Sunday, August 14, 2016

சற்று வேதனைப்படுத்தியது

நேற்றைக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த நண்பர்கள் சந்திக்க வந்தனர். அவர்கள் சொன்ன செய்தி சற்று வேதனையைத் தந்தது. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவோடு தொடர்பில் இருந்தவன். என்னுடைய நூலுக்கும் அணிந்துரையை என்.டி.ஆர். வழங்கியுள்ளார்.  1996 ஜனவரி மாதம் என்.டி.ஆர். காலமானார். அதற்கு முன் அவர் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. அவருடைய துணைவியாராக லட்சுமி பார்வதி தனி இயக்கம் துவங்கி சில காலம் சச்சரவுகள் எழுந்தன. சென்னை தி.நகரில் பசுல்லா சாலையில் 8000 சதுர அடி கொண்ட வீட்டிலும் இப்போது லட்சுமி பார்வதி சொந்தம் கொண்டாடி வழக்குமன்றம் வரை சென்றுள்ளார். சந்திரபாபு நாயுடு தெலுங்குதேசம் கட்சியின் அலுவலமாக அதை மாற்ற திட்டமிட்டிருந்தார். 1982 வரை என்.டி.ஆர். அதிகமான நாட்களை இங்குதான் கழித்ததுண்டு. அவருடைய மூத்தப் புதல்வி லேகேஸ்வரி இங்கு வசித்து வந்தார். இக்கட்டிடம் உருக்குலைந்து இருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கின்றது. இந்த இல்லத்தில் என்.டி. ராமாராவ் எத்தனையோ நண்பர்களை அழைத்து விருந்தளித்துள்ளார். உபசரிப்பதில் அவர் ஓர் இலக்கணம். விடியற்காலை 3 மணிக்கே எழுந்து பூஜைகளை முடித்துவிட்டு 5 மணிக்கெல்லாம் காலை உணவை உண்பார். அவரிடமிருந்து காலை உணவிற்கு அழைக்கப்பட்டால், முடிந்தவரை 6 மணிக்குள் நெய் வடிய பொங்கலும், வடையும், இட்லி சாம்பாரும், கேசரியும், பெசரொட்டியும், பூரியும் தயாராக இருக்கும். அந்த விடியலில் அவர் அன்பால் உண்டே தீர வேண்டும். வேறு வழியில்லை.
லட்சுமி பார்வதி இப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்துள்ளார். எப்படிப் பாருங்கள். என்.டி.ஆர். என்ற ஆளுமையின் உழைப்பில் இடையில் வந்தவர்கள் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் உருவாக்குவதை அறிந்து வேதனைதான் அடையச் செய்கின்றது. அரசியல் மட்டுமல்ல எந்தத் துறையிலும் சிலர் புகுந்து பரமசிவனின் கழுத்தில் உள்ள பாம்பாக மாறிவிடுவதால், பல ரணங்கள், அபத்தங்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், சில நேரங்களில் அது சமுதாயத்தையே பாதித்துவிடுகிறது. உழைப்புகளும், தகுதிகளும் இல்லாமல்  திடீர் பிரவேசங்களாக உச்சத்துக்கு வருகின்றவர்களால் பல நெருக்கடிகளும், அவமானங்களும்தான் ஏற்படும். தமிழகத்தில் இருந்து சென்ற ராஜ்யசபா உறுப்பினர் சினிமா பாட்டைப் பாடுகிறார். சூடான தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்களை மாநிலங்களவையில் பேசாமல், வேடிக்கை வெட்டிப் பேச்சாக சபையின் கண்ணியத்தை பாழ்படுத்தியதெல்லாம் மறக்க முடியாது.  தமிழக சட்டமன்றமோ, ஆட்டபாட்டமாக, நடிகரின் கூத்தாக உள்ளது. இதற்கு காரணமென்ன? தகுதியானவர்கள், விவரமானவர்கள் இந்த அவைகளுக்கு செல்லாததுதான் காரணம். அரசியலில் திடீர் பிரவேசங்களால் ஆபத்துதான்.  என்.டி.ஆர். நம்பி ஒருவரை தன் வாழ்க்கையில் ஊடுருவ விட்டதால், பல காட்சிகள் அரங்கேறின. 

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".