''தமிழக விவசாயிகள் சங்கம் மூத்த தலைவர்
உழவர் காவலர் டாக்டர்எம்.ஆர்.சிவசாமி மறைவு''
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகேயுள்ள மத்தம்பாளையம் என்ற ஊரில் பிறந்தவரான தமிழக விவசாயிகள் சங்கம் மூத்த தலைவர் உழவர் காவலர் டாக்டர்எம்.ஆர்.சிவசாமி அவர்கள் இன்று 14.8.2016மதியம் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இயற்கை எய்தி விட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
83 வயதுக்கு நிரம்பிய விவசாயிகளின் போராளியான அய்யாவின் உழைப்பே இன்றுவரை விவசாயிகள் பெற்று வரும் உரிமைக்கு காரணம் என்பதை நன்றியோடு நினைவு கூற விரும்புகிறேன்.
1970 ஆம் ஆண்டு தமிழக விவசாயிகள் சங்கம் தமிழகத்தில் வீறு கொண்டு எழுந்த போது நாடே ஸ்தம்பிக்கும் வகையில் பச்சைத் துண்டு அணிந்த விவசாயிகள் தங்களின் வாழ்வுரிமைக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி ஐயா தலைமையில் போராடி உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்கும் நிலையை உருவாக்கியவர் விவசாயிகள்போராட்டக்குழுவின் தலைவராக இருந்த டாக்டர்எம்.ஆர்.சிவசாமி அவர்களையே சாரும்.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மத்தம்பாளையம் என்ற ஊரில் பிறந்த சிவசாமி அவர்கள் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்றாலும் மிகப் பெரிய விவசாயியும் கூட.
எனவே தான் 60 ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவம் படித்தும் விவசாயத்தையே தன் உயிராகக் கருதி விவசாயத்தால் தொடர்ந்து பாதித்து வீழ்ச்சி கண்டே வந்த விவசாயிகளுக்காக தன் தோளில் பச்சைத்
துண்டைப் போட்டுக் கொண்டே இறுதிவரை உழைத்து இன்று மதியம் 2.00 மணிக்கு காலமாகி விட்டார்.
டாக்டர்எம்.ஆர்.சிவசாமி அவர்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தின்
பொதுச் செயலாளராகவும்,இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி ஐயா தலைமையில் பணியாற்றி விவசாயிகளின் போராட்ட வலிமையை உருவாக்கிக் கொடுத்தவர்.
அதோடு இந்தியா முழுவதும் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியவர்.
1984 இல் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் மண் வெட்டி சின்னத்தில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்.மேட்டுப்பாளையம் தொகுதியில் இரண்டு முறை தனித்து போட்டியிட்டு ஆளும்,ஆண்ட கட்சிகளைஅதிர வைத்து வாக்குகளை பெற்றார்.
1984 இல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி ஐயா மறைந்த பிறகுஇந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
1989 இல் அதிமுக ஜெ அணியில் 2 தொகுதிகளை செல்வி ஜெயலலிதா ஒதுக்க முன்வந்த போதும் தான் கேட்ட எண்ணிக்கையும்,தொகுதியும் தர மறுத்ததால் கூட்டணியில் இடம் பெற மாட்டேன் என்று போயஸ் கார்டனிலேயே தெரிவித்து விட்டு தன்மானத்தை மட்டுமே பெருமையாகக் கருதியவர்.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி ஐயாவோடு இரண்டாம் இடத்தில் இருந்த மாபெரும் தலைவர் -மூத்த தலைவர் டாக்டர்எம்.ஆர்.சிவசாமி அவர்கள் மட்டுமே.
83 ஆவது வயதில் கொண்ட கொள்கை மாறாமல்-பச்சை
துண்டை ஒரு போதும் விடாமலும் விவசாயிகளுக்காகவே வாழ்ந்து மறைந்த மாபெரும் தியாகி டாக்டர்எம்.ஆர்.சிவசாமி அவர்கள்.விவசாயிகளின் போராட்டம் அன்றைய ஆட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்த போது முதல்வராக இருந்த
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இவரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக செயல்பட்டும் முடியாத கோபத்தால் 20 ஏக்கரில் விளைந்து கிடந்த இவரது கரும்புத் தோட்டத்தையே முற்றிலும் அழித்தும்முடியவில்லை.
மாறு வேஷத்தில் நாடு முழுவதும் சுற்றி விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட செய்தார்.
அதன் பின்னர் அப்போதைய அன்னை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தமிழ்நாட்டில் எம்ஜிஆர்அரசு மூலம் கைது செய்யப்பட்ட முதல் தலைவரே இந்தியாவில் டாக்டர்எம்.ஆர்.சிவசாமி அவர்களும் நாராயணசாமி அய்யாவும் தான்.
ஐயா டாக்டர்எம்.ஆர்.சிவசாமி அவர்களின் மறைவு இந்திய நாட்டின் ஒட்டு மொத்த உழவர்களுக்கே பேரிழப்பாகும்.கடைசி காலம் வரை தன் சொந்தப் பணத்தையே செலவழித்து தன் சொத்துக்களை இழந்த தியாகி.
No comments:
Post a Comment