Thursday, February 4, 2016

Gail

கெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு - நடுநிலைத் தவறியது

 --------------------------------

இந்திய எரிவளி ஆணையம் (கெயில்) தமிழ்நாட்டில் குழாய் பதிக்கத் தடைபோடுவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை; அது போட்ட தடையை நீக்குகிறோம்; தாராளமாக வேளாண் நிலங்களில் குழாய் பதித்துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி சி.எஸ். தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஆர். பானுமதி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 01.02.2016 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் தீய விளைவுகள் வருமாறு:

 

1 . நடுவண் அரசு நிலம் கையகப்படுத்தும்போது அல்லது தனது பயன்பாட்டிற்குக் குத்தகைக்கு எடுக்கும் போது அதைத் தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

இந்த முடிவு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகும். மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள அதிகாரப் பட்டியலில், மாநில அரசு அதிகாரப் பட்டியலில் 18ஆம் எண் கொண்ட பிரிவு, நிலம் முழுக்க முழுக்க மாநில அரசு அதிகார வரம்பில் வருகிறது எனக் கூறுகிறது. வேளாண் நில உடைமைமையை மாற்றுவது (Alienation of Agricultural land) மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று இப்பிரிவு கூறுகிறது. இதுபோல், இந்திய அரசு நில உரிமை மாற்றம் தொடர்பாக அதிகாரம் வழங்கும் ஒரு பிரிவு, நடுவண் அரசு அதிகாரப் பட்டியலிலும் இல்லை, பொது அதிகாரப் பட்டியலிலும் இல்லை.

 

நடுவண் அரசு நிறுவனங்கள் கனிமவளம், எரிவளி கொண்டு செல்ல - நிலம் குத்தகை எடுக்க அதிகாரம் வழங்கும் 1962-ஆம் ஆண்டுச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது. அதையொட்டி இயற்றப்பட்ட 2012 சட்டமும் அரசமைப்புச் சட்ட அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது.

 

இந்த மாநில உரிமையை எடுத்துக்கூறி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடவில்லை. ஏனோ தானோ என்றுதான் தமிழ்நாடு அரசு இவ்வழக்கை நடத்தியது.

 

மேற்படித்தீர்ப்பு வந்த பிறகாவது இந்தக் கோணத்தில் தமிழ்நாடு அரசு தன் உரிமையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை கொடுக்காமல் இருப்பது, தமிழ்நாட்டு உரிமையில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

 

 

தமிழ்நாட்டின் நில உடைமை மாற்றம் தொடர்பான அதிகாரம் நடுவண் அரசுக்கு இல்லை என்ற உண்மையை உச்ச நீதிமன்றம் தன்னாய்வாக எடுத்துக் கொண்டு, வேளாண் நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கத் தடைபோட்டு தமிழ்நாடு அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

 

2. தேசிய நலன் பெரிதா, உழவர்கள் நலன் பெரிதா என்றால் தேசிய நலன்தான் பெரிது என்றும் அந்த அளவுகோல்படி, வேளாண் நிலத்தில் எரிவளிக் குழாய் பதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் கூறியுள்ளது.

 

தேசிய நலன் என்பதற்குள் உழவர் நலனைச் சேர்க்காமல் எரிவளி நிறுவன வணிக நலனை மட்டும் தேசிய நலன் என்று உச்ச நீதிமன்றம் வரையறுப்பது நடுநிலை தவறிய ஒருபக்கச் சார்பு அணுகுமுறையாகும். மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் நிலங்களையும், உழவர்களின் உழவுத் தொழிலையும் அழித்து தொழில் துறையை வளர்க்கலாம் என்ற இந்திய ஆட்சியாளர்களின் பெருந்தொழில் நிறுவனச் சார்புக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் கடைபிடிக்கிறது என்பதை இத்தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

 

3. எரிவளிக் குழாய்கள் பதிக்க முதலில் அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு உழவர்கள் எதிர்த்தபின் வாக்கு வங்கி அரசியலுக்காக, அனுமதியை நீக்கி விட்டது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் விமர்சித்திருப்பது நீதித்துறையின் கூர்நோக்குரையாக (Observation) இல்லாமல், நீதித்துறையின் அரசியல் சாடலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசாங்கத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற அரசியல் குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றம் மீதான மதிப்பைத் தாழ்த்திவிடும்.

 

4. கேரளத்திலிருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடகம் செல்லும் எரிவளிக் குழாய்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வேளாண் நிலங்கள் வழியாகச் செல்கின்றன. கேரளத்தில் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை ஓரமாகவும், தொடர்வண்டிப் பாதை ஓரமாகவும் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் பதிக்கப்படவில்லை.

 

கேரளத்துக்கு நீதியும் தமிழ்நாட்டிற்கு அநீதியும் எனக் கெயில் நிறுவனம் செயல்படுவதைத் தட்டிக்கேட்டு அநீதியைத் தடுக்க வேண்டிய தனது கடமையை உச்ச நீதிமன்றம் செய்யத் தவறியது, அதன் நடுநிலை மீது வலுவான ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

5. இரண்டடி விட்டமுள்ள குழாய் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது. ஆனால் 66 அடி அகலத்திற்கு அதன் மேல் பரப்பை கெயில் எடுத்துக் கொள்கிறது. அந்த 66 அடிப் பரப்பில் ஒன்றரை அடிக்கு மேல் வேர்விடக் கூடிய எந்தப் பயிரையும் செய்யக்கூடாது. அந்த 66 அடி அகலப் பரப்பிலும் அதை ஒட்டியும் மரங்கள் இருக்கக்கூடாது; இருந்தால் வெட்டிவிட வேண்டும். புதைக்கப்பட்டுள்ள குழாய் சேதமடையாமல் பாதுகாக்கும் பொறுப்பு அந்த நில உரிமையாளரைச் சேர்ந்தது. ஏதாவதொரு வகையில் குழாய்க்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அந்த உழவர் ஏற்க வேண்டும். இதனால் தமது நிலத்தில் சுதந்திரமாக வேளாண்மை செய்ய முடியாதது மட்டுமின்றி, அதன் 24 மணி நேரக் காவல் காரராகவும் அந்த உழவர் அல்லல்பட வேண்டும்.

 

 

இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடித்தான் தமிழ்நாட்டு உரிமை – உழவர்களின் வேளாண் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். எரிவளிக் குழாய் பதிக்கப்படுவதைத் தடுத்து ஏழு மாவட்ட உழவர்களின் வேளாண்மையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுப் போட வலியுறுத்துவோம். அவேவேளை ஏழு மாவட்டங்களில் குழாய் பதிக்காமல் தடுக்க இலட்சக்கணக்கான மக்கள் வேளாண் விளை நிலங்களில் அணிவகுப்போம்!

 

 

#gail #gailsupremecourtorder #ksrpost

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...