இன்றைய (23-02-2016) தினமணி நாளிதழில் "விவசாயிகளின் வேதனைக் குரல்!” என்ற தலைப்பில் கொங்கு மண்டலத்தில் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிப்பது குறித்து வெளிவந்துள்ள எனது கட்டுரை.
கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது. இந்த கேஸ் லைன் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும், இதனால் மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளின் கவலையாக உள்ளது.
தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு எடுத்துச் செல்ல 2012ல் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2014ல் தடையும் விதிக்கப்பட்டு இப்போது விவசாயிகளுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டது. இது ஒரு வேதனையான விடயம். விவசாயம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டு மக்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையும் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
இத்தீர்ப்பின்படி கெயில் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. அதுவும் சந்தை விலையில் 40% நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு கொடுத்தால் போதும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது மேலும் விவசாயிகளை பாதிக்கும். இது இவ்வட்டார மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மாநில அரசுக்கு இதில் உரிமை கிடையாது என்றும், கெயில் குழாய் பதிக்கப்படும் விளைநிலங்களில் குழாயில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு விவசாயிகள் தான் பொறுப்பு என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது வேதனையான விஷயம்.
கேரளாவில் சாலைகளின் ஓரத்தில் பதிக்கப்படும் குழாய்கள் இங்கே மட்டும் விளை நிலங்களில் பதிக்க முற்படுவது ஏன்?
உதாரணமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்து கொள்ளுவோம், அந்த நிலத்தின் நடுவில் இந்த குழாய்கள் சென்றால், அந்த குழாய்களின் மீது அந்த விவசாயி நீர் வாய்க்கால்களை கொண்டு செல்ல கூடாது.
எரிவாயுக்குழாய் பதிக்கும் வேலைகளின் போதும், கனமான குழாய்களைத் தூக்கிக் கொண்டு கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விளைநிலங்கள் வழியே செல்லும்போதும், பராமரிப்புப் பணிகளின் போதும் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எரிவாயுக்குழாய் இடப்படும் இடங்களில் இருந்து 20 மீட்டர் வரை இருபுறமும் மரங்களோ வேறு கட்டிடங்களோ இருக்கக் கூடாது, குழாய்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குக் கடுமையான தண்டனை போன்ற பல கடுமையான விதிமுறைகள் விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.
அப்பாவி விவசாயிகளுக்கு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் கிடைக்கும்.
கேரளாவில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் சுற்று வழியான தமிழகம் வழியாக 310 கி.மீ எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்திற்கு கெயில் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. குழாய்களை விளைநிலங்கள் வழியாகப் பதிக்காமல் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு சரியான தீர்வு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடாக தாக்கல் செய்யப்பட்டது. இதில்தான் விவசாயிகளுக்கு விரோதமான தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. இதற்குமேல் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு செய்யவேண்டியதுதான் முக்கிய கடமை மட்டுமல்லாமல் அடுத்தகட்ட நகர்வும் கூட.
எண்ணூர்-மதுரை 615 கி.மீ. எரிவாயு குழாய் திட்டமும் நடைமுறைப்படுத்த பணிகள் துவங்கியுள்ளன. திருவள்ளூர்-காஞ்சிபுர மாவட்ட விவசாய நிலங்களில்தான் குழாய்களை பதிக்க ஆரம்ப பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ஏரி மாவட்டமான ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயமே அழிந்துவிடும். படிப்படியாக இத்திட்டம் விளைநிலங்கள் வழியாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மதுரை வரை பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பைப்லைன் திட்டமும் வர இருக்கிறது.
மேலும் சேலத்திலிருந்து கடலூர் வரை 6 மில்லியன் கன மீட்டர் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் 500 கோடி மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்படும் திட்டங்களும் உள்ளன.
தென் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் மிதக்கும் திரவநிலை எரிவாயு மையமும் ரூ.2500 முதலீட்டில் அமைக்க திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
இம்மாதிரியான கேஸ் பைப்லைன் பிரச்சினை ஆந்திராவில் ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மாமிடிகுடுரு என்ற கிராமத்தில் விஜயவாடா அருகில் உள்ள லான்கோ கொண்டபள்ளி அனல் மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும்போது 4 மீட்டர் ஆழத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த இந்த பைப்லைன்கள் துரு ஏறி தீப்பற்றி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சிலர் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இன்னும் அந்த நோயிலிருந்து மாள முடியவில்லை.
2012 ஜூன் 28 அன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தீ ஜூவாலைகளாக எரிந்து அப்பகுதியையே நாசப்படுத்தியது. இப்படியெல்லாம் விபரீதங்கள் விளையக்கூடிய நிலைமையும் கேஸ் பைப் லைன்களில் ஏற்படுவதுண்டு. இந்த விபத்துக்கு முன்பே அந்த கிராம மக்கள் இது குறித்து நிர்வாகத்திற்கு தெரிவித்தபோது நிர்வாகம் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளாததால் இந்த விபத்து ஆந்திராவில் நடைபெற்றது. இந்த விபத்தினால் மக்களே ஆர்ப்பரித்து கெயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இப்படியாக விபத்தை மக்களே போராடியதைப் போன்று கொங்கு மண்டலமும் போராட்ட களமாகிவிடும் என்பதை நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் உணரவேண்டும். பாதிப்பினால்தானே போராட்டம். அந்த பாதிப்பை உணராவிட்டால் என்ன மக்கள் நல அரசு? என்ன இயற்கையின் நீதி?
தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கக் கூடிய முன்னேற்பாடு நடவடிக்கைகளும் இந்த திட்டத்தில் சரியாக வகுக்கப்படவில்லை.
கொங்கு மண்டலத்தில் 5842 விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ள பி.எம்.பி. சட்டம் 2011ஐ திருத்த வேண்டும். இதில் மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரி பைப்லைன் இணைப்புகள் சாலையின் ஓரத்தில்தான் மற்ற மாநிலங்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் ஊடே செல்லவேண்டிய அவசியம் என்ன?
மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்; குஜராத்தில் அகமதாபாத் - பகோதரா மற்றும் காந்திநகர் - சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்; உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
தமிழக உரிமைப் பிரச்சினைகளை மட்டும் தொடர்ந்து கவனித்தால் உச்சநீதிமன்ற வழக்குகளில் நியாயங்கள் கிடைப்பதிலும் தாமதம். அப்படியே தீர்ப்பு வந்தாலும் எந்த பயனும் தமிழகத்திற்கு இதுவரை கிட்டியதில்லை.
காவிரியில் தீர்ப்பு வந்தது. முல்லைப் பெரியாறில் தீர்ப்பு வந்தது. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடக்கவிடாமல் உச்சநீதிமன்றம் தடுத்தது. மீனவர் பிரச்சினையும், கச்சத் தீவும் தீர்ப்புகள் வந்தபாடில்லை. சேது கால்வாய் திட்டமும் தடுக்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் திட்டத்திலும் போராட்டக்காரர்களுக்கு எவ்வித தீர்வும் உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவில்லை. குமரி மாவட்ட நெய்யாறு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவை. கேரளாவில் பிரச்சினையாக இருக்கின்ற எண்டோசல்ஃபானுக்கும் தீர்வு எட்டப்படவில்லை. போபால் விஷவாயு வழக்கிலும் இழுபறி. இப்படியாக நீதித் துறையிலும் மக்களின் நலன் என்ற நிலை சட்டத்துக்கு அப்பாலும் சிந்தித்து தீர்ப்புகள் வரவேண்டும்.
தமிழகத்தில் கூடங்குளம் பிரச்சினை, தேனியில் நியூட்ரினோ, தஞ்சை டெல்டாவில் மீத்தேன், சாயம் மற்றும் தோல் கழிவுகள் தேக்கம், பெங்களூர், கேரளா குப்பைகளை தமிழக எல்லைகளில் வந்து கொட்டுவது போன்று பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் போராடியும், தமிழகம் ஒரு குப்பைக் கூடை என்று மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நினைக்கின்றன. சேலம் இரும்பாலையிலும் பிரச்சினை, நெய்வேலி பிரச்சினை, ஊட்டி போட்டோ ஃபிலிம் ஆலை சிக்கல், நீர் ஆதாரங்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களோடு கண்ணகி கோட்ட பிரச்சினை, பழவேற்காடு பிரச்சினை, ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, நாசமாக்கப்பட்ட காட்டு வளங்களும், கடல் வளங்களும், அன்னிய குளிர்பானங்கள், என ஒரு நீண்ட பட்டியலான தமிழகத்தின் உரிமை ஆதார பிரச்சினைகள் நிறைவேற்றாமலும், சிக்கலிலும், நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கிடப்பிலும் உள்ளன.
உரிமைகளை பறிப்போம். மக்களிடம் அதிகாரங்களை காட்டுவோம் என்பது நீதியல்ல. அநீதி. நீதிமன்றங்கள் அரசுகளால் ஏற்படும் அநீதிகளுக்கு பரிகாரம் காணும் ஜனநாயக வழிபாட்டுத் தலங்கள். அங்கும் நீதி மறுக்கப்பட்டால் என்ன செய்ய?
கெயில் கொடுமையால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டல விவசாயிகள் இனி எங்கு சென்று தங்கள் வேதனைக் குரலை முறையிடுவார்களோ? அப்பாவி விவசாயிகளும் இரண்டாம்தர குடிமக்களாகிவிட்டார்களே.
விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் றாயடா? என்ற எட்டயபுரக் கவியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது.
மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்.,கங்கையே சூதகமானால் எங்கே போவது ?
விவசாயிகளின் வேதனைக் குரல்!
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது. இந்த கேஸ் லைன் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும், இதனால் மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளின் கவலையாக உள்ளது.

No comments:
Post a Comment