Tuesday, June 6, 2017

இரா. செழியன்

இரா. செழியன் மறைந்தார்... ஆழ்ந்த இரங்கல்...

இன்று (06/06/2017) மறைந்த திரு. இரா.செழியன் பேரறிஞர் அண்ணாவின் தளபதி. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர். மிகச்சிறந்த ஆளுமையான நாடாளுமன்றவாதி. 1981ல் இருந்து எனக்கு இவருடன் அறிமுகம் உண்டு. ஈழத்தமிழர் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்த போது ஈழப்போராளிகளை இவரிடம் அழைத்து சென்றது உண்டு. 1998 வரை இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைச்சர்கள் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலை வீட்டில் தன்னுடைய மைத்துனர் வழக்கறிஞர் குழந்தைவேலு குடும்பத்துடன் வசித்தார். அந்த வீட்டை கிறித்துவ போதகர் பால் தினகரனுக்கு விற்ற பிறகு அண்ணா நகருக்கு குடியேறினார். தற்போது அவர் வீட்டை கடந்து செல்லும் போது வாசலில் “JESUS CALLS” என்ற வார்த்தைகளை காண்கையில் அவரது நினைவே கண்முன் வந்து செல்கிறது. கிரீன்வேஸ் சாலையில் இருந்த போது வாரமொருமுறை அவரை சந்திப்பதுண்டு. டெல்லிக்கு செல்லும் போது அவர் அங்கு இருந்தால் சந்திக்காமல் திரும்புவதில்லை. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போது ஜனதா கட்சியின் எம்.பியான ஆந்திராவை சேர்ந்த பாபூல் ரெட்டி வீட்டில் தங்குவார். டெல்லியில் உள்ள அனைத்து தலைவர்களும் அவரிடம் சகோதரரை போல அன்புடன் பழகினர். முன்னாள் அமைச்சர் மது தன்டவதே இவரை “இரா” என்றே அழைப்பார். அவரோடு மதுலி மாயி, ஜோதிர்மயி பாஸ், பிலுமோடி, மினு மசானி, என்.ஜி.ரங்கா, குருபாதசாமி, தீபன் கோஷ் போன்றோர் மட்டுமின்றி ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா கிருபாளனி, இந்திரஜித் குப்தா ஆகியோர் மற்றும் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயும் நேசத்தோடு பழகினார். தனது இறுதி காலத்தில் சில ஆண்டுகள் முன்னாள் அமைச்சர் வேலூர் விஸ்வநாதன் அவர்களின் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தார். நான் நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளிலும், நூல் வெளியீட்டு விழாக்களிலும் பங்கேற்பார்.
நான் சந்திக்கும் போதெல்லாம், “உங்களுக்கான டர்ன்(Turn) இன்னும் வரவில்லையே. யார் யாரோ எம்.பிக்களாக இருக்கையில் உங்களின் முறை வராதது வருத்தமளிக்கிறது.” என ஆதங்கத்தோடு என்னிடம் பேசுவார். இதய சக்தியோடு பேசிய வார்த்தைகள் இன்றைக்கும் எனது செவியில் ஒலித்து கொண்டிருக்கிறது. 
இவரை நினைக்கும்போது, கூடவே நடிகை வைஜெயந்திமாலா பாலியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் கேலிக்குரியது; படித்தவர்கள் சிந்தித்து செயல்படுவார்கள் என்பது எவ்வளவு தூரம் நகைப்பிற்கிடமானது , படித்தவர்கள் அதிகம் நிரம்பிய தென் சென்னையில் இவர் தோற்றபோது அப்பட்டமாக தெரிந்தது.
       அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை கடுமையாய் எதிர்த்தார்.
(த்ரிஷா  என்று அடித்தால், ஆயிரம் படங்களை தரும் கூகிளில், இரா.செழியன் என்று தேடினால், ஒன்றும்  இல்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை பாருங்கள்..)

அற்புத மனிதர், நேர்மையாளர், உலக அரசியல், உலக வரலாறு, பூகோளம், என அனைத்து விசயங்களையும் அறிந்த நுண்மான் நுழைபுலம் கொண்டவர். அவரது இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் ஜனநாயகத்தை நேசிக்கும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனிப்பட்ட இழப்பு தான்.
#இரா_செழியன்
#era_cezhiyan

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-06-2017
  

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...