"இராமானுச வைபவம்"
Ramanujar Vijayam
------------------------------------
இளையாழ்வார் பெரிய நம்பிகளை அடி பணிந்து "பஞ்ச ஸம்ஸ்காரம்" பெற்றார்.
அப்போது "ப்ரமாணம் எது? ப்ரமேயம்எது? ப்ரமாதா யார்?" என்று பெரிய நம்பிகளைக் கேட்க,
அவரும் "ப்ரமாணம் என்பது த்வயமே;
ப்ரமேயமாவது ஸ்ரீஹஸ்திகிரியின் மேலே திருவாழியுடன் எழுந்தருளியிருக்கும் தேவராஜப்பெருமாளே;
ப்ரமாதா என்பது நீர் (இளையாழ்வார்) தான் என்றார்."
பிற்காலத்திலே 74 சிம்மாதிபதிகளை நியமித்து "பெருமான் மீது ஆசை" உடையோர்க்கெல்லாம்
"பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்து, உயரிய இரகசிய அர்த்தங்களை அருளுங்கள்" என்ற இராமானுசர்,
தாமும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டதை உணருங்கள்.
பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திர உபதேசங்களையும் அருளிச்செய்த பெரிய நம்பிகளுடன் காஞ்சிக்கு திரும்பினார் இளையாழ்வார்.
எதிர்வந்த திருக்கச்சி நம்பிகளுடன் தேவப்பெருமாளை மூவரும் சேவித்து நிம்மதி அடைந்தனர்.
பெரிய நம்பிகளை அவரின் தர்ம பத்தினியுடன் தம் குடிலின் மேல்பாதியிலே இருக்கும் படிச்சொல்லி அமர்த்தினார் இளையாழ்வார்.
பெரியநம்பிகளும் அனுதினமும் திராவிடவேத பிரபந்தங்களையும், காலக்ஷேபங்களையும் இளையாழ்வாருக்கு அருளிச்செய்து அவரை ஸ்ரீவைஷ்ணவ தலைமைப் பொறுப்பிற்கு ஆக்க ஆளவந்தாரின் ஆணைப்படி செய்து வந்தார்.
பாகவத ஆசார்ய (குரு) அபசாரம்:
அப்படி இருக்க ஓர் நாள், தம் வீட்டிற்கு கைங்கர்யம் செய்ய வந்த ஒரு ஏழை ஸ்ரீவைஷ்ணவர் தனக்குப் பசி என்று இளையாழ்வாரைக்கேட்க,
நெஞ்சம் துவண்ட இளையாழ்வார் தன் மனையாளை அணுகி அவருக்கு அண்ணமிடச் சொன்னார்.
ஆனால் தஞ்சம்மாள், அவர்களுக்கு என்ன வேறு வேலை என்கிற பான்மையில், "ஒரு துளியும் இல்லை" என்றார்.
"பழையதாவது இருந்தால் கொடு" என்று சொன்னார் இளையாழ்வார்.
"அதுவும் இல்லை" சொன்னார் தஞ்சம்மாள்.
மனையாள் வேறு வேளையில் இருக்க,
ஐயம் மேலிட்ட இளையாழ்வார், தான் சென்று பார்க்கையில் பாத்திரம் நிறைய உணவு இருக்க,
உடன் அதை அந்த ஸ்ரீ வைஷ்ணவருக்கு வழங்கினார்.
தன் மனையாளிடம் கொடுக்க உணவு இருந்தும், கொடுக்க தேவையான மனமும், கருணையும் இல்லத்தைக் கண்டு அவரைக்கடிந்து கொண்டு தாமும் வருத்தம் உற்றார்.
"இனியாவது இப்படி இருக்காதே" என்று பலவாறாக எடுத்துச் சொன்னார். ஆனால் அவரோ தன்னுடைய வருண, குல ஆசாரங்களே பெரிது என்று வாழ்ந்து வந்தார்.
இப்படி இருக்க மற்றொரு நாள் இளையாழ்வார் வெளியே சென்றிருந்த சமயம்,
தஞ்சம்மாளும் ஆசார்யன் பெரியநம்பிகளின் திருத்தேவியாரும் கிணற்றிலே நீர் எடுக்க செல்லும் போது, பெரிய நம்பிகளின் தேவியாரின் குடத்து நீர் தஞ்சம்மாளின் குடத்தில் வீழ்ந்து விட்டது என்பதற்காகச் சிறு சச்சரவு மூண்டது.
ஆசார்யனின் மனைவி என்றும் பாராமல் பிறந்த குலத்தை காட்டித் தரக்குறைவாக அவரைப் பேசி விட்டார் தஞ்சம்மாள்.
அப்போது வீட்டில் இருந்த பெரிய நம்பிகளின் காதில் இது விழ, வீட்டிற்கு வந்த தன் மனைவியிடம் விவரம் அறிந்தார். தாம்இனியும் இங்கு இருப்பது உசிதம் அன்று, மேலும் இந்த விஷயம் இளையாழ்வாருக்குத் தெரிந்தால் அவர் மனம் மேலும் புண்படும் என்று உணர்ந்த பெரிய நம்பிகள், தன் மனைவியுடன் இளையாழ்வாரிடம் சொல்லாமலேயே ஸ்ரீரங்கம் சென்றுவிட்டார்.
இல்லம் வந்தார் இளையாழ்வார்,
பெரிய நம்பிகளையும் அவரது குடியிருப்பையும் காணாது திகைத்தார். பின் ஏதோ நடந்து உள்ளது அதனால் தான் அவர் தன்னிடம்கூட சொல்லாது அவர் சென்றிருக்க வேண்டும் என்று உணர்ந்து,
"ஐயோ என்ன அபசாரப்பட்டேனோ; சொல்லாமல் கூட சென்றுவிட்டாரே" என்று பதறிப்போய் தன் மனையாளிடம் கேட்க, அவர் நடந்தவிஷயங்களைச் சாதாரணமாகக் கூறினார்.
பரிதவித்த இளையாழ்வார், "கொடிது கொடிது, ஆசார்ய அபசாரம் மிகக் கொடிது. முன்னர் நீ திருக்கச்சி நம்பிகளிடமும், ஸ்ரீ வைஷ்ணவரிடமும் அபசாரப் பட்டாய்.
அன்று பாகவத அபசாரங்களுக்கு வித்திட்ட நீ, இன்று ஆசார்ய அபசாரத்திற்கும் வித்திட்டு விட்டாள்.
இனியும் உன்னுடன் வாழ்வது என்பது ஆகாது."
என்று கூறி அவரின் வாழுங்காலத்திற்கு ஏற்ற சொத்துக்களையும் கொடுத்து,
"இனி நீ உன் பிறந்தகத்திற்கு செல்" என்று கூறி அனுப்பி வைத்தார்.
வைராக்கியம் மேலிட்டு தன் ஸ்ரீவைஷ்ணவ இறைப்பணிக்குத் தடையாய் இருக்கும் இந்த இல்லறத்தை இனி துறந்து விட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கும் வந்தார் இளையாழ்வார்.
துறவு மேற்கொள்ளல்:
இளையாழ்வார் கிளம்பி நேரே தேவப்பெருமாளின் ஸந்நிதிக்கு சென்றார். ஆளவந்தாரை மனத்தில் இருத்தி, திருக்கச்சி நம்பிகளின் முன்னிட்டு, தனக்கு சந்நியாச ஆச்ரமத்தினை வழங்க தேவப்பெருமாளை ஆர்த்தியுடன் வேண்டினார்.
உடன் அனந்தஸரஸ் புஷ்கரணியில் நீராடி,
"தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்" என்கிற திருமங்கையாழ்வார் வாக்கின்படி நினைத்து,
"துறக்க வேண்டியவைகளைத் துறந்தேன், துறந்தேன் துறந்தேன்" என்று மும்முறைக் கூறி,
"தாசரதியைத் (முதலியாண்டானை) தவிர மற்ற யாவற்றையும் துறந்தேன்" என்று சூளுரைத்தார்.
காரணம் முதலியாண்டான் தன்னுடைய ஆத்ம பந்து (எம்பெருமானின் சொத்து) என்பதனாலும், மேலும் அவரின் கைங்கர்யங்கள் இந்த சம்பிரதாயத்திற்கு தேவை என்பதாலும் அவரை மட்டும் துறக்கவில்லை.
பின் நேரே தேவப்பெருமாளின் முன் நின்று,
"ஒருவர் சந்நியாச ஆச்ரமத்தினை மேற்கொள்ளும் போது மற்றொரு சந்நியாசி ஆசார்யனிடமிருந்தே அந்த ஆச்ரமத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது இங்கு யாரும் இல்லை, ஆகவே நீரே எனக்கு அந்த ஆசார்யனாக இருந்து சந்நியாசம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டினார் இளையாழ்வார்.
பெருமானும் உள்ளம் கனிந்து, அர்ச்சகர் மூலமாக காஷாயத்தையும் (காவி உடை), த்ரிதண்டமும் (முக்கோல்) கொடுத்து, "இவைகளை நீர் உள்ளவரையும் தரிக்கக் கடவீர்" என்று கொடுத்தார்.
அப்போது தான் "இராமானுச முனி" என்ற திருப்பெயரினை இளையாழ்வாருக்கு தேவப்பெருமாள் திருவாய் மலர்ந்து சூட்டி ஆசீர்வதித்தார்.
தேவாதிராஜனும் தன் எண்ணப்படி "இளையாழ்வாரை இராமானுச முனியாக மாற்றினார்." இனி நாமும் பெருமான் அருளிட்ட அந்த திருப்பெயரைக் கொண்டே அவரை அழைக்கும் பாக்கியம் பெறுவோம்.
உலகின் இருளைப்போக்கும் கதிரவன் எவ்வகையில் அது மலரும் வேளையில் புதுப்பொலிவுடன் ப்ரகாசிப்பானோ அவ்வகையில், இந்த சம்சார சாகரத்தின் ஆழ்ந்த இருளையே போக்கவந்த இராமானுசன் என்னும் கதிரவனின் திவ்விய திருமேனியின் ஒளி அப்போது ப்ரகாசமாய் மின்னியது.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கும், இந்த உலகிற்கும் அன்று முதல் இன்றுவரை இருள்போக்கும் கதிரவனாய்த் திகழ்ந்து கொண்டிருக்கும் இராமானுசரின் திருப்பணிகள் என்றும் தொடரும்.
(அடுத்து கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இராமானுசரை அடைந்த சரித்திரம்.)
இனி அமுதனார் இராமானுசரை போற்றிய அடுத்த இன்தமிழ் பாசுரத்தையும், அது தாங்கி வந்த பொருளை எளிய தமிழ் நடையிலும் காண்போம்.
பாசுரம்: 16
தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து * தலமுழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் * அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூட்டிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் * இராமானுசன் என்றும் மாமுனியே.
பொருள்:
இந்த மண்ணுலகில் பிறந்து, சர்வலோக நாயகனான பெரிய பெருமாளையே தனக்கு மணாளனாய் கொண்டவள் ஸ்ரீஆண்டாள். திருவரங்கத்தில் கண்வளரும் பெரிய பெருமாளுக்கு ஏற்ற தகுதி உடைய மலர் மாலையை ஆண்டாள் முதலில் தான் அணிந்து தேர்ந்தெடுத்து அதை அனுதினமும் அனுப்பி வைத்தாள். அப்பேர்பட்ட உயரிய அன்பும் காதலும் அரங்கன் மேல் கொண்டாள் ஸ்ரீஆண்டாள்.
"அத்தகைய ஆண்டாளின் கருணை மழையால் தன் வாழ்வை கொண்டவர் எம்பெருமானார் ஆவார்."
ஆண்டாள் அருளிய திருப்பாவை மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர் எம்பெருமானார் ஆகையினாலே "திருப்பாவை ஜீயர்" என்கிற திருப்பெயரும் அவருக்கு ஏற்படலாயிற்று.
அப்பேர்பட்ட புகழுக்குரிய எம்பெருமானார் கலியுகம் தன் ஆதிக்கத்தை செலுத்தும் காலத்திலே வந்து அவதரித்து, குறைகளே இல்லாமற் திகழும் வேதங்களை அறிவற்றவர்களிடமிருந்து காத்து, அவற்றை மேலும் பொலிவுபெறச் செய்தார். ஆகவே நீங்களும் அவரின் மேன்மையை உணர்ந்து அவரையே அடைவீர்!!
English Translation:
When the faultless Vedas became faulted and the whole world was ruled by kali alone, there came the benevolent Muni Ramanuja, who lived by the grace of Andal, the girl poet who wore on herself a garland and offered it to the Lord of Arangam, who in turn found it worthy of being wrapped on his crown.
ஸ்ரீஆண்டாள் திவ்விய திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
அமுதனார் திருவடிகளே சரணம்.
(ஆதாரம்: பூர்வாசார்யர்களான ஸ்வாமி மணவாளமாமுனிகள் உரை, ஸ்வாமி பிள்ளைலோகம் ஜீயர் உரை, ஸ்வாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் உரை மற்றும் ஸ்ரீதரன் ஸ்வாமி உரை.)
***எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு விசேஷங்கள் - மே 2017***-sundar sriram
No comments:
Post a Comment