக பார்ப்பது மாற வேண்டும். அப்படி இல்லையென்றால் போர் குணத்தில் அதை மாற்றுவோம். இந்த நிகழ்வில் வடித்துள்ள தீர்மானங்களுடைய கோரிக்கைகளோடு, கிராமத்தின் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டுப்புற இயல், நாட்டுப்புற கலைகள், பழைய மரபு சார்ந்த விவசாயத்துக்குப் பயன்படும் விதைகள், கிராமப்புற அடையாளங்கள், கிராமப்புற சுற்றுச் சூழல் ஆகியவற்றையும் பாதுகாக்கக்கூடிய வகையில் உரிய கொள்கை ரீதியான நடவடிக்கைகளை எடுக்க செயல் திட்டங்களை வடிவமைப்போம். இதை ஒரு பிரகடனமாக வைப்போம்.  அதுவே விவசாயிகளின் "மேகனகர்ட்டா" என்ற சாசனத்தை வெளிப்படுத்தி விவசாளிகளை ஒற்றுமைப்படுத்தி நம் உரிமைகளைப் பெறுவோம் என்பதுதான் இன்றைய நாள் சூளுரையாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விவசாயியை அப்பாவி என்று நினைத்துக்கொண்டு பரிவாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு நாள் விவசாயினுடைய புரட்சி துவங்கும். இப்படியான பாரா முகப் போக்கும், அலட்சியப்படுத்துகின்ற போக்கும் நடந்தால், விவசாயிகளும் மாவோ இயக்கத்தைப் போன்று போராட வேண்டிய கட்டத்திற்கு நிச்சயம் தள்ளப்படுவார்கள்.

உழவன் உயர்ந்தால் உலகம் உயரும் என்ற உன்னத தத்துவத்தை உலகத்திற்கும், நாட்டுக்கும் உணர்த்துவோம். எப்படி ஐயா நாராயணசாமி நாயுடு காலத்தில் போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்ததோ, கட்டை வண்டியை விவசாயிகளின் பேட்டன்ட் என்று நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டியதோ, அந்த பெருமையையும் கீர்த்தியையும் மீட்டெடுப்போம். உழவன் என்றும் உயர்ந்தவன். ஐயன் வள்ளுவன் சொன்னதைப் போல உழவுத் தொழிலின் பெருமையை பாதுகாத்து விவசாயிகளுடைய இழந்த உரிமைகளை மீட்டு நம்முடைய விவசாய இனத்தை வாழவைப்போம் என்ற கடமையை செய்ய நாம் அனைவரும் முன்வருவோம். நீங்கள் அனைவரும் இதற்கான பிரச்சாரத்தை கிராம அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதற்குத்தான் இந்தக் கூட்டம். தொடர்ந்து இம்மாதிரி சந்திப்புகள் நடக்கும். அடுத்தக் கட்டத்திற்கு நாம் நகர வேண்டும். அவை யாவும் விவசாயிகளுடைய நலன்களும், அக்கறையும் கொண்ட பாதையாக இருக்கும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கின்றேன்.




No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...