Sunday, June 18, 2017

கர்நாடகம் ஓசூர் விமான நிலைய செயல்பாட்டை தடுக்கிறது.

பெங்களூரு பன்னாட்டு விமான நிலைய (BIAL) நிறுவனம் தமிழகத்தின் ஓசூரில் இயங்கும் விமான நிலையத்தை செயல்படாமல் இருக்க முட்டுக்கட்டை போடுகிறது. 

மத்திய விமான அமைச்சகத்துடன் இணைந்து ஓசூரில் மத்திய அரசின் ‘உதான் திட்டம்’ வாயிலாக குறைந்த விலை பிராந்திய தொடர்பாக அமையவுள்ள விமான நிலையம் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும். இதை தடுக்க வேண்டுமென்று கர்நாடகம் வரிந்து கட்டி செயல்படுகிறது. 

இவ்வாறு செய்வது தமிழக எல்லைப்புற மாவட்டமான ஓசூரை தொழில் ரீதியாக வளர்ச்சி அடைவதை தடுக்ககூடிய நிகழ்வாகும். ஏனெனில் பெங்களூரு விமான நிலையத்தை தவிர தமிழகப் பகுதிகளில் திருச்சி, கோவை, சென்னை ஆகிய விமான நிலையங்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் தள்ளியே உள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக துவங்கப்பட்ட திட்டமானது தற்போது திட்டமிட்டு கைவிடப்பட்ட சூழ்நிலையை உருவாக்க கர்நாடகம் அனைத்து பணிகளையும் செய்கிறது. ஆனால், தமிழக அரசோ தூங்குகிறது. ஓசூர் விமான நிலையத்தில் ஏர் பஸ் A - 320, போயிங் Boeing 737 ஆகியவை தரையிரங்கி செல்லக்கூடிய அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு அருகேயுள்ள மைசூரு ஹசன் போன்ற விமான நிலையங்களும் ஓசூர் விமான நிலையத்தை போன்றது தான். அந்த திட்டத்தை நிறுத்த கர்நாடகம் முயலாமல் தமிழகத்தின் 

ஓசூர் விமான நிலையத்தை தடுப்பது நியாயமற்ற செயலாகும். தமிழகமும் இதை கண்டு கொள்ளவில்லை. 

எந்த தமிழ் ஏடுகளோ, ஊடகங்கள் கூட இதை பற்றிய செய்திகளை கூட வெளியிடவில்லை. ஆனால்,  டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில ஏடு மட்டும் கடந்த 15/06/2017 அன்று இது குறித்தான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஏட்டின் பதிப்பும் கர்நாடகத்தில் இருக்கின்றது. 

ஏற்கனவே கர்நாடகம், மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே 4 மிகப்பெரிய அணைகளை கட்ட முடிவு செய்துள்ளது. காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு என்ற 

தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அதைப் போல ஓசூர் விமான நிலைய பிரச்சனையிலும் கர்நாடகம் சண்டித்தனம் செய்வது வேதனையாக உள்ளது. இந்த செய்தியை கூட தமிழகம் 
அறியவில்லை என்கிற வேதனையோடு இந்த பதிவை செய்கின்றேன். 

இப்படி ஒவ்வொரு தமிழக பிரச்சனைகளிலும் அக்கறையில்லாமல் இருக்கும் இந்த மண்ணில் இதை குறித்து வரிந்து வரிந்து சமூக வலைத்தளங்களில் தான் என்னை போன்றோர் எழுதி தொலைக்க வேண்டியுள்ளது. 

என்ன கருமாந்திரமோ? என்ன செய்ய?

தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் என்ன செய்கின்றார்கள்...
சமூக வலைத்தளத்தில் என்னுடைய பதிவுகளை எடுத்துக் கொண்டால் தமிழகப் பிரச்சனைகளை எழுதி எழுதி அலுப்பும் தட்டிவிட்டது. 

#ஓசூர்_விமான_நிலையம்
#தமிழக_உரிமைகள்
#கர்நாடகம்
#KSRadhakrishnanpostings
#KSrpostings
கே.எஸ் இராதாகிருஷ்ணன்
17-06-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...