மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம்
இந்திய வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்ட ராபர்ட் கிளைவ் முதல் எலிஹூ யேல் வரை பல பிரபலங்களின் திருமணம் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றது. கல்கத்தா நகரை நிர்மாணித்த ஜாப் சார்னாக்கின் மூன்று மகள்களுக்கு இங்கு தான் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. இப்படி ஆங்கிலேய வருகையின் ஆரம்ப நாட்களின் நினைவுகள் இந்த தேவாலயம் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. கோட்டைக்கு வெளியிலும் மெட்ராசின் 3 நூற்றாண்டு வரலாறு சாலையெங்கும் இறைந்து கிடக்கிறது.
மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கட்டடமும் ஒரு அருங்காட்சியகம்தான். ஐநா சபை சாயலில் கட்டப்பட்டு, இன்று எப்போது சாயும் எனத் தெரியாமல் நித்திய கண்டத்துடன் நின்று கொண்டிருக்கும் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம்தான், மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம் எனக் கருதப்படுகிறது. தனது ஆயுளுக்கே எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு ஆயுள் காப்பீட்டு கட்டடம் உலகிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கும்.
மவுண்ட் ரோடும், ஜெனரல் பேட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இந்த கட்டடம், ஸ்மித் (W.E. Smith) என்ற மருந்து வியாபாரியால் கட்டப்பட்டது. மெட்ராஸ் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு அருமையான கட்டடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஸ்மித்தின் கனவை நனவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. 1897ஆம் ஆண்டு இந்த கட்டடம் தொடங்கி வைக்கப்பட்டபோது அதன் பெயர் கார்டில் கட்டடம் (Kardyl Building).
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து ஸ்மித், இதனை ஸ்பென்சர் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். பின்னர், 1934இல் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஸ்பென்சர்சிடம் இருந்து இந்த கட்டடத்தை வாங்கியது. லாகூரைச் சேர்ந்த லாலா ஹரிகிஷன்லால் என்பவர்தான் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த கட்டடத்தை வாங்கிய இரண்டே ஆண்டுகளில் பாரத் நிறுவனம் ஹரிகிஷனிடம் இருந்து டால்மியாவின் கைக்கு மாறியது. இதனிடையே 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, நாட்டில் இருந்த பல காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் எல்ஐசி வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்படித்தான் எல்ஐசிக்கு சொந்தமானது இந்த கட்டடம்.
No comments:
Post a Comment