Friday, February 26, 2016

TR இராமச்சந்திரன்

Cinema Expresதகவல்கள்:

* தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவைக் கதாநாயகன் TR இராமச்சந்திரன்.

* வைஜயந்திமாலா, சாவித்திரி, பத்மினி, அஞ்சலிதேவி ஆகிய பிரபல கதாநாயகிகளுடன் கதாநாயகனாக நடித்தவர், MGR, சிவாஜி, ஜெமினி, SSR ஆகிய கதாநாயக நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையுடையவர் TR இராமச்சந்திரன் என்கிற திருக்காம்புலியூர் இரங்கராவ் இராமச்சந்திரன்.

* TR இராமச்சந்திரன் நடித்த முதல் படம் வாயாடி+போலி பாஞ்சாலி, யெஸ் யெஸ் (1940) என்ற படமாகும். வாயாடி என்ற படத்துடன் போலி பாஞ்சாலி, யெஸ் யெஸ் என்ற இரு துண்டுப் படங்கள் திரையிடப்பட்டன. வாயாடி படத்தில் காளி N இரத்னம் பிரதான வேடத்திலும், TR இராமச்சந்திரன் துணை வேடத்திலும் நடித்துள்ளார்கள். பாரதிராஜாவின் குருவான புட்டண்ணா இயக்கத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன் நடித்த சுடரும் சூறாவளியும் (1971) என்ற படமே இவர் கடைசியாக நடித்த படமாகும். எம் தேடலின்படி இவர் 30 ஆண்டுகளில் 67 படங்களில் நடித்துள்ளதாக அறிய முடிகிறது.

* இவர் நடித்த 67 படங்களில் 18 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களிலேயே 18 படங்களில் பிரபல நாயகிகளுடன் நாயகனாக நடித்தவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

* TRR நாயகனாக நடித்த குறிப்பிடத்தக்க படங்களும், உடன் நடித்த நாயகிகளும்:
சபாபதி (1941)-CT இராஜகாந்தம், மானசம்ரக்ஷணம் (1945)- SD சுப்புலஷ்மி, சகடயோகம் (1946)-VN ஜானகி, வாழ்க்கை (1949)-வைஜயந்திமாலா, பொன்வயல் (1954) மற்றும் அடுத்த வீட்டுப் பெண் (1960)-அஞ்சலிதேவி, எல்லாம் இன்பமயம் (1955)- இராகினி, கதாநாயகி (1955)-பத்மினி, கோமதியின் காதலன் (1955)-சாவித்திரி.

* TR இராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" [https://www.youtube.com/watch?v=Q0LWhfJlyi8] என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தம் திரைப்பயணத்தைத் துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக MN நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே VN ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் AV மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் AT கிருஷ்ணசாமி).

* கதாநாயகன் என்றால் அழகாக, ஆடத்தெரிந்தவராக, வாள்வீசும் வீராதி வீரராக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உடைத்து, சபாபதி (1941) படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தார் TRR. இப்படத்திற்காக இவருக்கு 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப் படமாகி இவருக்குப் பெரும் புகழ் தந்தது. இவர் சொந்தக் குரலில் 5 பாடல்களை இப்படத்தில் பாடியுள்ளார். மொத்தம் 32,000 ரூபாய் தொகையில் தயாரிக்கப்பட்டது சபாபதி படம்.

* வாழ்க்கை (1949) படம் நாயகனுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் நல்ல வாழ்க்கையைத் தந்த படம் என்கிறார் AVM செட்டியார். "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்... டடடா டடடா டாடாடா" என்ற பாடல் [https://www.youtube.com/watch?v=kJtTl9sNDKc] படத்தில் வரும்போதெல்லம் தியேட்டரில் ஒரே சீழ்க்கை ஒலிதான். TRRரே நாயகனாக நடிக்க, இப்படம் தெலுங்கில் ஜீவிதம் என்ற பெயரில் தயாரானது.

MGR, TRR, TKR 
* MG இராமச்சந்திரனுடனும், TK இராமச்சந்திரனுடனும் TR இராமச்சந்திரன் சேர்ந்து நடித்துள்ளார். MG இராமச்சந்திரனுடன் பாக்தாத் திருடன், அன்பே வா ஆகிய படங்களிலும், TK இராமச்சந்திரனுடன் நாம் இருவர், சிங்காரி, மாப்பிள்ளை போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

* பாக்தாத் திருடன் (1960) படத்தில் வில்லனிடமிருந்து தப்பிக்க, சிலைகளோடு ஒரு சிலையாக அசைவற்று TRR நிற்பது சிடுமூஞ்சிகளையும் சிரிக்கவைக்கும். வாழ்க்கை படத்தில் TRRருக்கு ஜோடியாக நடித்த வைஜயந்திமாலா, பாக்தாத் திருடன் படத்தில் MGRருக்கு ஜோடி. TRR. இப்படத்தில் MGRரின் தோழனாக நடித்திருந்தார்.

* இவர் சைவ உணவுப் பிரியர். அன்பே வா (1966) படத்தில் கோழி மாமிசம் உண்பதாக ஒரு காட்சியில் இவர் நடிக்க வேண்டியிருந்தது. சைவ உணவு சாப்பிடுபவரிடம் கோழி மாமிசத்தைக் கொடுக்க முடியுமா... இயக்குநர் ஒரு யோசனையை மேற்கொண்டார். கோழி மாமிசம் மாதிரியே ஒரு கேக் செய்து, அதை TRR சாப்பிடுவதாகக் காட்சி படமாக்கப்பட்டது.

சிவாஜியுடன் TRR.
* சிவாஜி கணேசனுடன் மனிதனும் மிருகமும், கள்வனின் காதலி, மணமகன் தேவை, அவள் யார், படிக்காத மேதை, தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

* அவள் யார் படத்தில் சிவாஜியின் அக்காள் மகன் "அப்பாவி பூபதி"யாக TRR நடித்துள்ளார். கள்வனின் காதலி படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் இராமச்சந்திரன்.

* கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் TRR நாயகனாகவும் சிவாஜி கணேசன் இரண்டாம் நாயகனாகவும், அடுத்த வீட்டுப் பெண் படத்தில் TRR நாயகனாகவும் KA தங்கவேலு இரண்டாம் நாயகனாகவும், ராஜி என் கண்மணி படத்தில் TRR நாயகனாகவும் ஸ்ரீராம் இரண்டாம் நாயகனாகவும், இப்படி முன்னணி நடிகர்களுடனேயே முன்னணியில் நடித்தவர் TRR.

* எட்டி காண்டர் என்ற அமெரிக்க நடிகரைப் போன்ற தோற்றமும் பெரிய கண்களும் கொண்ட இவர் "தமிழ் சினிமாவின் எட்டி காண்டர்" என்றழைக்கப்பட்டார். கர்வமில்லாமல் அனைவரிடமும் கனிவுடன் பழகக் கூடியவர் இவர்.

* சிரிப்பு நடிகரான இவர் இரு படங்களில் சோகமாகவும் கோபமாகவும் நடித்துள்ளார். சோகமாக ராஜி என் கண்மணி (1954) படத்திலும், கோபமாக சாது மிரண்டால் (1966) படத்திலும் நடித்துள்ளார். ராஜி என் கண்மணி படத்தில் பார்வையற்ற காதலிக்குப் பார்வை கிடைப்பதற்காக இடர்களுடன் சமராடும் பாத்திரத்திலும், சாது மிரண்டால் படத்தில் கொலை செய்யுமளவிற்கு மிரண்ட சாதுவாகவும் நடித்தார் இராமச்சந்திரன்.

* ஸ்ரீவள்ளி (1945) படத்தில் வள்ளியின் சகோதரன் கிள்ளியாக TRRரும், கிள்ளியின் காதலி மெல்லியாக G சௌதாமினியும் நடித்துள்ளனர். 1945ல் இப்படம் 2 இலட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு, பத்து மடங்கு இலாபம் தந்தது.

* இவர் திருவள்ளுவர் படத்தில் சோணாசலம் என்ற பாத்திரத்திலும், கண்ணகி படத்தில் சாஸ்திரி வேடத்திலும் நடித்துள்ளார். NT இராமாராவ் நடித்த மருமகள் படத்தில், பெண்களை ஏமாற்றும் "சினிமா டைரக்டர் சூரி" என்ற வில்லன் வேடத்தில் நடித்து, தம் வில்லன் வேடக்` குறையையும் நிறைவாக்கிக் கொண்டார் TRR.

* இளம் வயதில் இவர் படிப்பில் நாட்டமில்லாதவராக இருந்தாலும், பின்பு சிறந்த வாசகராக இருந்து, இரு நாவல்களைப் படமாக்கியுள்ளார். அவ்வகையில் தம்மைக் கவர்ந்த நாவல்களான கல்கியின் பொய்மான் கரடு கதையைப் பொன்வயல் (1954) என்ற படமாகவும், எழுத்தாளர் தேவனின் தொடர்கதையை கோமதியின் காதலன் (1955) என்ற படமாகவும் தயாரித்தார் இவர். படத் தயாரிப்பில் படாத தொல்லைகள் பட்டதாகச் சொல்கிறார் இவர்.

* பல படங்களில் இவர் சொந்தக் குரலில் பாடியுள்ளார். (உன்கண் உன்னை ஏமாற்றினால்-வாழ்க்கை https://www.youtube.com/watch?v=1fILOoWzs7Q, கண்களும் கவிபாடுதே-அடுத்த வீட்டுப் பெண் https://www.youtube.com/watch?v=s0GEAUaj8mg) மற்றும், AM இராஜா, சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களும் இவருக்குப் பின்னணி பாடியுள்ளார்கள்.

* இராமச்சந்திரன் நடித்த சபாபதி (1941), பூம்பாவை (1944), விகடயோகி (1946), நாம் இருவர் (1947), வாழ்க்கை (1949), சம்சாரம் (1951), சிங்காரி (1951), கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954), அடுத்த வீட்டுப் பெண் (1960) ஆகிய படங்கள் 100 நாட்களுக்குத் திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாக விளங்கின. 52 வாரங்களுக்கு (ஓராண்டு) திரையிடப்பட்ட வெற்றிப் படமாக ஸ்ரீவள்ளி (1945) விளங்குகிறது. சென்னை சினிமா இரசிகர்கள் சங்கம் வழங்கிய 1949ம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான விருதை வாழ்க்கை படம் பெற்றது.

* 1965ல் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

* படங்களில் வாய்ப்பற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள அவர் மகள் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். அப்பொழுது அமெரிக்காவிலேயே 30 நவம்பர் 1990ல் இவர் இயற்கை எய்தினார்.

தகவல் திரட்டு-சிவ.குகன்

படங்கள்: ஞானம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில், ரங்காராவ்-இரங்கம்மாள் தம்பதியருக்கு 9, ஜனவரி 1920ம் ஆண்டு பிறந்தார் TR இராமச்சந்திரன். இளம் வயதிலேயே இவரின் தாயார் இறந்து விட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். இருப்பினும், தந்தை மகனை நன்கு கவனித்துக் கொண்டார். மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இராமச்சந்திரனை, அவர் தந்தை குளித்தலையிலுள்ள பள்ளியில் சேர்த்தார். 15 வயதாகியும் 5ம் வகுப்பைத் தாண்டவில்லை TRR.

படிப்பில் நாட்டமில்லாத இவர் நாடகங்களில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். மதுரையில் ஜகந்நாத ஐயர் நடத்தி வந்த “பாலமோகன ரஞ்சித சங்கீத சபா” கம்பெனியில் சேர்ந்து நடித்தார். அப்பொழுது இந்த கம்பெனியில் இசையமைப்பாளர் SV வெங்கட்ராமன், MR இராதா, TS பாலையா, TR மகாலிங்கம் ஆகியோர் சேர்ந்திருந்தார்கள். பின்பு SV வெங்கட்ராமன் தனியாக நாடக கம்பெனி தொடங்கி குறிஞ்சிப்பாடியில் நடத்தியபோது, அந்த கம்பெனியில் சேர்ந்தார் இராமச்சந்திரன்.
காதலித்து 1948ல் கலப்புமணம் செய்து கொண்ட இவருக்கு வசந்தி, ஜெயந்தி என்ற இரு மகள்களும் பேரப்பிள்ளைகளும் உண்டு. புகைப்படக்கலையில் இவர் ஆர்வமுள்ளவராக இருந்தார

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...