Wednesday, August 10, 2016

தொடரும் மணல் கொள்ளை...

இன்றைய (10/8/2016)தினமணியில் தலையங்கப் பக்கத்தில் "மணல் கொள்ளை ''என்ற தலைப்பில் வெளி வந்துள்ள எனது பத்தி;

தொடரும் மணல் கொள்ளை
 ---------------------------------
- வழக்கறிஞர் கே.எஸ்இராதாகிருஷ்ணன்

ஒரு காலத்தில் கள்ளக் கடத்தல் என்பார்கள்.  1960களில் ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்தி வந்து கடற்கரைப் பகுதிகளில் திருட்டுத்தனமாக விற்பது உண்டு. இன்றைக்கு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க இயற்கையின் அருட்கொடையான பல்லாயிரம் ஆண்டுகளாக சிறிது சிறிதாக ஆற்றுப்படுகையில் திரண்டுள்ள மணலை தமிழகத்தில் கபளீகரம் செய்து தனிமனிதன் சுயநலத்திற்காக கொள்ளையடிக்கப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் மணல் வளம் அதிகமாக இருந்தாலும் அங்கு மணல் அள்ள முடியாது. தமிழகத்திலிருந்து செல்கின்ற மணலை கேரளாவில் கட்டடப் பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். உணவு விடுதியில் பண்டங்களின் விலையை பலகையில் எழுதி வைப்பது போல கேரளாவில் மணல் விற்பனை நிலையங்களில் தாமிரபரணி மணல், கரூர் மணல், பாலாறு மணல் என தனித் தனியாக விலைகளை எழுதி வைத்துள்ளனர். கேரளா மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம், மும்பை வரை சூறையாடிய மணல் லாரிகளில் நதிநீர் வடிய ஏற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்தால் மிகவும் வேதனைப்படுத்துகிறது. கப்பலில் மாலத் தீவுக்கும் மணல் கடத்தப்படுகின்றது.
 
தனிப்பட்ட நபர்களின் நலனுக்காக நாட்டின் செல்வத்தையே கொள்ளையடிக்கின்றனர். எவ்வளவோ போராட்டங்கள். நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்பதுதான் கொடுமை. தற்போது கரூர் அருகே காவிரி ஆற்றின் தவிட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி போன்ற இடங்களில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ள கிளம்பிவிட்டனர். இதற்காக காவிரி ஆற்றுக்குள்ளே 4 கிலோ மீட்டர் அளவுக்கு பாதை அமைத்து மணல் கொண்டு செல்ல பணிகளை தீவிரமாக அமைத்துள்ளனர்.
 
தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில், கருர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம் கூட மணல் குவாரியால் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற நிலைமை.  தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதால் மணல் அள்ளிச் செல்லும் லாரிகளால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் கரூர் அருகே உள்ள கட்டிப்பாளையம், கொம்புப்பாளையம், தவிட்டுப்பாளையம், புகழூர், வேலாயுதம்பாளையம், தளவாய்பாளையம், செம்பாடபாளையம் போன்ற பகுதி மக்கள் இதை தடுத்து நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  இங்கு மணல் கொள்ளையை தடுத்து காவிரியைக் காப்போம் என்ற இயக்கத்தை அவ்வட்டார மக்களே நடத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்க போராட்டத்தை துவக்கிவிட்டனர்.
 
கரூர் அருகே இப்பகுதியில் மணல் அள்ளினால் பல்வேறுப் பாதிப்புக்கள் ஏற்படும். ஏற்கனவே சாயப்பட்டறை கழிவு நீரும் கலக்கின்றது. இப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வருமாறு:
 
 
கரூர் அருகே,புதிய மணல் குவாரி அமைய இருக்கும் இடத்தின் அருகில்தான் திருப்பூர் சாயப்பட்டரை கழிவுநீர் கலந்து கடும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியதால் செத்த நதி என அறிவிக்கப்பட்ட நொய்யல் ஆறு காவிரியில் கலக்கிறது.  இதன் நச்சுத்தன்மை காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஊர்களுக்கும்,  இங்கு இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெரும் அனைத்து ஊருக்கும் பரவாமல் இருக்க இதுவரை இங்குள்ள மணல்தான் வடிகட்டியாக இருந்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கிறது.                                                              
 
மணல்குவாரி  அமைந்து இயங்க தொடங்கினால், நச்சுத்தன்மை கொண்ட நீர் சுத்திகரிக்க வழியின்றி காவிரி ஆற்றில் நொய்யல் ஆற்றின் நச்சுத்தன்மை கலக்கும். ஆற்றின் இரு கரையிலும் 30 கிலோ மீட்டர் தூரம் பாதிப்பு ஏற்பட்டு  கரூர், நாமக்கல் மாவட்டம் முழுக்க  நிலத்தடி நீர் நச்சுத்தன்மையாகும். மக்களின் வாழ்வாதாரமும்,  நீரேற்றுப் பாசனம் மூலம் விவசாயம் செய்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
 
ஆண்டு முழுக்க வந்து காவிரியில் கலக்கும் இந்த நச்சுத்தன்மை கொண்ட நீரால் கரையில் உள்ள ஊர்களுக்கும்,  காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  குடிநீர் பெரும் அனைத்து ஊர் மக்களும் பாதிக்கப்படும்.
 
காவிரியில் கலக்கும் இந்த நச்சுத்தன்மை கொண்ட நொய்யல் நீரை அருந்தும் நமக்கு  புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, ஆண்-பெண்களுக்கு மலட்டுத்தன்மையால் நமது சந்ததி இழப்பது  உட்பட கடுமையான நோய்கள் மணல்குவாரிகளால் எதிர்வரும் பத்தாண்டுகளில் ஏற்படும்.
 
ஆண்டு முழுக்க வந்து காவிரியில் கலக்கும் இந்த நச்சுத்தன்மை கொண்ட நொய்யல் நச்சுத்தன்மை கொண்ட நீர்  ஆற்றுமணலால் சுத்திகரிக்க வழியின்றி,  திருச்சி-தஞ்சை மாவட்டத்திற்க்கும் செல்லும்.  இதனால் திருச்சி-தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  குடிநீர்  பெற்று அருந்தும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மக்களும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
 
ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும்  நட்டுப்  எல்லையை வரையறுத்து பிரித்துக் காட்ட வேண்டும் என்று சொன்னாலும் அப்படி எங்கும் இதுவரை அமைத்து மணல்குவாரிகள் செயல்பட்டது இல்லை. ஆறு முழுக்கவே களிமண் மட்டம் வரை மணல் அள்ளுவது என்பதுதான் இங்கும் நடக்கும்.
 
ஏற்கனவே காவிரி ஆற்றில் இருந்து வாங்கல்  வாய்க்கால் மூலம் ஆண்டு முழுக்க பாசன வசதி பெறும் வாங்கல் வாய்க்காலின் ரெகுலேட்டர் பகுதி, ஏற்கனவே ஆற்றுமணல் அள்ளப்பட்டதால் ரெகுலேட்டர் மட்டத்திலிருந்து காவேரி ஆற்று மட்டம் ஐந்து அடி கீழே ஆழமான பள்ளத்தில் உள்ளது.                                                                  
 
இதனால் பல நூற்றாண்டு காலமாக பாசனம் பெற்று வரும் வாங்கல் வாய்க்காலில், தற்போது  காவேரி  ஆற்றில் வெள்ளம் வரும் போது மட்டும்தான் பாசனம் நடைபெற்று வருகிறது. மணல்குவாரி  அமைத்து இயங்க தொடங்கினால் களிமண் மட்டம் வரை மணல் அள்ளப்பட்டு விடும்.  இதனால் பாரம்பரிய வாங்கல் வாய்க்காலின் பாசனம் முற்றாக அழியும்.
 
குவாரி அமையும் பகுதிக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலமும் (NH-7), புதிதாக கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலமும்(NH-7), ஆற்றில் நீர் ஓடும் அதன் தூண்களின்  அடிதளத்திற்க்கு (பவுண்ட்டேசன்) கீழே 5 அடி முதல் 10 அடி வரை மணல் அரிக்கப்பட்டு உள்ளது. மணல்குவாரி  அமைத்து இயங்க தொடங்கினால் பாலம் முழுக்க மணல் அரிக்கப்பட்டு சென்று பாலம் உடையும் நிலை ஏற்படும்.
 
கர்நாடக அரசின் அடாவடியால்,  காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பல்வேறு அணைகள் கட்டப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக  நீர்வரத்து முறையாக இல்லாததால் ஆற்றில் மணல் வரத்தும் என்பதே இல்லாமல் உள்ளது. அப்படியே எப்போதாவது மணல் வந்தாலும் குவாரி அமையும் பகுதிக்கு 10 கிலோ மீட்டர் முன்பு உள்ள ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில்  அங்கே மணல் தேங்கும்.                          
 
எனவே இங்கு புகளூர் பகுதியில் மணல்குவாரி  அமைத்து மணல் அள்ளப்பட்டால் இப்பகுதி அழிவது என்பது சர்வ நிச்சயம்.   இங்கு அமைய இருக்கும்மணல்குவாரிக்கு முன்புறம் திருச்சி முக்கொம்பு வரை முழுக்க  ஆற்றில் மணல் அள்ளப்பட்டு விட்டதால் வரும் மணல் பெரும்பாலும் முன்புறம் ஆற்றில் தோண்டப்பட்டுள்ள  குழிகளுக்கு அடித்து செல்லப்படும்.  இப்பகுதியில்  மீண்டும் மணல் சேருவது என்பது நூறு ஆண்டுகள் ஆனாலும் நடக்காது. இதனால் நமது தலைமுறையே இங்கு வாழ முடியாது.
 
ஆற்றில் ஓடிவரும் நீரை மணல்தான் பிடித்து வைக்கிறது.  கட்டாந்தரை தெரியும் அளவிற்கு  மணல்குவாரிகள்  மணலை அள்ளுவதுதான் நடைமுறையாக உள்ளது. இங்கும் அதுதான் நடக்கும். களிமண் வரும் வரையிலும் மணல் சுரண்டப்பட்டுவிட்டால், அந்த ஆற்றலை ஆறு இழந்துவிடும்.  அதன் பிறகு, ஆறும் நமதுவீட்டு குழாயும் ஏறத்தாழ ஒன்றுதான். வீட்டுக் குழாய்கள் திறந்தவுடன் தண்ணீரைச் சடசடவெனக் கொட்டித் தீர்ப்பது போல, ஓடிவரும் நீரை விரைவாகக் கடலுக்குள்கொண்டு சேர்த்துவிடும். நமது பகுதியில் வெறும்  உயிரற்ற தண்ணீர் கடத்தியாக  மட்டுமே (ஒரு வீட்டுக் குழாய் போல) நமது காவிரி ஆறு மாறிவிடும்.
 
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலத்தை (NH-7) ஒட்டியே ஆற்றிற்குள் இறங்கவும், புதிதாக கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை (NH-7) ஒட்டியே ஆற்றில் இருந்து மேலே ஏறவும் ஆற்றுக்குள் நிரந்தரமான சாலைகளை மணல்குவாரிக் காரர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். ”மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது” என்ற விதியை மீறுவதுடன், குவாரியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் (NH-7)  தொடக்கதில் இருபக்கமும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பாதை பிரிவதால் மட்டும் அந்த இடத்தில் ஆண்டு ஒன்றுக்கு பல்வேறு விபத்துகளால் நூற்றுக்கும்(100 பேர்) மேற்பட்டோர் இறந்து வருகின்றனர். இனி அதிவேகமாக வரும் விபத்துக்கள் மூலம் ஆயிரக்கணக்கில் மக்கள் இறப்பது என்பது நடக்கும்.
 
நெடுஞ்சாலையை ஒட்டி மணல் லாரிகள் வர பாதை அமைக்க கூடாது என்ற விதி  அப்படியே அப்படியே மீறப்படுகிறது.
 
ஏற்கனவே ஆற்றின் கரையில் இருந்து பாதி ஆற்றில் களிமண் மட்டம் வரை மணல் அள்ளப்பட்டு விட்டதால் அங்கு நீரோட்டம் பாதிக்கப்பட்டு அதனால் ஆற்றின் கரைகள், அக்கரைகளையொட்டி வளர்ந்திருக்கும் தாவர வகைகள், ஆற்றினுள் வளர்ந்து நிற்கும் புல் வகைகள், ஆற்று நீரில் கண்ணுக்குத்தெரியாமல் இருந்துவரும் மைக்ரோப்ஸ் (microbes) எனப்படும் நுண்ணுயிரிகள், அவற்றை உண்டு வாழும் மீன்கள் என இவையெல்லாம் அழிந்து காவிரி  ஆற்றின் உயிரோட்டமே அழியும்.
 
“ஆறு உற்பத்தியாகும் இடம் தொடங்கி, அது சமவெளிப் பகுதியில் பாய்ந்து கடலில் கலக்கும் வரையிலும் அதன் இரு கரைகளிலும் வளர்ந்து நிற்கும் தாவரவகைகள் ஆற்றின் நீரோட்டத்திற்கு அவசியமானவை.  அத்தாவரங்கள் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்காலங்களில் தமது தேவைக்கும் அதிகமான நீரை உறிஞ்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் அரணாக விளங்குகின்றன.  கோடைக் காலங்களில் தம்மிடமிருந்து நீரைவெளியேற்றுவதன் மூலம் ஆறு வறண்டு போய்விடாமல் காப்பாற்றுகின்றன.
 
ஆற்றுப் படுகையையொட்டியுள்ள மண்ணின் தன்மைக்கேற்ப இயற்கையாக வளரும் தாவர இனங்களுக்கு மட்டும்தான் ஆற்றின் நீரோட்டத்திற்கு உதவும் இந்த ஆற்றல்உண்டு. இந்த இயற்கை தாவரங்கள் அழிக்கப்பட்டால் அல்லது நதிக்கு அந்நியமான தாவர இனங்கள் அதன் கரைகளில் வளர்க்கப்பட்டால் இந்த தொடர்சங்கிலிவிளைவுகள் அற்றுப் போய்விடும். ஏற்கனவே நமது ஊரில் ஆற்றில் பல இடங்களில் களிமண் மட்டம் வரை மணல் அள்ளப்பட்டு விட்டதால் எங்கு பார்த்தாலும் சீமைக் கருவேலம் மரமாக மட்டுமே உள்ளது.
 
மணல்குவாரியால்  ஆறு முழுக்க ஆற்றுமணல் தரைமட்டம் வரை அள்ளப்படும்.  ஆற்று மணலை அடியோடு அள்ளுவதால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மட்டும் பாதிக்கப்படுவதோடு, மணலை அள்ளும்பொழுது ஆற்றின் கரைகளுக்குச் சேதம் ஏற்படும். ஆற்றின் கரைகள் பலவீனப்படும்பொழுது, ஆற்றின்கொள்ளளவு குறையும். அதன் காரணமாகவும் மணல் அள்ளும் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடும் பாதிப்படையும.
 
காவேரி ஆற்றில்- புகளூர், நடையனுர், தோட்டக்குறிச்சி, கடம்பன்குறிச்சி ஆகிய இடங்களில்  புதிதாக மணல் குவாரி அமைக்க அனுமதி கொடுத்து அதற்கான வேலைகள் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வருகிறோம்.
காவிரி ஆற்றில் ஏற்கனவே மணல் குவாரி இயங்கிய நமது ஊர் உட்பட தமிழகத்தின் பல இடங்களில்   அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு மணல்அள்ளப்பட்டுள்ளது. அதன் முழு வருமானம் அரசு கஜானாவிற்கு போகவில்லை.
 
நம்மை வாழவைக்கும் காவிரி ஆறு, காவிரி அன்னை மணல் கொள்ளையால் நம் கண் முன்னால்   அழிக்கப்படுவதை  நாம் வேடிக்கை பார்த்தால் காவிரி ஆறு செத்து விடாதா?
 
தமிழகத்தின் 33 ஆற்று பகுதிகளிலும் மணல் கொள்ளை நடக்கிறது எனக் கூறி,   இதை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவுகளை தமிழக அரசு மதித்துப் பின்பற்றவில்லை.  தமிழகம் முழுக்க நடந்த #மணல்கொள்ளையை சகாயம்ஆய்வு செய்ய வேண்டும் என டெல்லி தலைமை   நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை கொள்ளையை ஆய்வு செய்ய உ.சகாயம்அனுமதிக்காமலேயே உள்ளது.  
 
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கை மூடக் கோரி தமிழகம் முழுவதும் பல  போராட்டங்கள் நடக்கிறது. அங்கு வந்து யாரும் மக்களுக்கு பணம் கொடுப்பதோ,மிரட்டுவதோ இல்லை. ஆனால்,  தமிழக அரசின் பொதுப்பணித்துறை நடத்தும்  மணல்குவாரியை மூடக்கோரி போராடினால் மட்டும் ஏன் மணல்குவாரி அமைந்தபகுதி மக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்?  பணத்திற்கு பணிய  மறுப்பவர்கள் ஏன் படுகொலை செய்யப்  படுகிறார்கள்?  காவல்துறை  ஏன் பொய்வழக்கு  போட்டுமக்களை அச்சுறுத்துகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
45 ஆறுகள் ஓடும் கேரளாவில்  ஆற்று மணல் அள்ள நிரந்தர தடை உள்ளது. அங்கு ஒரு கைப்பிடி மணல் அள்ளமுடியாது. தமிழக ஆற்று மணல்தான்  அங்கு கடத்தப்படுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
 
சுற்றுச்சூழல் ஆணையம் இப்பிரச்சினைக் குறித்து, பிறப்பித்த உத்தரவுகளும் வெறும் எழுத்துக்களிலேயே உள்ளன. ஆற்றுப் படுகையில் மூன்று அடி ஆழம் (ஒரு மீட்டர்) வரை மட்டுமே தோண்டி  மணலை அள்ள வேண்டும்; மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது;  மணலை அள்ளுவதற்கு மனித சக்தியைத் தவிர,  வேறு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்றுத்தான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.-ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி  தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும்  நட்டு எல்லையை வரையறுத்துப் பிரித்துக் காட்ட வேண்டும். மணலை அள்ளும்பொழுது ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. ஆற்றின் இரு கரைகளிலும், கரைகளையொட்டியுள்ள பகுதிகளிலும் காணப்படும்தாவரங்களைச் சேதப்படுத்தக்கூடாது. கழிவு மணலை ஆற்றில் கொட்டக்கூடாது ஆற்றின் நீரோட்டப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது. மணலை அள்ளும்போது நீர் ஊறினால், அந்தப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.மணல் அள்ளும் போக்கில் ஆற்றுக்குள் குளம் போன்ற பள்ளங்களை ஏற்படுத்தக் கூடாது.  
 
காலை 7 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே  மணல் எடுக்க வேண்டும் ஞாயிறு குவாரி இயங்க கூடாது . மணல் குவாரியால்  உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது. மேலும், மணல் அள்ளிய விபரங்கள் அடங்கிய பதிவேடு, புகார் பதிவேடு, தாசில்தார் அடங்கிய ஆய்வுக்குழு வாரம் ஒரு முறை ஆய்வுசெய்த விபரப் பதிவேடுஅனைத்தும் மணல் அள்ளும் ஆற்றின்  கரையில் வைத்திருக்க வேண்டும்” என உத்தரவிட்டு உள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் எங்காவது ஓரிடத்தில் இதை இதுவரை நடைமுறைபடுத்தி உள்ளார்களா? இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.  விதிகளை காட்டிமக்களை முட்டாளாக நினைத்து ஏமாற்றும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை நாம் தடுக்காவிட்டால் யார் தடுப்பார்கள்? காவிரி ஆற்றை  யார் காப்பாற்றுவது? ஒரு செ.மீ மணல் உருவாக 100 ஆண்டுகள் ஆகும். காவிரி ஆற்றில் ஏற்கனவே இயங்கிய மணல்குவாரி  மீண்டும் பழைய நிலைக்கு வர 10 தலைமுறைகளாகும்.
 
இவ்வாறு தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இதை எதிர்த்து அவ்வட்டார மக்கள் போராடினாலும் முழுமையாக தடுக்க முடியவில்லையே என்று வேதனைதான் ஏற்படுகிறது.  தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை எதிர்த்து போராடிய பல போராட்டங்கள். அவற்றில் சில....
 
* பாலாற்றில் அனுமதி  கொடுக்கப்பட்ட சங்கரன்பாடி ஆற்று மணல் குவாரியை  இயங்காவிடால் தடுத்து நிறுத்தி  புதிய வரலாற்றை படைத்து வரும் வேலூர் - களத்தூர்  கிராம மக்களின் மகத்தான போராட்டம்.    
 
• காவிரி கொள்ளிடத்தில் ஆற்று மணல் கொள்ளையர்களை விரட்டியடித்த திருச்சி,  இலால்குடி, அன்பில், கூகுர்  சுற்றுவட்டார கிராம மக்களின் வீரம் செறிந்தபோராட்டம்
 
• தாமிரபரணி - திருவைகுண்டம் அணையை தூர்வாருகிறோம் என்ற பெயரில் நடக்கும் மணல்கொள்ளையை பல்வேறு கிராம மக்கள் இணைந்து மறியல்,முற்றுகை என போராடி  தடுத்து நிறுத்தி உள்ளார்கள்
 
• கடலூர் - கார்மாங்குடி மணல் குவாரிக்கு எதிராக வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தோடு  பல கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆற்றிலேயே இரவு முழுவதும்முற்றுகையிட்டு போராடி,  மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
 
• மணிமுத்தாற்றில் பரவளூர் மக்கள் மணல் குவாரிக்கு எதிராக போராடி நிறுத்தியிருக்கிறார்கள்.
 
• வைப்பாறில் மணல் கொள்ளையை எதிர்த்து விளாத்திக்குளம் அருகே நடத்திய போராட்டங்கள்.
 
• பாலாறு, கொள்ளிடம், தென்பெண்ணை, தாமிரபரணி,காவிரி  என மணல் குவாரியால் தமிழகம் முழுவதும் நீராதாரத்தை இழக்கும், விவசாயம் பாதித்தமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
 
இவ்வளவு போராட்டக்களங்கள் நடந்தும் வெட்கமில்லாமல் மணல் கொள்ளையர்கள் கரூர் அருகே காவிரித் தாயின் மடியில் கை வைக்க தயாராகிவிட்டார்கள். இதை தடுக்கவேண்டிய பொறுப்பு ஆளவந்தவர்களின் கையில் உள்ளது. மணல் கபளீகரத்தில் மட்டும் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்?

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...