காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததால் ஜுன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படுவதில்லை. இந்த சோகம் தற்போது 6வது ஆண்டாக தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் இதுதான் நிலைமை. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் கடும் பிரச்சனைகள். காவிரி டெல்டாவில் விவசாயிகள் இதற்காக போராடி வருகின்றனர்.
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஜுன் மாதத்தில் குறுவை சாகுபடி துவங்கும். இதற்காக மேட்டூர் அணையில் ஜுன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் என சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும்.
ஆனால், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக, கடந்த 4 ஆண்டுகளாக ஜுன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால், ஒரு முறை கூட மேட்டூர் அணை 100 அடியை எட்டவில்லை. ஆழ்துளைக் கிணறு வசதியுள்ள இடங்களில் மட்டும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். இதனால் சம்பா, குறுவை, தாளடி என முப்போகமும் பொய்த்துப் போனது. மழையை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், 200க்கும் மேற்பட்டோர் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டனர். மனமுடைந்து வயற்காட்டிலேயே உயிரை விட்டனர்.
இந்நிலையில், ஆறாவது ஆண்டாக, ஜுன் மாதத்தில் மேட்டூர் அணையை திறக்க முடியாத அவலம் நேர்ந்துள்ளது. அணையில் 90 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு திறப்பது சாத்தியம். ஆனால் தற்போது மேட்டூர் அணையில் 30 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. குடிநீருக்கு கூட குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தின் காவிரி நீரிப்பிடிப்பு பகுதிகளில் இப்போது தான் மழை தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர சில வாரங்கள் ஆகும். அந்த தண்ணீர் வந்து, அணை 90 அடியை எட்டினால் மட்டுமே திறக்கப்படும் என்பதால், இப்போதைக்கு அணையை திறக்க வாய்ப்பில்லை என்றே பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இந்த ஆண்டும் காவிரி டெல்டா குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ. 35 கோடி அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
#காவிரி_பிரச்சனை
#காவிரி
#மேட்டூர்_அணை
#குறுவை சாகுபடி
#விவசாயிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-06-2017
No comments:
Post a Comment