உயிர்மை இந்த மாத (ஆகஸ்ட் 2016) இதழில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது குறித்தும் அது தொடர்பாக நடந்த சர்வஜன வாக்கெடுப்பு பற்றியும் எனது பத்தி வெளிவந்துள்ளது -
பிரெக்ஸிட்
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
rkkurunji@gmail.com
rkkurunji@gmail.com
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று
பொதுவாக்கெடுப்பு எடுத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில்
பொதுவாக்கெடுப்பு நேரடி ஜனநாயகமாகவும், மக்களின் உரிமையாகவும் உள்ளது. சில காலத்திற்கு முன்பு ஸ்காட்லாந்து
பிரிட்டனோடு இருக்கவேண்டும் என்று பொதுவாக்கெடுப்பு நடத்தியது அனைவரும் அறிந்த
செய்தியாகும். இந்த பிரெக்ஸிட் வாக்கெடுப்பு மூலமாக பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன்
பதவி விலகி, தெரெசா மாய் புதிய பிரதமராகிறார். ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதைத்
திரும்பப் பெறக் கோரி திரும்பவும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பிரிட்டிஷ்
மக்களும்,
ஆயிரம் பாரிஸ்டர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் திரும்பவும்
மறுவாக்கெடுப்பு நடக்க வாய்ப்பில்லை.
பிரெக்ஸிட்டால் பிரிட்டன் பவுண்டு விலை சரிந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்கள் லண்டனில் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்ற கருத்து நிலவுகிறது.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் பிரிட்டனிலிருந்து இறக்குமதி
செய்யப்படும் பொருட்கள் 25 சதவீதம் குறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் பிரிட்டனோடு
இருக்கும் அயர்லாந்தும், ஸ்காட்லாந்தும் பிரிட்டனிலிருந்து வெளியேறும். ஸ்காட்லாந்து ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றது. பிரிட்டன் மக்களும் ஐரோப்பிய
ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது சரியான தீர்வல்ல என கவலையிலும் உள்ளனர். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தொழில்நுட்ப, பருவநிலை போன்ற காரணங்களால் அருகே உள்ள நாடுகளோடு சேர்ந்து இணைந்திருந்தால்
எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது என்று பிரிட்டனிலேயே கருத்தை
உருவாக்குகின்றனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் துயரங்களை சரி செய்ய உருவான ஐரோப்பிய ஒன்றியம், உலக அமைதி, ஜனநாயகம், வளர்ச்சி, வளங்களைக் காப்பது
என்ற அடிப்படையில் ஒரு ஒருமைப்பாட்டோடு, ஒரு திக்கை நோக்கை பயணிக்கும்போது பிரெக்ஸிட் ஒரு தடைக்கல்லாகிவிட்டது என்று
ஐரோப்பாவில் கருத்து நிலவுகின்றது.
ஐரோப்பிய யூனியனை அடுத்து இத்தாலி பெரும் பொருளாதார கஷ்டத்தில் கிரேக்கத்தைப்
போல் உள்ளாகி உள்ளது. பிரான்ஸும், ஜெர்மனியும் ஐரோப்பிய யூனியனில் வலுவான எதிர்காலத்தில் இருப்பார்களா இல்லையா
என்பதும் ஒருபக்கம் விவாதம் நடக்கின்றது.
பெரு மூலதனத்தின் கர்த்தாக்கள், வங்கிகள் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும்.
இவ்வாறு பலவிதமான குழப்பங்கள். இவை உலக அரசியலையும், உலக பொருளாதாரத்தையும்
பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் ஏற்படும் தாக்கம் எதிர்காலத்தில் எப்படி
இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை. 52 சதவீத மக்கள் பொதுவாக்கெடுப்பில்
வெளியேறவேண்டும் என்று பிரிட்டனில் வாக்களித்தனர். இதனால் 28 நாடுகள் அடங்கிய
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது, இன்றைய தாராளமய கட்டமைப்புக்கு ஒரு பின்னடைவாகும். யூரோ என்ற பொது நாணயத்தை ஐரோப்பிய ஒன்றியம்
பின்பற்றுவதால் உறுப்பு நாடுகளுக்கென்று சுயேட்சையான பணக் கொள்கையும், விசா முடிவுகளும் கிடையாது.
சந்தை நிலவரத்தை முடிவு செய்வதெல்லாம் அதிகார மையம் என்ற ஐரோப்பிய ஒன்றியம்.
உறுப்பு நாடுகளுடைய இறையாண்மையும், ஜனநாயகமும் இதனால் கேள்விக்குறியாகிவிட்டன என்பதும் ஒரு பக்கத்தில்
குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் 2008ல் சர்வதேச நிதி நெருக்கடியின் காரணமாக உறுப்பு
நாடுகளின் செலவுகளை கட்டுப்படுத்த ஒன்றியமே உத்தரவிட்டது. இது ஒரு நாட்டின் உள்
விவகாரத்தில் தலையீடு இருந்தாலும் ஒன்றியம் என்ற நிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய
பொறுப்பாகிவிட்டது உறுப்பு நாடுகளுக்கு.
உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் சமன்பாடான வளர்ச்சி, மக்கள் வாழ்வும்
இருக்கின்றதா என்பதும் கேள்விக்குறி.
கிரீஸில் என்ன ஏற்பட்டது? கடும் பொருளாதார நெருக்கடி, அங்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை, அரசு ஊழியர்களுக்கு ஊதியமும் சரியாக வழங்க முடியாத நிலைக்கு
தள்ளப்பட்டது. பிரஸ்ஸில்சை தலைநகராகக் கொண்ட
ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டும் கவனிக்காமல் பல்வேறு உறுப்பு
நாடுகளின் இறையாண்மையிலும், ஜனநாயகத்திலும் பிரஸ்ஸில்சிலிருந்து மூக்கை நுழைக்க நினைப்பது எந்த விதத்தில்
நியாயம்? இவ்வாறான நிலையில் பிரிட்டனில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு நிகழ்வுகள் உலக
அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நினைக்கின்றனர்.
==
பிரிட்டனில் தற்போது பொது வாக்கெடுப்பு நடந்ததற்கு ஒரு பின்னனி இருக்கிறது.
ஆளும் பழமைவாத கட்சிக்குள் (கன்சர்வேட்டிவ் கட்சி) எழுந்த கோஷ்டி மோதலை
தீர்ப்பதற்காக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதா அல்லது விலகுவதா என்று ஒரு புதிய
பிரச்சினையை முன்வைத்து பொதுவாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்தார். ஐரோப்பிய
யூனியனில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று பிரிட்டன் மக்கள் வாக்களிப்பார்கள் என
நம்பி இந்த பலப்பரீட்சையில் டேவிட் கேமரூன் இறங்கினார். ஆனால் அவரது கணிப்பு
தவறாகிவிட்டது. இதன் விளைவாக அவர் தனது பிரதமர் பதவியையே இழக்க நேரிட்டுள்ளது.
பிரிட்டனின் மற்றொரு பிரதான கட்சியான தொழிலாளர் கட்சியைப் பொறுத்தவரை
அக்கட்சியின் ஒரு கணிசமான பிரிவினர், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்றே பிரச்சாரம் செய்தனர்; வாக்களித்தனர்.
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டனின் டிராட்ஸ்கியிச கட்சிகளின் மற்றும் இதர கட்சிகள் உள்ளிட்ட
பிரிட்டன் இடது சாரிகளில் ஒரு பெரும் பகுதியினர், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்றே பிரச்சாரம்
செய்தனர். பிரிட்டனைப் பொறுத்தவரை இடதுசாரிகள் ஒரு பலவீனமான சக்தியே. இந்தப்
பின்னணியில், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது என்ற முழக்கத்தை தங்களது பிரச்சாரமாக
பிரிட்டனின் வலதுசாரி சக்திகளும் கையில் எடுத்துக்கொண்டு சென்றார்கள். ஆனால் அவர்கள்
அடிப்படையான பிரச்சனைகளை விட்டுவிட்டு ஐரோப்பாவின் இதர நாடுகளிலிருந்து
பிரிட்டனுக்கு பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உள்நாட்டில் பல
பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கினார்கள்.
ஐரோப்பிய யூனியன் விதிகளின்படி அதன் உறுப்பு நாடுகளிடையே மக்கள் சுதந்திரமாக
சென்று வர முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து
பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்து
வந்திருக்கிறார்கள். தங்களது நாடுகளில் வேலைவாய்ப்புகள் பறிபோன நிலையில், பிரிட்டனில்
மிகக்குறைந்த கூலிக்கு வேலை தேடி, பிழைப்புத் தேடி வந்து குவிகிறார்கள். இதன்விளைவாக பிரிட்டன் தொழிலாளர்
சந்தையில் தொழிலாளர்கள் மிகக்குறைந்த கூலிக்கு எளிதாக கிடைக்கிறார்கள் என்ற நிலைமை
ஏற்பட்டது. இதை பிரிட்டிஷ் பெருமுதலாளிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். பிரிட்டனில்
உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு வழங்குகிற
ஊதியங்களைவிட மிகமிகக்குறைவான கூலியை இவர்களுக்கு வழங்கினால் போதும் என்ற நிலை
ஏற்பட்டது. இது பிரிட்டிஷ் தொழிலாளர்களின் இருக்கும் வேலைவாய்ப்புகளையும்
பறித்தது. எண்ணற்ற பிரிட்டிஷ் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களாக வீதியில்
நிறுத்தப்பட்டார்கள்.
பிரிட்டன் சுதந்திரா கட்சி இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து
ஐரோப்பாவிலிருந்து வரும் தொழிலாளர்களால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரும் என்று
பிரிட்டனில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தொழிலாளர் கட்சிக்குள் அதன் தலைவர் ஜெர்மி
கோபினை நீக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பிரிட்டன் தொழிலாளர் கட்சி
படிப்படியாக வலதுசாரி நிலையை எடுத்துள்ளது. ரயில்வேயை மீண்டும் தேசியமயமாக்குவது, பொருளாதாரத்தின்
முக்கிய துறைகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது போன்ற திட்டங்களை
ஜெர்மி கோபின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இங்கிலாந்தில் ஜேம்ஸ் கோல்டுஸ்மித்தால் 1933ல் ரெஃபரெண்டம் கட்சி என்று
மக்களின் கருத்துக்களை முன்னெடுக்கும் வகையில் அரசியல் கட்சி துவக்கப்பட்டது.
அந்தக் கட்சியினுடைய தாக்கம்தான் இன்றைக்கு பிரிட்டனில் இயங்கும் யூகேஐபி கட்சி.
இந்த இயக்கம்தான் இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து இருக்கக் கூடாது
என்ற வலுவான பிரச்சாரத்தை நடத்தியது.
இப்படியான பின்னணியில் பிரெக்ஸிட் நடந்து முடிந்தன. இதனால் உலக நாடுகளுக்குள்ளேயே தாக்கங்களை உருவாக்கி
உள்ளது. ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரியுமா? இந்த பொதுவாக்கெடுப்பு ஓட்டுக்களுடைய வித்தியாசம் மிகக் குறைவே. இந்நிலையில்
பிரிட்டனில் உள்ள மக்கள் வலுவான ஒருசாரார் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலேயே
நீடிக்கவேண்டும் என்று விரும்பியுள்ளதை வாக்கெடுப்பு முடிவுகள் சொல்கின்றன. ரஷ்ய
நிதியமைச்சர் ஆன்டன் சில்வனோவ் கூட பிரெக்ஸிட் எதிர்மறை விளைவுகளை கொடுக்கும் என்ற
கருத்தை சொல்லியுள்ளார். டென்மார்க் பிரதமர் லோகோ ராஸ் முஷ்சேன், பிரிட்டனில் நடந்த
பொது வாக்கெடுப்பில் பல உண்மைகள் உள்ளடங்கியுள்ளன. அதை மறைக்க முடியாது.
டென்மார்க்கும் இந்த முடிவை விரும்பவில்லை என்ற கருத்தை சொல்லியுள்ளார். நார்வே
பிரதமர் எர்னாசோல்பெர்க், ஐரோப்பிய யூனியன் இதனால் சுருங்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக
சொல்லியுள்ளார். ஸ்பெயினில் பிரதமர் பொறுப்பில் இருக்கின்ற மரியானோ ரஜோய்
நெருக்கடியான நிலையில் ஐரோப்பிய யூனியன் செல்லவேண்டி உள்ளது என்ற கருத்தை
சொல்லியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள போலந்து மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்
என்று போலந்து நாடு அச்சம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் புதிய வரவுகளை குறித்து
திட்டமிட 2 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று பின்லாந்து அமைச்சர்
டிமோ சயானி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் பிரிட்டன் பிரிந்து செல்வதை
விரும்பவில்லை என்று தெளிவாகிறது.
இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கவேண்டும் என்று 62 சதவீத
மக்கள் வாக்களித்துள்ளனர். வட அயர்லாந்திலும் 55.8 சதவீத மக்கள்
வாக்களித்துள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்ததுதான் கிரேட் பிரிட்டன். பிரிட்டனைத் தவிர மற்ற
இணைந்த நாடுகள் ஐரோப்பிய யூனியனில் இருக்கவேண்டும் என்றுதான் விருப்பப்பட்டன. ஸ்காட்லாந்து, அயர்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்து போக வேண்டும் என்று தாக்கத்தில்
இருப்பது வேறு விஷயம். ஸ்காட்லாந்து 307 ஆண்டுகளாக பிரிட்டனின் அங்கமாக
இருக்கின்றது. கடந்த செப்டம்பர் 18ம் தேதி 2014ல் ஸ்காட்லாந்து பிரிந்துசெல்லும்
பொது வாக்கெடுப்பில் 86 சதவீத மக்கள் கலந்துகொண்ட வாக்கெடுப்பில் 55 சதவீதம் பேர்
பிரியவேண்டாம் என்று கருத்தைத் தெரிவித்தாலும் ஒரு பக்கத்தில் மனதளவில்
பிரியவேண்டும் என்ற மனப்பான்மை ஸ்காட்லாந்தில் உள்ளது. அந்த வாக்கெடுப்பின்போது
அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டனோடு இணைந்திருக்கவேண்டும் என்றுதான் தன் கருத்தை
வெளிப்படுத்தினார். தற்போது ஸ்காட்லாந்து
பிரிந்துசெல்ல வேண்டும் என்று மறுபடியும் குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன. அதைப்
பற்றிய பிரச்சினைகளை எழுத வேண்டும் என்றால் திசை மாறிவிடும்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது பல பன்னாட்டு அரசியல், பொருளாதாரம், நாடுகளுக்கிடையே உள்ள
உறவுகள்,
பல மாற்றங்கள் எதிர்காலத்தில் திகழலாம்.
பொதுவாக்கெடுப்பு பிரெக்ஸிட் ஒரு முடிவு கொடுத்துள்ளது. இந்த முடிவு
உறுதியானதா? மாற்றப்படுமா? அப்படி உறுதியானால் இதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதை
எதிர்காலம்தான் முடிவு செய்யும்.
பொருத்தமாக ஐரோப்பிய யூனியன் தலைவர் மார்ட்டின் டஸ்க், ஐரோப்பிய யூனியன்
தலைமையகம் பிரஸ்ஸில்சில் கருத்தைத் தெரிவிக்கும்போது பிரிட்டன் வெளியேறியதற்கான
எதிர்விளைவுகளை உடனே கணித்துவிட முடியாது. அதன் தாக்கம் எதிர்வினைகளும்
வெறித்தனமாக போய்விடக் கூடாது என்பதையும் சூசகமாகத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய
நாடாளுமன்றத் தலைவர் இதனால் சங்கிலித் தொடர் போன்ற விளைவுகள் ஏற்பட்டாலும், அதன் விளைவுகளை
சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று உறுதித் தெரிவித்தார். இந்தச் சூழலில் பிரெக்ஸிட் விளைவுகள், எதிர்விளைவுகள் யாவும்
எதிர்காலத்தில் தெரியவரும்.
டெயில் பீஸ்:
1. ஐரோப்பா ஒன்றியம்
1993 நவம்பர் 1ம் தேதி மாஸ்டிர்ச் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பா ஒன்றியம்
நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்து இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நடைமுறையில் 43
ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தாலும், 1995ல் ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் இந்த ஒன்றியத்தில் இணைந்தன. 2002ல் 12 உறுப்பு நாடுகளின்
பணங்களுக்கு பதிலாக யூரோ நாணயம் நடைமுறைக்கு வந்தது. பின் 15 நாடுகள் இணைந்து, இந்த ஒன்றியம்
விரிவடைந்தது. 2004ல் பல நாடுகள் சேர்ந்து முழுமைப் பெற்றது. மால்டா, சைப்ரஸ், ஸ்லோவேனியா, எஸ்தோனியா, போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11
நாடுகள் இணைந்தன. 2007 ஜனவரி 1ம் தேதி அன்று ருமேனியா, பல்கேரியா ஐரோப்பிய
யூனியனில் இணைந்தன. இறுதியாக இங்கிலாந்து உள்பட 28 நாடுகள் இணைந்திருந்தன. இந்த
ஒன்றியத்தின் நோக்கங்கள் ஐரோப்பிய குடியுரிமை, பணபரிவர்த்தனை, நாடுகளின் முன்னேற்றம், ஐரோப்பா பாதுகாப்பு என்பவையாகும்.
2. ஐரோப்பிய நாடாளுமன்றம்
ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு இந்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தேர்வு
செய்யப்பட்டு 1979ம் ஆண்டு முதல் மக்களாட்சி முறையில் ஐரோப்பிய நாடாளுமன்றம்
நடைபெறுகிறது. பிரான்ஸில் உள்ள
ஸ்ட்ராஸ்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இயங்குகிறது. 236 உறுப்பினர்கள், பதவி காலம் 5 ஆண்டுகள், வரவு செலவு கணக்குகள், பொதுவான சட்டங்கள், பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் விவாதங்கள், இதற்கான அமைச்சர்கள் என்ற கட்டமைப்போடு செயல்படுகிறது. இந்த அவைக்கு ஹெர்மன் வான் ராம்பே நிரந்தரத்
தலைவராக தலைமையேற்று வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகங்கள் அனைத்தும்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றன.
3. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்
லக்ஸம்பர்க்கில் 15 நீதிபதிகளைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்
செயல்படுகிறது. ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்படும் தாவாக்கள், சட்ட சிக்கல்களை
விசாரித்து தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு உறுப்பு நாடுகளை
கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment