Monday, June 5, 2017

தெலுங்கு கங்கை - சென்னை

காவிரி சிக்கலைப் போல சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் வருவதும் கேள்விக்குறியாகியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் அனைத்தும் நீரின்றி வற்றிவிட்ட நிலையில் உள்ளது.
இந்த 4 ஏரிகளிலும் 11,057 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்கலாம். ஆனால், இன்றைய நிலவரப்படி 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்த தண்ணீரின் இருப்பு சுமார் 500 மில்லியன் கன அடி மட்டுமே. சென்னையின் ஒரு நாள் குடிநீர் தேவை மட்டும 850 மில்லியன் லிட்டர். ஆனால், ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கடுமையான தண்ணீர் பஞ்சம் சென்னைக்கு ஏற்படுமென்ற அச்சம் உள்ளது. சென்னை குடிநீருக்காக தமிழக முதல்வராக இருந்த மறைந்த எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த என்.டி.ஆரும் 18 நாளில் 1983ல் “தெலுங்கு கங்கை திட்டம்” என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் பழைய மூர் மார்க்கெட் அருகேயுள்ள திடலில் இதன் துவக்க விழாவும் விமரிசையாக நடந்தது.

இதன்படி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீசைலம் அணையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை புதிதாக கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வருவது தான் இத்திட்டம்.


இத்திட்டத்தின் படி மொத்தம் 406 கிமீ தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டு பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு செய்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் எப்போதும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. தெலுங்கு கங்கா திட்டத்தின் படி ஆண்டுக்கு 12 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3 டி.எம்.சியும், ஜுலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரம் தர வேண்டும்.

ஆனால், 2016 ஜனவரி மாதம் முதலே ஆந்திர அரசு கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிடவில்லை. இதை தமிழக அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஜுலை மாதமும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியது. 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்த திட்டத்திற்கு பராமரிப்பு கட்டணம் தராமல் நிலுவையில் இருப்பதால் உடனே தமிழக அரசு அதை செலுத்த வேண்டுமென்று கேட்டிருந்தார்.

ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் கடந்த 08.05.2017ல் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து இந்த பராமரிப்புச் செலவுகளை செலுத்துமாறு கேட்டனர். ஆனால், நிலைமை அப்படியே இருக்கின்றது. தெலுங்கு கங்கை தண்ணீர் சென்னைக்கு வருமா என்பது தான் இன்றைய கேள்விக்குறி? அப்படி வரவில்லையெனில் சென்னை குடிநீர் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

#தெலுங்கு_கங்கை
#Telugu_Ganga
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


05-06-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...